இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

இதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்.
இசை –கோவிந்த் வஸந்த்
ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு & சண்முக சுந்தரம்,
எடிட்டர் – கோவிந்தராஜ்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
மக்கள் தொடர்பாளர் – மௌனம் ரவி
வெளியீடு – 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் லலித்குமார்


கதைக்களம்…

விஜய்சேதுபதி கேரக்டர் பெயர் ராமசந்திரன் என்ற ராம். த்ரிஷாவின் கேரக்டர் ஜானகி தேவி என்ற ஜானு.

இவர்கள் இருவரும் கேரக்டர்களே வாழ்ந்து விட்டார்கள் என்பதால் கேரக்டர் பெயரிலேயே விமர்சனத்தை தொடங்குவோம்.

டிராவல் போட்டோகிராபர் ராம். ஊர் ஊராக சென்று தனக்கு பிடித்த காட்சிகளை படம் பிடிக்கிறார். இவருடன் சில மாணவிகளும் வருகிறார்கள்.

ஒரு நாள் தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று படம் பிடிக்கிறார்.

அப்போது, தான் 96ஆம் ஆண்டில் படித்த பள்ளிக்கும் செல்கிறார். (அதாவது கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளி அது). அங்கு அதே வாட்ச் மேன் ஜனகராஜையும் சந்திக்கிறார்.

ராமுக்கு பழைய நினைவுகள் வரவே, நண்பர்களுடன் அலைபேசியில் பேசுகிறார். எனவே ஒரு நாள் எல்லாரும் சந்திக்க நினைக்கின்றனர்.

அதன்படி சென்னையில் ஒருநாள் சந்திக்க ஏற்பாடு நடக்கிறது. எல்லாரும் அங்கே வருகிறார்கள்.

ராமுக்கு நெருக்கமான ஜானுவும் சிங்கப்பூரில் இருந்து வருகிறார். அந்த ஒரு நாளில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் காவியமே இந்த 96. அந்த காதலை இப்போது எப்படி கொண்டாடினார்கள்? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

போலீஸ், டாக்டர், தாதா, பொறுப்பற்ற மனிதர், குடிகாரர் என பல படங்களில் விஜய்சேதுபதியை பல கோணங்களில் பார்த்திருப்போம். இதில் 40 வயதில் ஒரு லவ்வர் பாயாக பார்க்க முடிகிறது.

20 வயதில் மட்டும்தான் காதல் இருக்குமா என்ன? 40 வயதில் காதல் எப்படி இருக்கும் என பாடமே நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி.

டேய் நீ ஆம்பள நாட்டுக்கட்ட என்றும் டேய் இன்னும் நீ கன்னி பையனா? என த்ரிஷா இவரிடம் கேட்கும்போது விஜய்சேதுபதி வெட்கப்படும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தளபதி படத்தில் இடம்பெற்ற யமுனை காற்றினிலே பாட்டை பாட சொல்லி த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி கேட்கும் ஒவ்வொரு காட்சியும் இறுதியாக த்ரிஷா பாடும் அந்த காட்சியும் கொள்ளை அழகு.

காதலி ஜானுக்காக ஏங்குவது, அவள் உபயோகித்த ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பாக எடுத்து வைத்திருப்பது என மனிதர் வேற லெவல்.

விஜய்சேதுபதியின் இதயதுடிப்பு சத்தம் லப் டப் லப் டப் என அடிக்கும்போது நம் ஹார்ட் பீட்டூம் நிச்சயம் எகிறும்.

22 வருடத்திற்கு தன் ஜானுவை சந்திக்கும்போது விஜய்சேதுபதி கொடுக்கும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷனையும் ப்ரேம் போட்டு வச்சிக்க தோனும். சபாஷ் சார்.

த்ரிஷாவை காட்டி விஜய்சேதியிடம் அவர் மாணவி வர்ஷா.. சார் அது உங்க ஒய்ப்..? என்று கேட்கும்போது விஜய்பேதுபதி காட்டும் முகபாவனை மெர்சல் பீலீங்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக கலக்கியிருப்பார் த்ரிஷா. இனி ஜானு கேரக்டரே நிலைத்து நிற்கும் என்ற லெவலில் அசத்தியிருக்கிறார்.

+2 பையன் ஹேர் ஸ்டைலில் தன்னுடைய பழைய ராமை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாகட்டும், 22 வருடத்திற்கு பிறகு ராமை தேடும் கண்களாகட்டும் த்ரிஷாவை மிஞ்ச ஆளில்லை.

ஒட்டுமொத்த காதலையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு த்ரிஷா வாரி வாரி வழங்கிய நடிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ராம் ரொம்ப நல்லவரு. எனக்கு தெரியும். ஆனா எப்படி பாத்துக்கிறது? என த்ரிஷா கலங்கும் காட்சியில் நிச்சயம் காதலர்கள் கலங்கித்தான் போவார்கள்.

