மேயாத மான் விமர்சனம்

மேயாத மான்  விமர்சனம்

நடிகர்கள் : வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா மற்றும் பலர்.
இயக்கம் : ரத்னகுமார்
இசை : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப்
ஒளிப்பதிவு: விது அய்யனா
படத்தொகுப்பு: சபீக் முகம்மது அலி
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : கார்த்திக் சுப்புராஜ்

கதைக்களம்…

படத்தின் நாயகன் வைபவ்வின் கேரக்டர் பெயர் முரளி. இவர் இதயம் பட முரளியைப் போல் நாயகி பிரியா பவானி சங்கரிடம் காதலை சொல்லாமல் இருக்கிறார்.

இதனால் இவரை இதயம் முரளி என்றே அழைக்கின்றனர்.

ஒரு நாள் பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற, இதனால் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் முரளி.

எனவே பிரியாவை சந்திக்கும் முரளியின் நண்பர்கள் வினோத் மற்றும் கிஷோர், அவரை காப்பாற்ற சொல்கின்றனர்.

அவரை போனில் அழைத்துப் பேசிய பவானி சங்கர், மனம் மாறினாரா? முரளி தற்கொலை முடிவை கைவிட்டாரா? அதன்பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

meiyadha maan

கேரக்டர்கள்..

படம் முழுக்க லோக்கல் பாஷை பேசி, காதல் தோல்வி இளைஞர்களை கவர்கிறார் வைபவ்.

பிரியா அம்மா… தம்பி நீங்க தண்ணிய வாய் வச்சித்தான் குடிப்பீங்களா? என்று கேட்பதற்கு, நீங்க எத வச்சி குடிப்பீங்க? என்ற அப்பாவியாக கேட்கும்போது தியேட்டரை அலற வைக்கிறார்.

ஹீரோயின் பெயர் மதுமிதாவை குறிப்பிட்டு, மது உடம்புக்கு நல்லதல்ல என்பார்.

இதுபோன்ற காமெடி விஷயங்களில் பிரியாவை மட்டுமல்ல ரசிகர்களையும் கவர்கிறார் வைபவ்.

தங்கை பாசம், நண்பர்கள், மேயாத மான் கச்சேரி என படம் முழுவதும் லூட்டி அடிக்கிறார்.

டிவியில் புகழ்பெற்ற பிரியா பவானி சங்கர் சினிமாவில் நல்ல கதைக்காக தயங்கிக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்த போலவே அவருக்கு மேயாத மான் ஒரு கவரிமானாக அமைந்துவிட்டது.

இனி சினிமாவிலும் அதிகமான வாய்ப்புகள் இவரைத் தேடி வரும். இந்த வருடம் பிரியாவுக்கும் மெர்சல் தீபாவளிதான்.

வைபவ்-வின் நண்பராகவும் அவரின் தங்கச்சியின் கணவராக வரும் வினோத் (விவேக் பிரசன்னா) ரசிக்க வைக்கிறார். இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர் படம் முழுவதும் வந்து நம்மை ஈர்க்கிறார்.

நாயகனின் தங்கையாக இந்துஜா. இவரும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்ன குமார் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

படத்தின் பாடல்கள் காட்சிக்கு ஏற்றவாறு இருந்தாலும், ஓவரா பாட்ட போட்டு போரடிக்க வைத்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். அதுவும் ஒரே மாதிரியான பாடல்கள்.

படத்தின் நீளத்தை குறைத்தால் இன்னும் சிறப்பாக இந்த மான் துள்ளி ஓடும்.

மேயாத மான்… ரசிகர் மனதில் துள்ளும் மான்

Comments are closed.