பவர் பாண்டி விமர்சனம்

பவர் பாண்டி விமர்சனம்

நடிகர்கள் : ராஜ்கிரண், தனுஷ், பிரசன்னா, ரேவதி, சாயாசிங், மடோனா, ஆடுகளம் நரேன், (கௌரவ தோற்றத்தில் டிடி, ஸ்டண்ட் சில்வா பாலாஜிமோகன், கௌதம் மேனன், ரோபா சங்கர்) மற்றும் பலர்.
இயக்கம் : தனுஷ்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவாளர் : வேல்ராஜ்
எடிட்டர்: பிரசன்னா
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு : தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ்
power paandi 2

கதைக்களம்…

மனைவியை இழந்த பவர் பாண்டி ராஜ்கிரனுக்கு ஒரே மகன் பிரசன்னா. ராஜ்கிரணின் மருமகள் சாயா சிங். அவருக்கு ஒரு பேரன் ஒரு பேத்தி.

சினிமாவில் பைட் மாஸ்டராக பணி புரிந்த பாண்டி, 64 வயதில் தன் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறார்.

தவறுகள் எங்கு நடந்தாலும் இவர் தட்டி கேட்பதால், அந்த பகுதி வில்லன் (சென்ட்ராயனிடம்) சிறுசிறு மோதல்கள் வருகிறது.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு அடிக்கடி செல்லும் பிரசன்னா, ஒரு சூழ்நிலையில் தன் தந்தையை ஓவரா திட்டி விடுகிறார்.

இதற்கு மேல் தனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என புறப்படும் ராஜ்கிரண், தன் முன்னாள் காதலியை தேடி செல்கிறார்.

அதன்பின் என்ன ஆனது? காதலியை கண்டு பிடித்தாரா? அவர் யார்? எங்கு இருக்கிறார்? மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பதுதான் கதை.

power paandi 5

கதாபாத்திரங்கள்…

தன் உடலுக்கும் வயதுக்கும் ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து கெத்து காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.

வயதான கேரக்டர் என்றாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை வசியம் செய்து விடுகிறார்.

முன்னாள் காதலியை கண்டுபிடித்த பின், அவள் தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கிறாளா? என்று கேட்டுவிட்டு, அதற்காக காத்திருக்கும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்.

பைட், ரொமான்ஸ், பாசம், அன்பு என நவரசம் காட்டி நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.

ஐடி ஊழியராக பிரசன்னா. நாட்டில் எது நடந்தாலும் நமக்கென்ன? என இருக்கும் ஒரு சராசரி மகனாக வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா.

ஒரு காட்சியில் அம்மாவின் போனை கட் செய்யும் நண்பரை பார்த்து, அம்மாதானே அப்பாதானே என அலட்சியம் செய்யாதீங்க. அவங்க நம்மள பத்தி ரெண்டு நிமிஷம் விசாரிக்க போறாங்க. அதை பேசுங்க என சொல்லும்போது பிஸியான மனிதர்களின் கன்னத்தில் அறைவது போல இருக்கும்.

power paandi 4

மாமனாரை மதிக்கும் நல்ல அமைதியான மருமகளாக சாயாசிங். குழந்தைகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தாத்தாவிடம் கொடுத்து விட்டு செல்லும் பெற்றோரை நினைவுப் படுத்துகிறார்.

தனுஷ் உடன் காதல் வயப்படுவதும், காதலை சொல்வதும், பிரிந்து செல்வதும் என காதலை உணர்ந்து நடித்திருக்கிறார் மடோனா.

பழைய காதலனை கண்டதும் வயதுக்கேற்ற போல், காதலை நாகரீமாக மறைத்து தான் அனுபவமிக்க நடிகை என்று நிரூபிக்கிறார் ரேவதி.

உன்ன நினைச்சேன், நினைக்கிறேன். நினைச்சிட்டு இருப்பேன் காதலை சொன்னாலும் குடும்பத்தின் உறவுக்காக தயங்கி நிற்கும்போது ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் சின்ன குழந்தைகள், ஆடுகளம் நரேன், வித்யூலேகா, சென்ட்ராயன், டிடி ஆகியோரும் தங்களின் சிறுபணியை சிறப்பாக செய்துள்ளனர்.

power paandi 6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒவ்வொரு கேரக்டரின் உணர்வுகளுக்கும் தன் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.

பாடல்களையும் பின்னணி இசையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

இவரும் தனுஷ்ம் பெரும்பாலான பாடல்கள் பாடியுள்ளனர்.

இளவயது கேரக்டர் தனுஷ் என்பதால் பாடலுக்கு குரல் ஓகே. ஆனால் சில பின்னணி இசையின் போதும் ஹம்மிங் கொடுக்க வேண்டுமா சார்..?

வேல்ராஜின் ஒளிப்பதிவில் நம்மை மறந்து காட்சிகளை ரசிக்க முடிகிறது.

வசனங்கள் படத்திற்கு பெரும் சேர்க்கிறது. ‘காதலிச்ச பொண்ணோ கடவுள் கொடுத்த பொண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான் ” என்று வந்து செல்லும் கேரக்டர்களின் வசனங்களும் மனதில் நிற்கிறது.

power paandi 3

இயக்குனர் நடிகர் தனுஷ் பற்றி…

ப்ளாஷ்பேக் காட்சியில் பாண்டியாக தனுஷ். ஆட்டம் இனிமே தான் ஆரம்பம் என அசால்ட்டாக களம் இறங்கி கிராமத்து மொழியில் நம்மை கவர்கிறார் தனுஷ்.

தன் படம், தான் ஹீரோ என்றெல்லாம் இல்லாமல் ரசிகனுக்கு எது தேவையோ அதை மிக அழகாக செய்துள்ளார்.

காதலியை தேடிச் செல்லும்போது, ஒரே நிமிடத்தில் காதலியை கண்டுபிடிப்பது, போன் இல்லை என்று சொல்லும்போது லாஜிக் மீறல்.

வீட்டை விட்டு ஓடிச்செல்லும்போது, பேங்கில் எடுத்த பணத்தில் போன் வாங்கலாமே?

தாத்தா, அப்பா எல்லாரையும் குழந்தைகள் ஒருமையில் வா போ என்றே அழைக்கின்றனர். அது கூட பாசம் என்றாலும், பக்கத்து வீட்டு இளைஞனை வாடா போடா என்று கூப்பிடுவது ரொம்ப ஓவர்.

ஆக மொத்தம் தமிழ் புத்தாண்டு நாளில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையான ஒரு டைரக்டர் கிடைத்துவிட்டார்.

பவர் பாண்டி … தனுஷின் ரியல் பவர்

Comments are closed.