தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குய்கோ – குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கமே… சடலம் கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரீசர் பாக்ஸில் (ஐஸ் பெட்டியில்) வைப்பது வழக்கம். இந்த ஐஸ் பெட்டியை வைத்து நம் இதயத்திற்கு ஐஸ் வைக்கும் திரைக்கதையை கொடுத்திருக்கிறார் பத்திரிக்கையாளரும் இயக்குனருமான அருள் செழியன். இவர் தான் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்களம்…
தமிழ்நாட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மலையப்பன் (யோகி பாபு) துபாயில் வேலை கிடைத்து அங்கு அரசர் குடும்பத்தில் விஸ்வாசியாக மாறி ஒட்டகம் மேய்ப்பவராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது தாய் இங்கு மரணம் அடையவே அவர் இந்தியாவுக்கு வர ஓரிரு நாட்கள் தாமதம் ஆகிறது. இந்த சூழ்நிலையில் யோகி பாபுவின் தாய் சடலத்தை பாதுகாக்க ஐஸ் பெட்டியை ஒரு கிராமத்திற்கு கொண்டு வருகின்றனர் இளவரசும் விதார்த்தும்.
ஒரு கட்டத்தில் யோகிபாபு வந்து விட அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது விதாரர்த்துக்கு. தன் தாய் குடியிருந்த ஐஸ் பெட்டியை தானே விலைக்கு வாங்கிக் கொள்கிறார் யோகி பாபு.
ஓரிரு தினங்களில் அந்த ஃப்ரீசர் பாக்ஸ் காணாமல் போகவே அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை கலகலப்புடன் சொல்லி இருக்கிறார் அருள் செழியன்.
கேரக்டர்ஸ்…
தன் அம்மா இறந்த பிறகு.. அம்மா குடியிருந்த கோயில் அந்த ஐஸ் பெட்டி என்பதால் அதனை விலைக்கு வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் யோகி பாபு. இப்படி அம்மா மீது பாசம் கொண்டவர் ஒரு காட்சியில் கூட அழவில்லை.
வேறு ஏதோ வீட்டு துக்கத்திற்கு வந்தது போல பல காட்சிகளில் காணப்படுகிறார். இதனால் நம்மால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.
நாயகி ஸ்ரீபிரியாவின் உதடு பேசும் வார்த்தைகளை விட அவரது உருண்ட கண்கள் நம் இதயங்களில் எதையோ உருட்டச் செய்கிறது. கண்ணழகி மீனாவைப் போல இவரின் கண்களும் நம்மை இம்சை செய்யும். காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த இடத்தில் நிறையவே ஸ்கோர் செய்து விடுகிறார் ஸ்ரீ பிரியங்கா.
மற்றொரு நாயகியாக யோகி பாபுவின் ஜோடியாக துர்கா.. முத்துமாரியாக ஒரு ஹிந்தி பாடல் பாணியில் யோகி பாபுவுடன் டூயட் பாடி செல்கிறார். கிளைமாக்ஸில் அவருக்கு மனைவியாகி மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
எப்போதும் படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பவர் விதார்த். இதிலும் பக்கத்து வீட்டு மனிதராக நம்மை கவர்ந்திருக்கிறார்.
வில்லத்தனம் எதுவும் செய்யாமல் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இளவரசு.. இயக்குனர் எப்படி எல்லாம் சமூகத்தை கலாய்க்க நினைத்தாரோ அதை இளவரசு கேரக்டரை வைத்து நிறைவேற்றி விட்டார்.
பெண்கள் பேசினால் அதில் உண்மை இருக்காது என்பதை வினோதினி கேரக்டரை வைத்து கலாய்த்து இருக்கிறார்.
போலீஸாக கருணாராஜன் நடித்திருக்கிறார். எதை சொல்வதாக இருந்தாலும் ஸ்டேஷனில் பேசிக் கொள்.. பொருள் காணாமல் போனாலும் தேடி பிடிக்க அபராதம்.. பொருளை அவர்களே தேடிக் கொண்டாலும் காவல்துறைக்கு கட்டணம் என்கிற ரீதியில் இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
டெக்னீசியன்ஸ்…
பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் வில்லனாகவே காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் (பண்பழகன் பைனான்ஸ் முத்துக்குமார்) பணம் கொடுக்கும் போது கடவுளாக தெரிவோம்.. அதன் பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் நம்மை காட்டேரியாக பார்ப்பார்கள் என்பதை போலவும் வசனங்கள் வைத்திருக்கிறார்.
நிச்சயம் அது உண்மைதான்.. உதவிக்கு / வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் தன் தேவை முடிந்த பிறகு அலைய விடுவது எல்லாம் விவஸ்தை கெட்ட செயல் என்பதை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் அருள் செழியன்.
ஆடு மேய்த்தவரை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளவில்லையா? என கிறிஸ்தவ மக்களையும் கிண்டல் அடித்திருக்கிறார்.
வேலு என்ற கேரக்டர் பெயரை இரு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அருள்செழியன். அதிலும் முக்கியமாக வடிவேலுக்கு என்னை கண்டால் ஆகாது.. அவன் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருப்பான் என யோகி பாபு வைத்து கிண்டல் அடித்திருக்கிறார்.
துக்க வீட்டிற்கு வரும் சிலரை வைத்து இவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் இருப்பவர்கள் இன்று ஒப்பாரி வைக்க வந்திருக்கிறார்கள்.. இதுதான் இவர்களது இன்றைய வேலை எனவும் நக்கல் அடித்து இருக்கிறார். அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்தால் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என யோகிபாபுவை வைத்து அதையும் கிண்டல் செய்து இருக்கிறார்.
கமர்ஷியல் இல்லாமல் சினிமாத்தனம் இல்லாத வகையில் யதார்த்த வாழ்வியலை கொடுத்திருக்கிறார்.
பாடலும் சரி பாடல் வரிகளும் சரி புரியும் படி எழுதி இருப்பது சிறப்புக்குரியது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு அருமை. நேர்த்தியான உழைப்பை கொடுத்திருக்கிறார்.
விஜய்சேதுபதி – யோகி பாபு இணைந்து நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர்தான் இந்தப்பட இயக்குனர் அருள் செழியன். அந்தப் படத்திலேயே சென்னையில் வாடகைக்கு வீடு தேடும்போது பல நையாண்டி வசனங்களை வைத்திருப்பார்.
இதில் அதைவிட 10 மடங்கு நையாண்டி வசனங்களை வைத்து ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ரசிக்க வைக்கிறார்.
திருடனே திருந்தினாலும் கூட போலீஸ் திருந்தாது என்பதை ஒரு பாடல் காட்சியில் கூட வைத்துள்ளார். கான்ஸ்டபிள் கனகா காதலையும் வச்சி செய்து இருக்கிறார்.
அரசியல்வாதிகள் கூட ஐந்து வருடத்தில் ஆட்சி முடித்துக் கொண்டு விடுவார்கள். ஆனால் போலீஸ் அராஜகம் என்றும் தீராது.. ஊழல்களின் ஊற்று அவர்கள் என்பதையும் ஊளையிட்டு சொல்லி இருக்கிறார்.
மாலை முரசு பேப்பர் காலையில் வரும் .. தினத்தந்தி மாலையில் வரும் என்றும் பத்திரிக்கையும் கிண்டல் அடித்திருக்கிறார்.
ஆக குய்கோ… ஐஸ் பெட்டியில் நைஸ் ஸ்டோரி
Kuiko movie review and rating in tamil