உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

உரிமை மீட்ட உத்தமன்..; கர்ணன் விமர்சனம் – 4/5

நடிகர்கள் : தனுஷ், ரஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கெளரி கிஷன்

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

இயக்கம் : மாரி செல்வராஜ்

தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு

இசை : சந்தோஷ் நாராயணன்

முன்னோட்டம்

1990கள் இறுதியில் தமிழக அரசுப் பேருந்துகளுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.

அப்போது தென் மாவட்டங்களில் சில தலைவர்கள் பெயரை வைக்க எதிர்ப்பு உருவானது. ஆங்காங்கே கலவரங்களும் நடந்தன.

இதனால் சில ஊர்களில் பேருந்து வசதிகள் இல்லை. இந்த பின்னணியை வைத்து பொடியன்குளம் கிராமத்தை நம் கண்ணுக்கு விருந்தாக கொடுத்துள்ளனர்

கதைக்களம்..

கர்ணன் (தனுஷ்) கைது செய்து அடித்து துவைத்து ரத்த காயங்களுடன் அழைத்து செல்கின்றனர் போலீசார்.

அத்துடன் ப்ளாஷ்பேக் ஸ்டார்ட்…

பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதியும் பேருந்து நிறுத்தமும் இல்லை.

எனவே அவ்வழி செல்லும் லாரி & இதர வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஒரு கட்டத்தில் தகராறு வரவே பேருந்து தாக்கப்படுகிறது.

அந்தப் பிரச்சனையைக் கிராம மக்கள் கர்ணன் துணையுடன் எப்படி எதிர்கொண்டனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கீழ் சாதி மக்களின் காவலனாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். கெஞ்சி கொண்டிருந்தால் உரிமை கிடைக்காது. தைரியமாக எதையும் எதிர் கொண்டு போராடினால் மட்டுமே வெற்றி என்பதை தன் உடல்மொழியால் உணர்த்திருக்கிறார் தனுஷ்.

உரிமைக்காக போராடிய போராடும் ஒவ்வொரு இளைஞர்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். இந்த கர்ணன் பல விருதுக்கு தகுதியானவன் தான்.

கர்ணனின் காதலி திரௌபதையாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன். தன் கேரக்டரில் சிறப்பு.

காவல்துறை அதிகாரியாக நட்ராஜ் (நட்டி), கர்ணனின் அக்காவாக லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, அரசியல்வாதியாக அழகம்பெருமாள் ஆகியோரும் கச்சிதம்.

இவர்களுடன் தாத்தா லால், யோகிபாபு, சண்முகராஜன், கௌரி கிஷன், ஜி.எம்.குமார், ‘பூ’ ராமு எனப் பலரும் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் அந்த கிராமத்து மனிதர்கள். அந்த ஊர் மக்களையே சிறப்பாக நடிக்க வைத்திருப்பதால் கதையோடு நம்மால் இணைந்து விடமுடிகிறது.

‘கோழிக் குஞ்சு’ பாட்டி, குதிரை சிறுவன், தனுஷுடன் நிற்கும் இளைஞர்கள், பஸ் மேல் கல் எறியும் அந்த பையன் என எல்லா கேரக்டர்களும் மனதை விட்டு நீங்காதவை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சணத்திப் புராணம்’, ‘தட்டான் தட்டான்’ ஆகிய பாடல்களின் ஒளிப்பதிவில் இத்தனை அழகா? என வியக்கும் வண்ணம் உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

தலையில்லா புத்தர் & ஓவியம், கழுதை – யானை – குதிரை என பல குறியீடுகளை அடிக்கடி காட்டுகிறார். அது போதும் போதும் என்றளவில் உள்ளது.

இறுதியில் வரும் கலவர காட்சியும் நீளமாக உள்ளது. படத்தின் பெரிய குறை நீளம்.

அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை நீளமாகப் பதிவு செய்திருப்பதும் பெரும் குறை.

ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துவிட்டார்.

தனுஷின் நடிப்பு படத்தின் ஒரு பாதி பலம் என்றால் இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் படத்தின் மீதி பலம்.

வசனங்கள் நச்…

‘எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் ஏறி மிதிக்கிறான்”,

“அவன் பஸ்ச அடிச்சதுக்காக அடிக்கல, நிமிந்து பாத்ததுக்காக அடிச்சான்” ஆகிய வசனங்களில் மாரி செல்வராஜ் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை போல சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி நல்ல திரைக்காவியத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

ஆக… உரிமை மீட்ட உத்தமன் இந்த ‘கர்ணன்’

Karnan movie review and rating in tamil

Related Articles