‘சக்ரா’ பட ரிலீசுக்கு தடையில்லை என கோர்ட் உத்தரவு..; உண்மை வெல்லும் என விஷால் கருத்து

ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘சக்ரா’.

இப்படம் நாளை பிப்ரவரி 19ல் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

‘சக்ரா’ படத்தின் கதையை இயக்குநர் ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரிப்பில் படம் வெளியிடுவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ளதால் ‘சக்ரா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என டிரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் வாதாடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் ஆனந்தன் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு தங்கள் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என விஷால் தரப்பில் வாதாடப்பட்டது.

மேலும்,அந்த கதையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்காத நிலையில் நாங்கள் தயாரித்துள்ளோம்.

இந்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.

இதனை கேட்ட நீதிபதி, டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் ஆனந்தன் போட்ட ஒப்பந்தத்தை அறிந்தே உள்நோக்கத்துடன் விஷால் படத்தை தயாரித்தாரா? என்பது மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் தான் உறுதி செய்ய முடியும்.

‘சக்ரா’ நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டால் தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினார்.

இந்த படம் வெளியான நாள் முதல் மார்ச் 5-ம் தேதி வரையிலான வசூல் குறித்து மார்ச் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் விஷால் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது…

“ஆமாம், எப்போதும் போல தடைகளை எதிர்கொண்டேன். எப்போதும் எனக்கு உண்மையாக தொழிலுக்கு உண்மையாக இருந்தேன்..

தடை இப்போது நீக்கப்பட்டது.. நாளை சக்ரா படம் உலக அளவில் வெளியிடப்படுகிறது.

பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் சக்ரா திரைப்படத்துக்கு சிறந்த நாளாக இருக்கும்.

தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, திரைப்படத்தில் பங்கேற்ற அனைவரின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் சரியான நேரத்தில் தடையை நீக்கி உத்தரவிட்ட மதிப்பிறக்குரிய உயர் நீதிமன்றத்துக்கு நன்றி.

உரிய கால அட்டவணையின்படி படத்தை வெளியிடுகிறோம். உண்மை வெல்லும்”

இவ்வாறு நடிகர் விஷால் தன் ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Vishal finds a solution for the smooth release of Chakra

Overall Rating : Not available

Latest Post