தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் சுரேஷ் ஜி இயக்கிய படம் தான் ‘எறும்பு’.
கதைக்களம்…
சார்லி – இவரது முதல் மனைவிக்கு மோனிகா மற்றும் சக்தி ரித்திக் என இரு குழந்தைகள். முதல் மனைவி இறந்து விடவே 2வதாக சூசன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.
தன் அம்மா மனைவி தன் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார் சார்லி.
பெரிதாக வருமான இல்லாத காரணத்தினால் கரும்பு வெட்டும் வேலைக்கும் செல்கிறார். இதனிடையில் எம் எஸ் பாஸ்கரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார்.
இதனால் எம்.எஸ். பாஸ்கர் கெடு விதிக்கிறார். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை கொடுக்காவிட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என மிரட்டுகிறார்.
இந்த சூழ்நிலையில் தன் மனைவி சூசனை அழைத்துக் கொண்டு கரும்பு வெட்டும் வேலைக்கு மூன்று வாரங்கள் வெளியூர் செல்கிறார் சார்லி.
அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சக்தி எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள தங்க மோதிரத்தை தொலைத்து விடுகின்றான்.
சித்திக்கு பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களது சித்தி வருவதற்குள் ஒரு புதிய தங்க மோதிரத்தை வாங்க நினைக்கின்றனர்.
தம்பிக்கு உதவ அக்காவும் முற்படுகிறார். அவர்கள் என்ன செய்தனர்? சித்தி வருவதற்குள் மோதிரத்தை வாங்கி விட்டார்களா? எப்படி வாங்கினார்கள்? கடனை எப்படி அடைத்தார்கள்? பணம் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
சார்லி மற்றும் சூசன் ஆகிய இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அனுபவ நடிப்பால் உணர்ந்து சிறப்பாகவே கொடுத்துள்ளனர்.
ஏழை வீட்டின் செல்வமே அவர்களின் குழந்தைகள் தான். அதை உணர்ந்து மோனிகா – சக்தி நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர். மேலும் தன் தம்பிக்கு உதவ மோனிகா எடுக்கும் ஒவ்வொன்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படி ஒரு அக்கா நமக்கு இருக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.
ஒருவரிடம் பணம் பெறும்போதே சார்லியிடம் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்க் வருகிறது.
எம் எஸ் பாஸ்கருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் பணம் கொடுத்தவரின் வேதனையை புரிய வைக்கிறார்.. பணம் வாங்கும்போது மட்டும் கெஞ்சி கேட்கும் மக்கள் பணத்தை தர மறுப்பது எந்த வீட்டில் நியாயம் என்ற வசனங்கள் பளிச்சிடுகிறது.
இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். ஒரு டம்மி செல்போனை வைத்துக் கொண்டு இவர் பேசும் காட்சிகள் சிரிப்பலை. மோனிகா – சக்திக்கு ஜார்ஜ் உதவும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கும்.
பாட்டி பறவை சுந்தரம்பாள், கங்கானியாக நடித்திருக்கும் ஜெகன் ஆகியோரும் நல்ல தேர்வு.
டெக்னீஷியன்கள்…
இசை அருண் ராஜ்.. பின்னணி செய்யும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன ஒரு கிராமத்து மண்வாசனைடன் தன் இசையை பகிர்ந்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு இயக்குனர் : கே எஸ் காளிதாஸ்.. காட்டு மன்னார் கோயிலின் அழகை கவிதையாக படம் பிடித்துள்ளார். முக்கியமாக படத்தில் காட்டப்படும் முயல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு தங்கத்தின் விலை மதிப்பற்றது என்பதை காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் சுரேஷ் ஜி.
அதேசமயம் இந்த படத்திற்கு எறும்பு என்று தலைப்பு வைத்ததை விட முயல் என வைத்து இருக்கலாம்.. முயல் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரை செய்துள்ளது எனலாம்.
ஆனால் எறும்பு என்பது சிறுக சிறுக சேமிக்கும் ஒரு உயிரினமாகும். மேலும் தன் சக்திக்கு மீறி 40 மடங்கு எடையை தூக்கும் வலிமை கொண்டது எறும்பு.
இந்த குழந்தைகள் தங்கள் சக்திக்கு மீறி செயையும் செயலை உணர்த்தவே எறும்பு என தலைப்பு வைத்திருக்கிறார்.
ஆக.. எறும்பு.. எளியவர்களின் ஏணி
erumbu movie review and rating in tamil