தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
வேலை தேடி தன் நண்பன் இருக்கும் ஓசூருக்கு வருகிறார் நாயகன் எம் ஆர் தாமோதர். அப்போது குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒருவனை கண்டுபிடிக்கிறார். அவனை அடித்து அந்த குழந்தையை மீட்டெடுக்கிறார்.
குழந்தைக்கு தாய் தந்தை பெயரோ ஊர் பெயரோ தெரியாத காரணத்தினால் தன்னுடன் வைத்துக் கொள்கிறார் நாயகன்.
போலீஸ்க்கு செல்லலாம் என்ற நிலை இருந்தாலும் ஒரு குற்றச் செயலுக்காக ஒளிந்து இருப்பதை நண்பரிடம் தெரிவிக்கிறார். இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்…
ப்ளாஷ்பேக்கில்… பதநீர் விற்று தன் அம்மாவுடன் வசித்து வருகிறார் நாயகன். மக்கள் டாஸ்மாக்கை விரும்பி செல்லும் நிலையில் வியாபாரம் இன்றி தவிக்கிறார்.
அப்போது.. “நீ நண்பருடன் இணைந்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறாய . உன் நண்பர்கள் நல்லவர்கள் இல்லை. குற்றச் செயல்களை ஈடுபடுபவர்கள். எனவே அவர்கள் நட்பை முறித்துக் கொள் என்கிறார் அம்மா.
தாய் சொல்லை மீற முடியாமலும் தவிக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் வேறு ஊருக்கு செல்கிறார். அங்கு தன் உறவினர் பங்காளி சிங்கம்புலி நடத்தும் காயலான் கடையில் வேலை செய்கிறார். அப்போது நாயகனை காண வரும் நண்பர்கள் ஒரு நாள் ஒரு குற்ற செயலில் ஈடுபட அது தொடர்பான மோதலில் தன்னை தற்காத்துக் கொள்ள வில்லனின் தம்பியை போட்டு தள்ளி விடுகிறார் நாயகன் தாமோதர்.
எனவே தான் நண்பனை ஓசூருக்கு வந்துள்ளார் நாயகன். அதன் பிறகு என்ன நடந்தது? குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாரா.? அல்லது பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? அல்லது சிறைக்கு சென்றாரா.? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்
எம் ஆர் தாமோதர், விதிஷா, ரியா, சுதா , நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த் , ஆதி வெங்கடாச்சலம், சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முகம் முழுக்க தாடி.. கலைந்த முடி என தமிழ் சினிமாவின் அசல் கிராமத்து இளைஞனாக வருகிறார் எம் ஆர் தாமோதர். ஆனால் இவர் அழும் போதும் சிரிக்கும் போதும் முகத்தை குளோசப்பில் காட்டுவதை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.
விதிஷா ரியா என இரண்டு நாயகிகள் இருந்தும் இவருக்கு பெரிதாக ரொமான்ஸ் இல்லை.. ஆக்சன் காட்சிகளில் கொஞ்சம் பாஸ்மார்க் பெறுகிறார்.
மதுரை முத்து என்ற பெயரில் கெத்து காட்டி இருக்கிறார் வில்லன். இனி இவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது.
சீரியஸ் படத்தை சிரிப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலி உதவியிருக்கிறார். ஆடையை மற்றும் மாற்றிக் கொண்டு கெட் அப் மாற்றி ஊர் ஊராக சுற்றுகிறேன் என சிங்கம் புலி நம் காதிலும் பூ சுற்றி இருக்கிறார்.
இவரது மனைவியாக கம்பம் மீனா. உன் கணவன் தான் ரவுடியை கொலை செய்தானா? என சிலர் விசாரிக்கும் போது “என்னைத் தொட்டுப் பார்க்கவே அவருக்கு தைரியம் கிடையாது.. இதுல கொலை வேறையா.? எனக் கேட்கும் போதும் பாடி லாங்குவேஜில் கவனிக்க வைக்கிறார்.
நாயகனின் அம்மாவாக சுதா. தன்னுடைய அனுபவ நடிப்பபில் நேர்த்தி.
நிழல்கள் ரவி நடித்துள்ளார். இவருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். நிழல்கள் ரவி போல பேசும் மிமிக்ரி கலைஞரை பயன் படுத்தியிருக்கலாம். செட்டாகவில்லை.
குழந்தை நட்சத்திரமாக துறுதுறு பையன் தருண்.. நன்றாக பேசத் தெரிந்த இவனுக்கு பெற்றோர் பெயர்? ஊர் பெயர் தெரியாதா.? லாஜிக் இடிக்குதே.. இவனுக்கு பதில் இன்னும் சின்ன குழந்தை நடித்திருக்கலாம்.
டெக்னீசியன்கள்..
பி என் பி கிரியேஷன்ஸ் , பிரைம் அசோசியேட்ஸ், சவுத் இண்டியன் புரடக்ஷன்ஸ் சார்பில், செங்கோடன் துரைசாமி, நிர்மலா தேவி, எம் ஆர் தாமோதரன் தயாரிப்பில் உருவான படம் ‘கடத்தல்’.
சலங்கை துரை.. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் காத்தவராயன்’, ‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302′ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
பல நடிகர்களுக்கு வசனங்களுடன் உதடு அசைவு ஒட்டவில்லை. டயலாக் முன்பு வருகிறது. பின்னர் தான் உதடு அசைவு காட்டப்படுகிறது. அதுபோல அடிப்பதற்கு முன்பே சப்தம் வருகிறது. இதைக் கூடவா எடிட்டர் & இயக்குனர் கவனிக்கவில்லை?
ஸ்ரீகாந்த் இசையில் ‘பிச்சிப்பூ’ மற்றும் ‘என்ன பெத்த ஆத்தா’ பாடல்கள் ஓகே.
ராஜ் செல்வாவின் ஒளிப்பதிவில் ஓசூர் பொள்ளாச்சி திருநெல்வேலி காட்சிகள் சிறப்பு. ஓசூரில் நிஜமான விநாயகர் சதுர்த்தி விழாவில் கேமராவை வைத்து காட்சிகளை படமாக்கி இருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
இந்த உலகில் தாய் பாசமும் நட்பும் கிடைப்பது அரிது. தாய் பாசத்திற்கு ஈடு இல்லை.. கூடா நட்பு கேடாய் முடியும் உள்ளிட்ட கருத்துக்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சலங்கை துரை.
கடத்தல் சம்பவத்தை விறுவிறுப்பாக காட்டிய இயக்குனர் அதன் பின்னர் கதைக்களத்தை மாற்றி விட்டார். செயற்கையான நடிப்பு நாடகத்தன்மை ஆகியவைகளால் காட்சிக்கு பலவீனமே.
கிளைமாக்ஸ் காட்சியில் என்கவுண்டர் நோக்கம் என்ன? ஒரு உயர் அதிகாரி சொன்ன பிறகும் என்கவுண்டர் ஏன் செய்கிறார் மற்றொரு அதிகாரி என்பதற்கான விளக்கம் இல்லை. நாயகனை பழிவாங்க அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா?
ஆக கடத்தல்.. கவனம் தேவை
Kadathal movie review and rating in tamil