நடிகர்கள் : ராமகிருஷ்ணன், சௌந்தரராஜா, அமலாரோஸ், அருள்தாஸ், சார்லி மற்றும் பலர்.
இயக்கம் : விஜய்சங்கர்
இசை : ஈஎஸ் ராம்
ஒளிப்பதிவு அழகப்பன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு : செல்வகுமார்
கதைக்களம்…
சிறுவயது முதலே ராமகிருஷ்ணனும் சவுந்தரராஜனும் நண்பர்கள்.
சவுந்தரராஜன் ஒரு சிறந்த பாடகராக வளர வேண்டும் என நினைக்கிறார். அவருக்கான எல்லா உதவிகளையும் லாரி ஓட்டி சம்பாரித்து செய்துவருகிறார் ராமகிருஷ்ணன்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு பெண் (அமலாரோஸ்) பார்க்க செல்கிறார் சவுந்தரராஜன்.
ஆனால் பெண் வீட்டார் மறுக்கவே, சவுந்தரராஜன் வற்புறுத்தி சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைக்கிறார்.
ஒரு நாள் சவுந்தரராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத போது சூழ்நிலை காரணமாக ராமகிருஷ்ணன் வீட்டில் தங்க நேரிடுகிறது.
அப்போது வேலை காரணமாக ராமகிருஷ்ணன் வெளியில் செல்கிறார்.
அந்த சமயத்தில் சவுந்தரராஜன் அமலாரோஸை பயத்தினால் அறியாமல் தொடுகிறார்.
அதுமுதல் அவருக்குள் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அமலாரோஸ் கணவருக்கும் அவரின் நண்பருக்கும் நடுவில் சிக்கி தவிக்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது? நட்புக்குள் விரிசல் வந்ததா? கணவன் மனைவி உறவு என்ன ஆனது? என்பதை யாருடைய மனதை புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்சந்தர்.
கேரக்டர்கள்…
ராமகிருஷ்ணன் மிகவும் யதார்த்தமாக அப்பாவியாக வருகிறார். நண்பனை பிரிய முடியாமல் இவர் படும் வேதனைகள் உண்மையான நட்பை காட்டும்.
நண்பனின் மனைவியை தெரியாமல் தொட்டதால் படும் அவஸ்தை உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறார் சவுந்தரராஜன். அதுமுதல் இவர் ஒதுங்கி வேதனைப்படும் காட்சிகள் இவருக்கு பேர் வாங்கித் தரும்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிக்க தெரிந்த நடிகையாக கிடைத்திருக்கிறார் அமலாரோஸ். ஒரு முதிர்ச்சியான கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் என தட்டி செல்கிறார்.
கணவனுக்கும் அவரது நண்பனுக்கும் இடையில் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பை கண்களிலேயே காட்டுகிறார். அமலாரோஸ் அருமை.
இவர்களுடன் சார்லி, அருள்தாஸ் ஆகியோரும் கேரக்டர்களும் நிறைவு தரும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்களும் அதன் வரிகளும் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். இது போன்ற வரிகள் அடங்கிய பாடல்களை கேட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.
அதுவும் ஓடும் நீரில்… பாடல் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படத்தை நினைவு படுத்தும்.
அதுபோல் பெற்ற தாயினை, கடவுள் சேர்த்து வச்ச, வான் என்றும்.. பாடல்கள் நம்மை மெய் மறக்க செய்யும்.
பொதுவாக மனைவியை தாயின் மறு உருவம் என்று பலபேர் சொல்லி கேட்டிருப்போம்.
ஆனால் இதில் கணவனை அடுத்த தந்தையாக பாடியிருப்பார்கள்.
அழகப்பனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. அதை அருமையாக எடிட்டிங் செய்தவரை பாராட்டலாம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் கானும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.
ஆனால் சில காட்சிகளில் நாடகத்தன்மை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
நண்பனுக்காக பாதிரியாரிடம் அடி வாங்குவதும், கையில் நண்பனை தாங்குவது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
எல்லாம் காட்சிகளை சொல்லி வைத்தாற் போல இல்லாமல் ட்விஸ்ட் வைத்திருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒரு கனவு போல… ஒரு கவிதை போல ஒரு படம்