தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
1975 – 1995 இந்த 20 வருட இடைவெளியில் நடக்கும் டைம் ட்ராவல் டெலிபோன் கதை இது. இதில் கேங்ஸ்டர் அவரது மகன்கள் என கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். கேங்ஸ்டர், ஃபேன்டஸி, காமெடி என எல்லா ஜானரில் மார்க் ஆண்டனி்.
கதைக்களம்…
1995.. செல்வராகவன் ஒரு டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு மட்டும் செல்ல முடியும். கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தான் போன் அழைக்க முடியும் உள்ளிட்ட 5 நிபந்தனைகள் உள்ளன.
1995 ஆண்டில்… விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் நண்பர்கள். எஸ் ஜே சூர்யா-வின் அப்பா எஸ் ஜே சூர்யா தான். இவர்கள் டான் பேஃமிலி. விஷால் ஒரு கார் மெக்கானிக். வன்முறையை விரும்பாதவர்.
தன் ஒரிஜினல் மகனை விட விஷால் மீது தான் அன்பை பொழிகிறார் சூர்யா.. உன் உயிருக்கு ஆபத்து. உன் தந்தையை கொன்ற சுனில் என்னையும் கொல்வான் உன்னையும் கொல்வான் என பாதுகாத்து வளர்த்து வருகிறார். தந்தை பெயரை கேட்டாலே கடுகடுப்பாகிறார் விஷால்.
இதனால் அவருக்கு காதலில் கூட சிக்கல் வருகிறது. ஒரு கட்டத்தில் குடிபோதையில் தனக்கு கிடைத்த டைம் டிராவல் டெலிபோனை வைத்து போன் செய்கிறார் விஷால். ஒரு கட்டத்தில் இதனை வைத்து தன் தந்தையுடன் பேச முயல்கிறார் விஷால்.
இப்படியாக செல்லும் போது தன் தந்தை நல்லவன் என்பதை அறிகிறார். அப்படி என்றால் தன் தந்தையை உயிருடன் மீட்க போராடுகிறார் விஷால்.
இதனையறிந்த அப்பா எஸ் ஜே சூர்யா தடுக்கிறார். உன் தந்தை வந்தால் எனக்கு பிரச்சனை என்கிறார். அப்படி என்றால் 1975-இல் என்ன நடந்தது? டைம் டிராவல் மூலம் பின்னோக்கி சென்றார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மார்க் ஆண்டனி படத்தின் கிளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
தாடி வைத்த டான் விஷால்.. மீசையில்லாத மெக்கானிக் விஷால்.. என இரண்டு கேரக்டர்களுக்கும் குரலை மாற்றி விஷால் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.. மெக்கானிக் விஷால் கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் அவரின் குரலில் கூட பயம் ஒளிந்திருப்பது பாராட்டுக்குரியது.
மார்க் மற்றும் ஆண்டனி இரண்டுமே விஷாலின் கேரக்டர் பெயர்கள். ஆனால் எஸ்ஜே. சூர்யாவின் ஜாக்கி மற்றும் பாண்டியன் என இரண்டு கேரக்டர்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.
இப்படத்தின் ஹீரோ விஷால்தான். ஆனால் அவரை ஓவர் டேக் செய்து அதகளம் செய்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு நடிப்பு அரக்கன் என்று பெயர் போடப்படுகிறது. அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் சூடேற்றி இருக்கிறார் சூர்யா.
இந்த சூர்யாவின் நடிப்பை ஓவர் டேக் செய்ய கடைசியில் மொட்டை பாஸாக வந்து தூள் கிளப்பிருக்கிறார் விஷால். அதிலும் அந்த அனகோண்டா காட்சி ரசிகர்களுக்கு மாஸ் ஸ்ட்ரீட். ஆனால் அதுபோன்ற ஆக்ஷன் காட்சியில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் தேவையா? அதை விடுத்து 1995இல் வந்த எத்தனையோ சூப்பர் ஹிட் ஆக்சன் பாடல்களை பயன்படுத்தி இருக்கலாம்.
டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக செல்வராகவன். கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்.
நாயகிகள் அபிநயா & ரித்து வர்மா இருவருக்கும் ஸ்பேஸ் இல்லை ஆனாலும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் சுனில், ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கிங்சிலி ஆகியோரும் உண்டு. படத்தில் சூர்யா விஷால் ரெடின் உள்ளிட்டோர் வேகமாக கத்தி கொண்டு இருப்பது கொஞ்சம் எரிச்சல்தான்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
டெக்னீசியன்கள்…
ஜிவி பிரகாஷ் இசையில் அதிருதா மற்றும் ஐ லவ் யூ டி என்ற இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. அப்பா மகன் விஷால்.. அப்பா மகன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நால்வருக்கும் தனித்தனி பிஜிஎம் போட்டு அசத்து இருக்கிறார்.
