தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கல்யாணத்திற்கு முன்பு மாமியாருடன் பழக ஆசைப்படும் மருமகள் போடும் விசித்திர நிபந்தனை.
கதைக்களம்…
நாயகன் (கௌதம்) ஹரிஷ் கல்யாண் – நாயகி (மீரா) இவானா இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றனர். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.
இரண்டு வருடத்திற்கு பின் திருமணத்தைப் பற்றி பேசவே வீட்டிற்கு சென்று பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது.
அப்போதுதான் இவானா.. “நான் உன்னுடன் வாழ்வதைப் பற்றி யோசித்தேன். ஆனால் உன் அம்மாவுடன் வாழ்வதை பற்றி யோசிக்க வில்லை” என்கிறார்.
இதனால் காதலர்களுக்கு பிரச்சனை வெடிக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒரு சுற்றுலா செல்வோம் அப்போது உன் அம்மாவுடன் உன் குடும்பத்தாருடனும் நான் பழக வாய்ப்பு உள்ளது.
அப்போது பிரச்சினை இல்லை என்றால் நான் உன்னை மணக்கிறேன். பிரச்சனை வந்தால் நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்கிறார் இவானா.
காதலியின் நிபந்தனையை அம்மாவுக்கு தெரியப்படுத்தாமல் இரு குடும்பத்தாரும் சுற்றுலா செல்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது.? இவானாவை ஏற்றுக் கொள்ள சம்மதித்தாரா நதியா.? மாமியார் – மருமகள் உறவு தொடங்கியதா.? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சாக்லேட் பாயாக ஹரிஷ் கல்யாண் காணப்பட்டாலும் அவருக்கு இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் சீன்ஸ் எதுவும் இல்லை. மாறாக வழக்கம் போல பக்கத்து வீட்டு பையனாக வந்து செல்கிறார்.
இவானா அழகு நிறைந்த மீராவாக ஜொலிக்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்கு உரித்தான கண்டிஷன்கள் போடும்போது முரட்டு சிங்கிள்ஸ் மனம் கொஞ்சம் குளிரலாம்.. (இதுக்கு தான்யா நாங்க கல்யாணம் பண்ணிக்கவே இல்ல என்பார்கள்)
யோகி பாபு வந்தபின் டூர் போலவே காமெடியும் களை கட்டுகிறது. அது போல டூரில்.. டிரைவர் யோகி பாபுவிடம் சுகர் பேஷண்ட் சிறுநீர் கழிக்க ஒவ்வொரு முறையும் வண்டியை நிறுத்த சொல்லும் காமெடி செம.
ஹரீஷின் நண்பனாக வரும் ஆர் ஜே விஜய் தன் பங்களிப்பை பக்காவாக செய்துள்ளார். டூர் போகும் போது.. “செமையாக இருக்குல்ல.. என்று ஒரு பெண்ணிடம் கடலை போடுகிறார். சென்னை பூந்தமல்லி கூட தாண்டல அதுக்குள்ள இப்படியா என கலாய்ப்பது செம.
விடிவி கணேஷ் வந்து கொஞ்சம் கலகலப்புக்கு கை கொடுக்கிறார்.
வி டிவி கணேஷ் ஒருமுறை ஹரீஷிடம் நதியா – இவானா இருவரையும் பார்த்து இதில் யார் உங்கள் அம்மா? என்று சொல்லும் போதே நதியாவின் இளமை ரசிகர்களுக்கு புரியும். என்றும் நதியா அழகுதான்.
இவானாவை பெண் பார்க்கும் காட்சியில் பிரச்சனை வெடிக்க ஹரிஷ் வெளியே புறப்படும்போது.. “நான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன்.. கொஞ்ச நேரம் இருக்கலாம் என்பதுபோல நதியா கேட்கும் காட்சிகள் சிரிப்பலை.
இவர்களுடன் தீபா அக்கா, வினோதினி உள்ளிட்டோரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. தங்கள் பங்குக்கு கொஞ்சம் கலகலப்பூட்டி செல்கின்றனர்.
டெக்னீசியன்கள்…
படத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாகவே கை கொடுத்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி. கோவாவின் அழகையும் சிறப்பாக கையாண்டு உள்ளார்.
படத்தொகுப்பாளர் இரண்டாம் பாதியை கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம். பாரஸ்ட் காட்சிகள் பஜனை காட்சிகள் சற்று சோர்வை தருகின்றன.
ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தன் மனைவி சாட்சியுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.
கோவாவில் நதியா மற்றும் இவானா ஆகியோருக்கான சீன்கள் மூலம் தலைமுறை இடைவெளியை அழகாக சித்தரித்து இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.
அது போல நதியா மீது ஆசைப்படும் ஒரு ஆங்கிலேயரின் காட்சிகள் ஏன்.? என்று தெரியாவிட்டாலும் அது ஆண்களின் மனநிலையை காட்டுகிறது.
பாரஸ்ட் சீன்கள் பெரிதாக கவரவில்லை. அதிலும் முக்கியமாக சாண்டி மாஸ்டர் வந்து ஆட்டம் போடும் அந்த பஜனை காட்சிகளும் எதற்கு என்றே புரியவில்லை.
இந்த சுற்றுலாவின் நோக்கமே மாமியாருக்கும் மருமகளுக்கும் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான். ஆனால் அதற்கான விளக்கம் கொஞ்சம் கூட கிளைமாக்ஸில் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நாயகி ஜெனிலியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் குடும்பத்தாருடன் பழகச் சொல்வார் ஜெயம் ரவி. இதில் கொஞ்சம் மாறுதலாக அனைவரும் சுற்றுலா சென்று இருக்கின்றனர்.
ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.
ஆக இந்த எல் ஜி எம்.. மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்
LGM movie review and rating in tamil