தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
டைம் ட்ராவல் டைம் லுப் உள்ளிட்ட பல படங்களின் கலவைதான் இந்த ‘அடியே’
டைம் ட்ராவல் கதைகளில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்ல முடியும். ஆனால் இதில் ALTERNATE REALITY & UNIVERSAL PARALLEL என்பதையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
அதாவது அந்நியன் படத்தில்.. “அம்பியாக இருக்கும் விக்ரம் திடீரென ரெமோவாக மாறி இருப்பார். ஆனால் மற்றவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். ஆனால் இந்த கதையை பொருத்தவரை ட்டைம் டிராவல் போல கடந்த காலத்திற்கு செல்லும் நாயகன் மட்டுமல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட சில நபர்களும் செல்கின்றனர்.
மேலும் 12B படத்தில் வருவது போல பஸ்ஸை பிடித்து ஏறி இருந்தால் ஒரு கதை. பஸ்ஸை தவறவிட்டால் மற்றொரு கதை. ரியாலிட்டியை மீறிய மற்றொரு ரியாலிட்டி தான் ஆல்டர்னேட் ரியாலிட்டி.
கதைக்களம்…
பள்ளி பருவத்திலேயே தன்னுடைய பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்தவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் நண்பர்கள் உதவியால் படித்தாலும் வாழ்க்கையின் விரக்தித்தின் காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அப்போது தனக்கு பிடித்தமான பெண் பாடகி கௌரி டிவியில் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் எனக்கு ஒரு முதல் ரசிகன் இருக்கிறார் அவரை நான் காதலிக்கிறேன் அவரை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.
இதனை கேட்ட ஜிவி பிரகாஷ் கௌரியை சந்திக்க நினைக்கிறார்.. “நான் தான் உங்களது முதல் ரசிகன்” என சொல்ல முயற்சித்து செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். காலை எழுந்ததும் வேறு உலகத்தில் இருக்கிறார்.
அதில் மனைவியாக கௌரி வருகிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என புரியாமல் தவிக்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் தன்னுடைய பழைய உலகத்திற்கே வந்து விடுகிறார். இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.?
கேரக்டர்கள்…
தாடி வைத்த கல்லூரி இளைஞனாக ஜிவி பிரகாஷ். அதே சமயம் தாடி மீசை இல்லாத பள்ளி மாணவன்.. என இரண்டு இரண்டு தோற்றங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார்.
வேறு உலகத்திற்கு சென்றவுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் இவரது முகத்தை அடிக்கடி க்ளோசப் சாட்டில் காட்டிக் கொண்டிருப்பது போர்.
பள்ளி மாணவி – பாடகி – மனைவி என ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்ப அழகும் குறும்புத்தனமும் கலந்து கொடுத்திருக்கிறார் நாயகி கௌரி.
நாயகன் ஜிவி பிரகாஷிடம் இவர் என்னை பிடிக்கவில்லையா? என்று கேட்கும் அழும் காட்சிகளில் கண் கலங்க வைத்து அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் செந்தாழினியான கௌரி.
ஆர் ஜே விஜய் வழக்கம் போல சீரியஸான படங்களுக்கு கலகலப்பு ஊட்டி செல்கிறார். இவரது கேரக்டர் பெயரே ரசிக்க வைக்கிறது அதை வைத்தும் காமெடி செய்து இருக்கிறார்.
மற்றொரு உலகத்தில் கெளதம் மேனனாக வெங்கட் பிரபு, தன்னை தானே நக்கல் அடித்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார்.
டெக்னீசியன்கள்…
இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் கோச்.. பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக.. கூல் சுரேஷ் ஊமையாக அதுவும் தனுஷ் ரசிகராக.., ஹுண்டாய் நிறுவனம் பேஸ்ட், பிரதமராக விஜயகாந்த் என ALTERNATIVE REALITY கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
ஒரு சிலருக்கு கேரக்டர்கள் பெயரை மாற்றிய இயக்குனர் செந்தாழினி என்ற கேரக்டர் பெயரை மட்டும் எல்லா உலகத்திற்கு ஒரே மாதிரி காட்டி இருப்பது ஏன்? அது போல அவரது செல்போன் நம்பரும் மாறாமல் இருப்பதன் அவசியம் என்ன.?
கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கவிதையாகவே பாடலை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
அறிவியல் காதல் இரண்டையும் கலந்து வித்தியாசமான கோணத்தில் கதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு 30 நிமிடங்கள் குழப்பமான திரைக்கதையை கொடுத்துள்ளது.
அதை எல்லாம் கிளைமாக்ஸ் காட்சிகளில் விளக்கம் கொடுத்து நிவர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.
ஆக இந்த அடியே… அறிவியல் காதல்
Adiyae movie review and rating in tamil