ஒரு பக்கம் திறமையான நடிகர்களின் நடிப்பு என்று போற்றப்பட்டாலும் 1975 – 1995 என இரண்டு கால கட்டங்களை கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர். இவர்களின் இருவரின் பங்களிப்பு மிகப்பெரியது.
1995-களில் வந்த ரஜினியின் ‘முத்து’ படத்தில் குதிரை மலையை தாண்டும். அப்போது நாம் கைதட்டி ரசித்திருப்போம். அதுபோலத்தான் இந்த படத்தில் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் கைத்தட்டி ரசித்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.
1975ல்சில்க் ஸ்மிதா வருவது போல காட்சிகள் உள்ளன. ஆனால் அவர் சினிமாவுக்கு வந்தது 1979ஆம் ஆண்டில் தான். அந்த காட்சியில் எஸ்.ஜே சூர்யா போடும் ஆட்டத்திற்கு கண்டிப்பாக ஆண்டுகளை ஆராய்ச்சி செய்யாமல் சில்க் ஸ்மிதாவின் அழகை ஆராய்ச்சி செய்தால் லாஜிக் எல்லாம் மறந்து மேஜிக்காகும்.
அதுபோல 1995 காட்சிகளை காட்டும்போது வடிவேலு மற்றும் கோவை சரளாவின் டயலாக்குகள் இடம்பெறும். இந்த டயலாக் எப்படி வந்தது என்று நீங்கள் நினைத்தால் அந்த காட்சியை ரசிக்க முடியாது.
1990 காட்சிகளை காட்டும் போது அமராவதி அஜித் பெயர்கள் வருகிறது. இவர் பெரிய ஆளாக வருவார் என்ற டயலாக்குகள் தேவையில்லாத ஒன்று. காரணம் இந்த படத்தை பொருத்தவரை கடந்த காலத்திற்கு மட்டும் தான் செல்ல முடியும் என்கிறார்கள் அப்படி இருக்கும் போது எதிர்காலத்தை கணிப்பதாக வந்த டயலாக் தேவையற்றது.
படத்தின் பிளஸ்.. எஸ் ஜே சூர்யாவும் அவரது மகனும் பேசிக் கொள்ளும் டெலிபோன் காட்சிகளில் ரசிகர்களின் அலப்பறை.. முதல் நாளில் சில்க் ஸ்மிதா வந்து சூர்யாவின் திட்டங்களை முறியடிப்பது.. 2ம் நாள் நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் – மஞ்சுளா வந்து திட்டத்தை கெடுப்பது என காட்சிக்கு காட்சி செம ரகளையாக இருக்கிறது.
கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே, ஒப்பனையாளர் சக்தி ஆகியோரின் பங்களிப்பால் நம்மால் 1970 காலகட்டத்திற்கு செல்ல முடிகிறது.. சில நேரங்களில் ஓவர் மேக்கப்பும் தெரிகிறது.
அபிநந்தன் ராமனுஜத்தின் ஒளிப்பதிவு அருமை 1970 1990களின் காட்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக 1975ல் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த டபுள் டக்கர் பஸ் காட்டப்படும் போது இன்று உள்ள 2k கிட்ஸ்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகும். அதில் வைத்துள்ள சில்க் ஸ்மிதா காட்சியும் ஆக்ஷன் காட்சியும் ரசிகர்களுக்கு மரணமாஸ் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
வேலுகுட்டியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை கூட்டியுள்ளது. ஆனால் தேவையற்ற காட்சிகளை வெட்டி இருக்கலாம்.. கருப்பண்ணசாமி வந்து விஷால் சாமி ஆடுவது.. ஒய் ஜி மகேந்திரனின் ஓரினச்சேர்க்கை டயலாக்குகள் தேவையில்லாதது.
ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ‘ரெட்ரோ’ பாடல்கள் செம. ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோரின் உழைப்பு வேறலெவல்.
இதுவரை A படங்களின் இயக்குனர் என அறியப்பட்ட ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார். படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகர்கள் சிரிக்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு லாஜிக்கை மறந்து மேஜிக் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆக மார்க் ஆண்டனி… டைம் ட்ராவல் டான்கள்
Mark Antony movie review and rating in tamil