தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராகவா லாரன்ஸ் & எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
இதில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, பவா செல்லதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஃபைவ் ஸ்டார் கிரியேஷனுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தன் ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.
கதைக்களம்…
1973 – 1975 ஆகிய காலகட்டங்களில் கதை தொடங்கி நகர்கிறது.. தன் தந்தையின் ஆசைப்படி போலீசாக வேண்டும் என நினைக்கிறார் எஸ் ஜே சூர்யா. ஒரு கல்லூரி விழாவில் செய்யாத குற்றத்திற்காக 4 பேரை கொன்றதாக கைது செய்யப்படுகிறார் எஸ் ஜே சூர்யா.
இவரது போலீஸ் ஆசை குறித்து அறியும் உயரதிகாரி மதுரையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் (ஜிகர்தண்டா பேமஸ் லாரன்ஸ்) ஒருவனை நீ கொன்று விட்டால் அடுத்த நாளே உனக்கு போலீஸ் போஸ்டிங் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கிறார்.
பயந்த சுபாவம் கொண்ட எஸ் ஜே சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க அந்தக் கட்டத்தில் தான் லாரன்ஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர் விடுகிறது. நல்ல கதை வைத்துள்ள இயக்குனர் தன்னை அணுகலாம் என லாரன்ஸ் விளம்பரம் கொடுக்கிறார்.
எனவே தன்னை ஒரு சினிமா இயக்குனர் என கூறிக்கொண்டு தன் நண்பன் சத்யனுடன் மதுரைக்கு செல்கிறார் எஸ் ஜே சூர்யா.
அதன் பிறகு என்ன நடந்தது.? ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் சினிமாவில் நடிகர் ஆனாரா.? வெள்ளை ஹீரோக்கள் இருந்த காலத்தில் கருப்பு ஹீரோவுக்கு அறிமுகம் கிடைத்ததா? எஸ் ஜே சூர்யா யார் என்று தெரிந்து கொண்டாரா லாரன்ஸ்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
ஜிகர்தண்டா2 படத்தில் ஹீரோ யார்? வில்லன் யார்? என்று தெரியாத அளவிற்கு லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். ஒரு காட்சியில் இவர் ஸ்கோர் செய்தால் அடுத்த காட்சியில் அவர் ஸ்கோர் செய்கிறார்.
காந்த கண்கள்.. சுருளான தலைமுடி.. கறுப்பு தோல்.. வாட்டசாட்டமான தேகம் என தோற்றத்திலும் வெளுத்துக்கட்டி இருக்கிறார் லாரன்ஸ். சந்திரமுகி 2 படத்தில் கூட இப்படி ஒரு வேட்டையனை நாம் பார்க்கவில்லையே.. என்பதால் நம்மிடையே கூடுதல் கவனத்தை ஈர்க்கிறார்.. தன் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.
முதல் பாதி சினிமா ஷூட்டிங் என்று காட்சிகள் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சேட்டானியுடன் மோதல் மலைவாழ் மக்களுக்கான போராட்டம் என கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம்.
16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் 1970களில் நாம் பார்த்த ஹீரோக்களை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.. MGR காலத்து மீசை.. சோடாபுட்டி கண்ணாடி.. தொடை நடுங்கி.. பயத்தை வெளியே காட்டாத கம்பீரம் என கெத்து காட்டி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சஜயன். இவர் சமீபத்தில் வெளியான சித்தா என்ற படத்தில் சித்தார்த்தின் காதலியாக நடித்து நம் கவனத்தை ககவர்ந்திருந்தார். இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பேசும் பேச்சு கூட நம்மை ரசிக்க வைக்கிறது.
கர்ப்பிணியாக இருக்கும்போது முகபாவனை தோற்றம் என மாற்றிய நிமிஷா பிரசவித்த பின் முகப்பொலிவை கூட அழகாக காட்டியிருக்கிறார்.
இயக்குனர் பவா செல்லத்துரையின் அசிஸ்டன்ட் சத்யன்.. ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு அசிஸ்டெண்டாக மாறி அவர் செய்யும் காமெடி வேற லெவல்.. “உன்னால் லாரன்ஸை கொல்ல முடியாது.. 25 வருடங்கள் நீ சூட்டிங் எடுத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அவர் இறந்து விடுவார் என்று கூறும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது”
இவர்களுடன் இளவரசு, போலீஸ் அதிகாரி, சேட்டானி, தமிழக பெண் முதல்வர் உள்ளிட்ட பலரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர். அதிலும் அரசியல்வாதிகள் போடும் ஆட்டம் அப்போதே இருந்திருக்கிறது என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
1975-ல் தமிழகத்திற்கு ஆண் முதல்வர் தான் இருந்தார்.. ஆனால் பெண் முதல்வரை காட்டி இருப்பது ஏனோ.?
டெக்னீசியன்கள்…
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆல்ரெடி சூப்பர் ஹிட்.. ‘மாமதுரை வா மதனி..’ என்ற பாடல் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கிறது. மேலும் மற்ற பாடல்களும் 1970 காலகட்டத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது.
சந்தோஷ நாராயணனின் பின்னணி இசையும் நம்மை டைம் ட்ராவல் போல 1970களுக்கு கொண்டு செல்கிறது
இன்றைய கால பாடங்களை படம்பிடிப்பது எளிது.. ஆனால் 1970 காலகட்டங்களை கண்முன் நிறுத்துவது சவாலான விஷயம். அதை நிறைவாக கொடுத்திருக்கிறார் கலை இயக்குனர்.
எஸ் ஜே சூர்யா வின் கெட்டப் முதல் தியேட்டர்.. தியேட்டரில் ஸ்கிரீன்.. கார் என அனைத்தையும் அருமையாக கொடுத்திருக்கிறார்.
பேட்டை படத்திற்குப் பிறகு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை கார்த்திக் சுப்புராஜ்.. ஜகமே தந்திரம் படம் அவரை கைவிட்ட நிலையில் தன்னுடைய ராசியான ஜிகர்தண்டா படத்தின் மூலம் மீண்டும் அடுத்த வெற்றியை கொடுத்திருக்கிறார்.
கேங்ஸ்டர் மற்றும் காடுவளம் அதில் அரசியல் என அனைத்தையும் கலந்து தீபாவளிக்கு ஒரு பக்கா ட்ரீட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
அதிலும் யானையுடன் சேட்டானி மோதும் கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் குழந்தைகளை கைத்தட்ட (மிரள) வைக்கும்.
ஒரு மூன்று மணி நேரம் திரைப்படத்தால் 30 வருட அரசியல்வாதியின் வாழ்க்கையை காலி செய்ய முடியும் என்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. அதிலும் ஹாலிவுட் படங்களின் காட்சிகளை இணைத்து வித்தியாசமான விருந்தளித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Jigarthanda Double X movie review and rating in tamil