தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற
*தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி பேசும்போது,*
“கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எவ்வளவோ பேரை அவர் வளர்த்து விட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவர்கள் அவருடைய குணாதிசயங்களை பற்றி சொல்ல சொல்ல கேட்கவே மலைப்பாக இருக்கிறது.
வரலாற்றில் தான் இது போன்ற மக்கள் இருப்பார்கள் என படித்துள்ளோம். அப்படி உண்மையாகவே நம்முடன் வாழ்ந்த ஒருத்தர் கேப்டன் என நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
அவர் இருந்த தமிழ் சினிமாவில் நாமும் இருக்கிறோம் என்பதே ரொம்ப பெருமையாக இருக்கிறது. நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என அவர் வாழ்ந்து காட்டியது போல் இனிமேல் நாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் அவரை மனதில் நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
ஒரு மனிதன் முற்றிலும் அன்புடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் பணத்தின் மீது பெரிய ஆசை இல்லாமல் நல்லவனாகவே இருந்தால் இந்த சமுதாயம் மதிக்குமா என்றால் மதிக்காது என்று தான் கேள்விப்பட்டு உள்ளோம்.
ஆனால் அப்படி ஒருத்தர் இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை அவர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றுள்ளார்.
மறுபடியும் மனிதன் மீதும் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வருவது இதனால் தான். இப்படி வாழ்ந்தால் இப்படி மரியாதை கிடைக்கும் என எடுத்துக்காட்டி சென்றுள்ளார்.
கேப்டனின் நிர்வாக திறமை பற்றி நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். நாங்கள் எல்லாம் புதிதாக அனுபவம் இல்லாமல் வந்து ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தும் போதும் அதில் வருபவர்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது கேப்டனுடன் பயணித்தவர்கள் அவருடைய செயல்பாடுகள் குறித்து கூறும்போது அதை முன்னுதாரணமாக வைத்து இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து முயற்சி எடுத்து வருகிறோம். எங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கி வைத்து விட்டார் கேப்டன். அதை நாங்கள் சந்திப்பதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிகிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அன்பாக பேசுவதே அவருடைய ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். அவருடைய ஆசிர்வாதத்தால் நடிகர் சங்க கட்டடம் விரைவில் முடிய வேண்டும் என விரும்புகிறேன். அவரது நினைவுகளை இங்கே அமர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவர் இறந்த சமயத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவருமே கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் மிகப்பெரிய வருத்தம். அந்த வருத்தத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆற்றிக் கொள்கிறோம். எல்லோரும் சொன்னது போல கேப்டனின் இரண்டு பிள்ளைகளும் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறோம். மக்களுடைய ஆசிர்வாதம் உங்கள் இருவருக்குமே இருக்கும்” என்று கூறினார்.
*நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது,*
“1984ல் அண்ணன் ராதாரவியின் தந்தை எம்.ஆர் ராதா அவர்களின் சிலை திறப்பு விழா அவரது சொந்த ஊரில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற போது கேப்டன் உள்ளிட்டருடன் ஒரு சினிமா பட்டாளமே அங்கே சென்று கலந்து கொண்டோம். அந்த சமயத்தில் கலைஞர் வந்து செல்வதற்குள் மிகப்பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கொண்டு அனைத்தையும் சமாளித்து அந்த நிகழ்வை திறம்பட நடத்த உதவினார். போராளிக்கு மறைவு இல்லை என்று கலைஞர் சொல்வார். அதேபோலத்தான் நம் கேப்டன் பிரபாகரனுக்கும் மறைவு இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ஒரு முறை அவரது படப்பிடிப்பின் போது கர்நாடகா பகுதியில் சில நபர்கள் நடிகைகள் சிலரிடம் தவறாக நடக்க, அந்த படத்தில் துணை மேக்கப் மேனாக பணியாற்றிய சண்முகம் என்பவர் அவர்களை அடித்து விரட்டினார். அதன்பிறகு இன்னும் சிலர் கூடி மிகப்பெரிய பிரச்சனை ஆனபோது விஜயகாந்த் தலைமையில் படக்குழுவினர் களம் இறங்கி அவர்களை விரட்டி அடித்தனர். ஆனால் சண்முகம் காரணமாகத்தான் பிரச்சனை ஏற்பட்டது என அவரை அந்த படத்தில் இருந்து நீக்க சொன்னார் தயாரிப்பாளர். இந்த தகவல் விஜயகாந்த்திற்கு சென்றதும் நான் செய்ய வேண்டிய வேலையைத்தான் முதல் ஆளாக சண்முகம் செய்திருக்கிறார்.. அவர் நாளை இந்த படப்பிடிப்பில் இல்லை என்றால் நான் இந்த கலந்து கொள்ளப்போவது இல்லை என்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதன் பிறகு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் அமர்ந்திருந்த சண்முகத்தை அழைத்து வந்தனர். அப்படி எப்போதுமே தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்திற்காக விஜயகாந்த் குரல் கொடுத்திருக்கிறார். இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டது போல கேப்டனின் பெயரை நடிகர் சங்க வளாகத்திற்கு வைப்பது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் அனைவருடனும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம் என்று உறுதி அளிக்கிறேன்” என்றார்.
*நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது,*
“உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்தே கேப்டனுடன் நெருங்கி பழகி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவருக்காக ஒரு கதை தயார் செய்து அவரிடம் சொன்னபோது ராவுத்தரை போய் பார் என்றார். ராவுத்தருக்கும் கதை பிடித்து விட்டது. உங்களிடமும் கதை சொல்கிறேன் என்றபோது அதெல்லாம் வேண்டாம் உன்னுடைய வேலை, திறமையை நான் பார்த்திருக்கிறேன். போய் படத்திற்கான வேலைகளை ஆரம்பி என்று என்னை முதன்முதலாக இயக்குனராக மாற்றியவரே விஜயகாந்த் தான். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தொடங்க முடியவில்லை. பின்னர் அதே கதை தான் சூர்யா நடிக்க ஆதவன் என்கிற படமாக வெளியானது. கஜேந்திரா படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் கட்சி ஆரம்பித்த அந்த சமயத்தில் நானும் அவரது கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என கூறினேன். அப்போது அவர் நீ என்னுடைய கட்சியில் இணைந்து கொண்டால் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவாளர்கள் உன்னை அவர்களது படங்களில் நடிக்க அழைக்க மாட்டார்கள். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாய். உன் தொழிலை நீ கெடுத்துக் கொள்ளாதே” என்று அறிவுரை சொன்னார்” என்று கூறினார்.
Karthi emotional speech about Captain Vijayakanth