தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்….
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறார் அர்ஜுன் தாஸ்.
இவரிடம் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு சைக்கோ எண்ணம் வருகிறது. இதனால் அவ்வப்போது டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.
ஒரு நாள் இரவு நேரத்தில் துஷாரா இருக்கும் வீட்டில் உணவு டெலிவரி செய்ய செல்கிறார் அர்ஜூன்தாஸ். தொடர்ந்து தினமும் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்கிறது.
ஒரு கட்டத்தில் பிரச்சினையில் சிக்கிய துஷாரா விஜயனுக்கு உதவ செல்கிறார் அர்ஜுன் தாஸ். அப்போது எதிர்பாராத விதமாக பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அது என்ன பிரச்சனை.? துஷாரா விஜயன் யார்.? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்.? இவருக்கு யாரைப் பார்த்தாலும் கொலை செய்ய தூண்டுவது என்ன .? அது ஏன்.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ‘அநீதி’.
கேரக்டர்கள்…
அர்ஜுன் தாஸ் என்ற வில்லனிடம் ஒரு சாக்லேட் பாயை வரவழைத்து அதில் கொஞ்சம் சைக்கோத்தனமூட்டி ஒரு முழு நாயகனாக அவரை நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக அர்ஜுன் தாஸ் – துஷாரா காட்சிகள் நிச்சயம் காதலர்களை கவரும்.
1980-களில் நாயகியை படத்தில் அறிமுகப்படுத்தும் போது சில நிமிடங்கள் ஆகும். அதே போல ஒரு கவிதையாக துஷாராவை அறிமுகம் செய்திருக்கிறார்.
டூயட்டுக்கு மட்டுமே நாயகி என்று இல்லாமல் கதை ஓட்டத்திற்கு முழுவதுமாக உயிரூட்டி இருக்கிறார் துஷாரா விஜயன். இவரது அறிமுக காட்சி முதல் அனைத்தும் அழகு. பணக்கார வீட்டில் ஏழை பெண் படும் கஷ்டங்களை தன்னுடைய உணர்ச்சி பூர்வமான நடிப்பால் அள்ளி வழங்கி இருக்கிறார் துஷாரா.
ஒரு ஆணுக்கு பிரச்சனை என்றால் காதலி கூட ஒதுங்கி விடுவாள். அதே சமயம் காதலிக்கு பிரச்சனை என்றால் காதலன் வருவான் என்ற பெண்களின் மனநிலையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
பாட்டி அம்மாவை வில்லி போல காட்டி அந்த உயில் மேட்டரில் உயர்த்தி காட்டி இருக்கிறார் இயக்குனர்.
அர்ஜுன் சிதம்பரம் மற்றும் வனிதா படத்தில் என்ட்ரி ஆன பிறகு படத்தின் கதை சூடு பிடிக்கிறது. வனிதா ஒரு மிரட்டல் வில்லியாகவே வரிந்து கட்டி செய்திருக்கிறார்.
கொஞ்சம் தமிழ் மலையாளம் கலந்து அழகாக பேசியிருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி தாத்தா. நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
அர்ஜுன் சிதம்பரமும் தன்னுடைய பங்களிப்பில் கச்சிதம். போலீஸ் அதிகாரியாக வரும் JSK ஜே எஸ் கே கொஞ்ச நேரம் தான் என்றாலும் அவரது விசாரணை அணுகுமுறை ரசிக்க வைக்கிறது.
ஃப்ளாஷ் பேக்கில் வரும் காளி வெங்கட் மற்றும் அவரது மகன் ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுகள்.
தங்கப் புள்ள.. தங்க புள்ள.. என்று காளி வெங்கட் அழும் காட்சிகளில் கண்டிப்பாக நீங்களும் அழுவீர்கள். காளி வெங்கட்டின் மளிகை கடை முதலாளியாக வரும் டி சிவா கொஞ்ச நேரம் என்றாலும் அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
அறந்தாங்கி நிஷா மற்றும் பாவா லட்சுமணன் இருவரும் ஒரே காட்சியில் வந்து கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். நண்பனாக வரும் பரணியும் கொஞ்ச நேரம் என்றாலும் அவரது நடிப்பு சிறப்பு.
டெக்னீஷியன்கள்..
கலை இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். துஷாரா வேலை செய்யும் அந்தப் பாட்டி அம்மா வீட்டின் கதவு கூட அத்தனை அழகு. நவரசங்களை காட்டி இருக்கிறார்.
இரவு நேர டெலிவரி செய்யும் காட்சிகள் முதல் அந்த ஆடம்பர வீடு என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்.
வசனங்கள் படத்திற்கு பலம்..
உணவு டெலிவரி செய்த பின் மழை வரும் ஒரு காட்சியில்… “மழைக்காக ஒதுங்க சொன்ன போதும்.. தலை துவட்ட துணி கொடுத்தபோதும்.. நீ ஒரு முதலாளி இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என் நாயகன் பேசும் அந்த காட்சி ரசிகர்களை கைதட்ட வைக்கும்.
நான் மன நோயாளி என தெரிந்தால் நீ வெறுத்து விடுவாயா? என காதலி கேட்கும் போது கண் சிமிட்டலில் பதில் சொல்லும் அர்ஜுன் தாஸ் காதலனை சிக்ஸர் அடிக்க வைத்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையில் ‘பூ நாழி பொன் நாழி’ பாடல் இனிமை. பின்னணி இசையில் நிறையவே நிறைவாக மிரட்டி இருக்கிறார்.
வெயில் அங்காடித்தெரு காவியத்தலைவன் ஆகிய படங்களை கொடுத்த வசந்த பாலனை இதில் நிச்சயம் நீங்கள் பார்க்க முடியாது. ஒருவேளை அதேபோல படம் கொடுத்தால் நாம் இவருக்கு வேற கதை தெரியாதா.? என சொல்லி இருப்போம்.
எனவே அங்காடித்தெரு கதையில் தொடங்கி சைக்கோ கதையில் படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
தொழிலாளிகளை மனிதர்களாக நினைக்காமல் அடிமைகளாக நினைக்கும் முதலாளிகளுக்கு இந்த படம் ஒரு சமர்ப்பணம். அதே சமயம் *அன்பு மட்டுமே உலகத்தை ஆளும்.. மன்னிப்பது மனித குணம்…* என்ற கருத்தை அநீதி வலியுறுத்தி இருந்தாலும் இத்தனை வன்முறை தேவையா? என எண்ண வைக்கிறது.
தன்னுடைய ரூம் மேட் சாராவை கூட இப்படிக் கொல்ல வேண்டுமா.? என எண்ண வைக்கிறார் அர்ஜுன் தாஸ். ஓவர் வன்முறை ஆகாது என்பது என்பது போல கிளைமாக்ஸ் காட்சிகள் இருப்பது வருத்தமே.
ஆக அநீதி… காதலின் நிறம் சிகப்பு
Aneethi movie review and rating in tamil