சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்..; சார்பட்டா பரம்பரை விமர்சனம் – 4/5

நடிகர்கள் – ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன், அனுபமா, ஜான்விஜய், காளி வெங்கட், தங்கதுரை

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – முரளி

இயக்கம் – பா.ரஞ்சித்

தயாரிப்பு – கே 9 ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ்

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி & காலா’ படங்களுக்கு பிறகு ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்தது.

கதைக்களம்..

1950 முதல் 1970களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும், இடியப்பா பரம்பரை என்ற குத்துச்சண்டை அணிக்கும் இடையே கிட்டத்தட்ட 30-40 வருடங்களாக பகை இருக்கிறது. சார்பட்டா பரம்பரையின் வாத்தியார் ரங்கன்.

பாக்ஸிங் போட்டியில் இறங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அம்மாவின் கண்டிப்பால் போட்டியிட முடியாமல் சார்பட்டா பரம்பரை அணி மீது தீவிர ரசிகராகவே இருக்கிறார் ஆர்யா (கபிலன்).

ஒரு கட்டத்தில் வாத்தியார் ரங்கனுக்கு இடியப்ப பரம்பரையால் பெரிய சவால் வருகிறது.

இதனால் தன் ரசிக சிஷ்யன் கபிலனையே இடியப்ப பரம்பரைக்கு எதிராக களமிறக்குகிறார் ரங்கன்.

இடியப்ப பரம்பரையைச் சேர்ந்த ஜாம்பவான் வேம்புலியை வீழ்த்தி காட்டுவேன் என போட்டியே போடாத கபிலன் சவால் விடுகிறார்.

கபிலன் ஜெயித்தாரா.? ரங்கன் என்ன செய்தார்.? வென்றது இடியப்ப பரம்பரை..? சார்பட்டா பரம்பரை.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்...

ஆர்யா நீ வேற லெவல்ய்யா… நான் கடவுள், மதராசப்பட்டிணம், அவன் இவன், மகாமுனி படங்களுக்கு பிறகு ஆர்யா அசத்திய படம் இது. பாகுபலி பாணியில் இவரது பாடிகட்டு.

ரசிகர்களை ஆக்சனில் மிரள வைத்துள்ளார். தன் தாய் அனுபமாவிடம் அடங்கும் போது நம்மை அழவைக்கிறார். அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்பதும் இதற்கு ஒரு சாட்சி.

வாத்தியார் ரங்கனாக பளிச்சிடுகிறார் பசுபதி. அதே நேரத்தில் திமுகவின் வெறித்தனமான தொண்டராகவும் பலே.

பசுபதியின் மகனாக கலையரசன். இவர் நல்லவரா? கெட்டவரா? என கன்ப்யூசன் செய்கிறார். இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.

வேம்புலி ஆக ஜான் கொக்கேன். டான்சிங் ரோஸ் பாக்சராக ஷபீர் கல்லரக்கல் இருவருமே யார்? என கவனிக்க வைப்பார்கள். பேட்ட படத்தில் நடித்த ஓரிரு கலைஞர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

காளி வெங்கட் & தங்கதுரை இருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

ஆங்கிலோ இந்தியனாக ஜான் விஜய். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் ஸ்டைல் சூப்பர்.

ஆர்யாவிற்கு மனைவியாக துஷாரா விஜயன். முதலில் கணவருக்கு பணிந்து போவதும் பின்னர் எகிறி வாடா போடா என்பதும் துஷாரா தூள் கிளப்புகிறார்.

இதில் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் ஆகிய கேரக்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறகு மெயின் பில்லரே ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். 1970 காலக்கட்டத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்.

பாக்ஸிங் போட்டி நடக்கும் மைதானம், மணிக்கூண்டு, மைக்கில் பேசுபவர், தெருக்கள், சைக்கிள், உடைகள், வீட்டில் உள்ள பொருட்கள் என அந்தக் காலத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

படத்தின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு. இந்த படத்தை பார்த்தால் நமக்கும் பாக்ஸிங் பயில ஆர்வம் வரும். அப்படி ஒரு நேர்த்தியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஓரிரு பாடல்கள் தான். தனியாக இல்லாமல் படத்தின் கதையோட்டத்துடன் வருவதால் அதை இண்டர்நெட்டில் ஓட்டிப் பார்க்க தோன்றவில்லை.

பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவாளர் முரளி ஜி.. சூப்பர் ஜீ.. சூப்பர் ஜீ… பகல் இரவு காட்சிகளும் சரி.. பாக்ஸிங் காட்சிகளும் சரி அருமையான ஒளிப்பதிவு.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பாக்ஸிங் தான்.. ஆனாலும் படத்தின் மீதான ஆர்வத்தை ஊட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தன் சாதீய குறியீடுகளை இனியாவது ரஞ்சித் கொஞ்சம் தவிர்க்கலாம்.. இதில் பெரிதாக சொல்லவில்லை என்றாலும் குறியீடுகளை கவனிக்க வைக்கிறார்.

பாக்ஸிங் விட்டு ஆர்யா வேறு தொழில் செய்வது படத்தை வேறு ட்ராக்கில் எடுத்து செல்வது கொஞ்சம் சோர்வைத் தருகிறது. அதில் சில காட்சிகளை எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

படத்தின் ஹீரோ, கேரக்டர்கள், திரைக்கதை ஆர்ட் ஒளிப்பதிவு .. இவற்றில் எதற்காவது நிச்சயம் அவார்ட் உறுதி. வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டிய ரஞ்சித்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக… சார்பட்டா பரம்பரைக்கு .. சார் அவார்ட் பட்டா போட்டுக்கலாம்.

படத்தில் ‘மிசா’ குறித்து பேசப்பட்டுள்ளது. எனவே அதுபற்றிய ஒரு பார்வை..:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை 19 மாதங்கள் நீடித்தது.

தமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்து செய்யப்பட்டது.

sarpatta parambarai movie review and rating in Tamil

Related Articles