தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘சித்தா’.
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழாவில் ‘சித்தா’ குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது இயக்குநர் அருண்குமார் பேசுகையில்…
“இந்த படத்தை எடுத்து செய்வதற்கு நானும் சித்தார்த்தும் ஒரு நாள் கூட யோசித்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இதில் வேலை பார்த்துள்ளோம்.
என்னை நம்பி வேலை பார்த்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கமர்சியலாகவும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் வரும் என காத்திருக்கிறேன். இந்தப் பொறுப்போடு இனி வரும் படங்கள் செய்வோம்”.
நடிகர் சித்தார்த் பேசுகையில்…
“இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை.
நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது.
நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம். அடுத்து ஒரு மிகப்பெரிய படம் வரப்போகிறது. அதுவரை இந்தப் படத்தை எத்தனை பேரிடம் சென்று சேர்க்க முடியுமோ கொண்டு போங்கள். இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம்தான்.
மணி ரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினி சாரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது.
பழனி என்ற ஊரும் அந்த முருகனும் எங்கள் படக்குழுவை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கும் அங்குள்ள புது இடங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சி.
படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ’அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணி சார் பாராட்டினார்.
உனக்குதான் பாடல் மறக்கமுடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி. 99% படங்கள் ஆண்களுக்காகதான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை.
மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி சார் இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார்.
பாய்ஸ் படத்தில் முன்னா என்ற கேரக்டரில் நடித்தேன். 20 வருடங்களை சினிமாவில் கடந்து விட்டேன்.. தற்போது ‘சித்தா’ மூலம் மீண்டும் எனக்கு பெயர் கிடைத்துள்ளது
ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். அஞ்சலி நாயர் படம் ஆரம்பிக்கும் போது கர்ப்பமாகிவிட்டார். எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் அது. படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி!” என்றார்.
Siddharth talks Kamal and Rajini at Chithha success meet