காதலை சொல்ல ராம் கல்லூரிக்கு வந்த கதையை தெரிந்த நாளாகட்டும், தன் திருமணத்திற்கு வந்த செய்தியை தெரிந்த நிமிடங்களாகட்டும் என்னா ஒரு நடிப்பு த்ரிஷா. ஹேட்ஸ் ஆஃப்.

விஜய்சேதுபதியின் மனைவியாக நினைத்து த்ரிஷா காதலை சொல்லும் அந்த நிமிடங்கள் போதும் அவரின் நடிப்புக்கு.

இளவயது விஜய்சேதுதியாக ஆதித்யன் என்பவர் நடித்திருக்கிறார். இவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன். இளவயது த்ரிஷாவாக கௌரி என்பவர் நடித்திருக்கிறார்.

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா காதலைப் போல இவர்களின் காதலும் காவியம். நட்பா? காதலா என்ற தெரியாத இளவயதில் இவர்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு முகபாவனைகளும் நடிப்பில் உச்சம்.

ஜானு பள்ளிக்கு வராத நாட்களில் ராம் படும் பாடு நமக்கே படு அவஸ்தையாக இருக்கும். டேய் காதலை சொல்லுடா என நம்மையும் படாத பாடு படுத்தி லப் டப்பை எகிற செய்துவிடுகிறார்.

அதுபோல் இளவயது தேவதர்ஷினியாக நடித்திருக்கும் அந்த பெண்ணும் அருமையான தேர்வு. அசல் தேவதர்ஷினி போன்றே இருக்கிறார்.

ராமின் நண்பர்களாக வரும் அவர்களும் கச்சிதம். வாட்ச் மேன் ஜனகராஜ் சில காட்சிகளிலே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோவிந்த் வஸந்தாவின் இசையில் பாடல்கள் இதயத்தை வருடி செல்கிறது.

ஏற்கெனவே ”காதலே காதலே.. தனிப்பெருந் துணையே . “ பாடல் பலரின் ரிங் டோனாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில் தினம் ஒலிக்கிறது. (ஹி…ஹி.. என்னுடைய ஸ்டேட்டசும் அதான்)

வசந்த காலங்கள் கசந்து போனதே என்ற பாடல் வரிகள் பலரின் மனதை நிச்சயம் தொந்தரவு செய்யும்.

பாடல்களை தனியாக இல்லாமல் கதையோடு பயணம் செய்ய செய்தமைக்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காதல் ஓட்டத்திற்கு கை கொடுத்துள்ளது.

நாம் பல படங்களில் பார்த்த சென்னையை இதில் பார்க்காத சென்னையாக கொடுத்திருக்கிறார்கள்.

கேமராவை வைத்துக் கொண்டு விஜய்சேதுபதி சுற்றும் அந்த ஆரம்ப பாடல் காட்சிகள் அனைத்தும் அருமை. இனி எத்தனை பேர் இப்படி எல்லாம் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட போகிறார்களோ? தெரியவில்லை.

தேவையான கலை மற்றும் தேவையான காட்சிகள் என கலை இயக்குனரும் எடிட்டரும் பாராட்டை பெறுகிறார்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமாருக்கு இயக்கத்தில் இதுதான் முதல் படம்.

நிச்சயம் அவரும் காதல் வயப்பட்டு இருப்பாரோ? என நினைக்கத் தோன்றுகிறது. ரசிகர்கள் ரசிக்க ரசிக்க அவர் ரசித்துக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு பல மாணவர்கள் தாங்களும் ரீயுனியன் பார்ட்டி வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பள்ளி நாட்களில் ஜானு பாடும் ஒவ்வொரு பாட்டையும் தேர்ந்தெடுத்த டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரேம் குமார் பெயரை ஃபிரேம் போட்டு வைக்க இந்த படம் ஒன்று போதும். வாழ்த்துக்கள் ப்ரோ. இன்னும் தொடர வேண்டுகிறோம்.

விஜய்சேதுபதி, த்ரிஷா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க 96 படத்தை பரிந்துரை செய்யலாம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காதல் ஜோடிகளில் விஜய்சேதுபதி த்ரிஷா பெயர் நிச்சயம் இந்த 96 படம் மூலம் இடம்பெறும்.

எத்தனையோ படங்களுக்கு பார்ட் 1 பார்ட் 2 வருகிறது. இந்த 96 படத்துக்கும் அடுத்த பார்ட் எடுக்க வேண்டும் என பிரேம் குமாருக்கு ரசிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

96… இதயத் துடிப்பை எகிற செய்யும் காவியம்

Comments are closed.