தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
பாரதிராஜாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள்.. அதில் ஒரு மகன் வக்கீல் கௌதம் மேனன் மட்டும் தமிழ்நாட்டில் தந்தையுடன் வசிக்கிறார். பணம் கொடுத்தால் எந்த குற்றவாளியையும் வழக்கில் இருந்து விடுவிக்கும் நபர் இவர். இதனால் தந்தை மகன் இருவரும் பத்து வருடங்களாக பேசிக் கொள்வதில்லை.
ஒரு கட்டத்தில் தங்கள் தந்தையின் 75வது பிறந்த நாளை கொண்டாட வாரிசுகள் முடிவு செய்கின்றனர். ஆனால் பிறந்தநாள் விழாவில் பாரதிராஜாவை தவிர வாரிசுகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
அந்த சமயம் பார்த்து 13 வருடங்களாக கிடைக்காமல் இருந்த ஒரு கடிதம் பாரதிராஜாவின் கைக்கு வந்து சேருகிறது. அதனை எடுத்துக் கொண்டு தன்னால் பாதிக்கப்பட்ட தன் முன்னாள் காதலியை தேடி செல்கிறார் பாரதிராஜா.
இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. தனக்குப் பிறக்காத மகள் சாரலை தேடி செல்கிறார் யோகி பாபு.
வேலையில்லாத மஹானாவுக்கு உதவுகிறார் யோகி பாபு. அப்போதுதான் மகானா கர்ப்பம் என்பதை அறிகிறார். மகானாவுக்கு பிறந்த பெண் குழந்தையை தன் பிள்ளை போல வளர்க்கிறார் யோகி பாபு .
இந்த நிலையில் பாரதிராஜாவும் யோகிபாபுவும் ஒரு பேருந்து பயணத்தில் சந்திக்க மீதிக்கதை தொடர்கிறது..
கேரக்டர்கள்…
பரோட்டா மாஸ்டராக காமெடி செய்யும் யோகி பாபு தன்னுடைய மகளுக்காக உருகும் காட்சிகளில் பரோட்டா மாவை போல நம் மனதை பிசைந்து விடுகிறார்.
முழுமையான ஆதாரம் இல்லாததால் தவறான தீர்ப்பை எழுதி விட்டதாக உருகும் பாரதிராஜா ஒரு கட்டத்தில் தன் காதலியை தேடிச் செல்லும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.
தனக்கு பிறந்த மகளை பார்த்து பின்சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஏங்கும் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.
தன் தந்தை பாரதிராஜா தான் என்று தெரிந்த பின்னாலும் தந்தை செய்த துரோகத்திற்காக அதிதி பாலன் அதட்டும் காட்சிகள் பெண்களுக்கே உரித்தான மன அழுத்தத்தை காட்டுகிறது.
விடுதி சிறுமிகளிடம் கூட அதிதி பாலன் எரிந்து விழும் காட்சிகள் நமக்கு கடுப்பை வரவழைக்கிறது. ஆனால் அதற்குப்பின் காட்டப்படும் பிளாஷ்பேக் காட்சிகள் அதிதிபாலனின் எரிச்சலை புரிய வைக்கிறது.
கணவனால் கைவிடப்பட்ட மஹானா தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தாலியை கழட்டி வீசும் காட்சிகளில் வீரபெண்ணாக உணர வைக்கிறார்.
பாரதிராஜாவின் நண்பனாக வரும் எஸ்.ஏ சந்திரசேகர் கொஞ்ச நேரமே என்றாலும் நட்புக்கு தோள் கொடுத்து இருக்கிறார். சிறுமி சாரல் தன் வயதை மீறிய நடிப்பை கொடுத்துள்ளார்.
குற்றவாளிக்காக வாதாடும் வக்கீலாக கௌதம் மேனன். இவர் தந்தை பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் வார்த்தைகளில் உள்ள வலு நடிப்பில் இல்லை.
டெக்னீசியன்கள்…
ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை அழகு ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு உயிரோட்ட உணர்வை கொடுத்துள்ளன.
ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து கிடக்கும் இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் உறவுகளுக்கு உணர்வு கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.
நாகரீகம் நம் நடுவே ஸ்டைலாக அமர்ந்து கொண்டாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தந்தை – மகன்.. / தந்தை – மகள் /கணவன் – மனைவி உறவுகள் உன்னதமானவை என்பதை கண்ணீரோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.
யோகிபாபுவின் காட்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் கௌதம் காட்சிகளுக்கு இல்லை என்றே சொல்லலாம். வக்கீல் என்ற அதிகாரத்தில் இருப்பதாலோ என்னவோ தன் தந்தையைத் தேடிச் செல்லும் காட்சிகளில் கூட கௌதம் மேனன் பணிவை காட்டவில்லை. எனவே அது ரசிகர்கள் மனதில் கொஞ்சம் கூட ஒன்றவில்லை.
ஆக கருமேகங்கள் கலைகின்றன.. உறவுகள் உடைகின்றன.
Karumegangal Kalaigindrana movie review and rating in tamil