விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி; ஜருகண்டி விமர்சனம்

விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி; ஜருகண்டி விமர்சனம்

நடிகர்கள்: ஜெய், டேனியல், ரெபா மோனிகா, நிதின் சத்யா, ரோபோ சங்கர், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் மற்றும் பலர்.
இயக்கம் – பிச்சுமணி
இசை – போபோ ஷஷி
ஒளிப்பதிவு – ஆர்டி ராஜசேகர்
எடிட்டர் – பிரவீன் கே.எல்.
தயாரிப்பு – நிதின் சத்யா
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

லோன் வாங்கிவிட்டு கட்டாமல் இருந்தால் அந்த கார்களை சீஸ் செய்யும் வேலை செய்பவர் ஜெய்.

இவருக்கு ஒரு டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். எனவே இவரது நண்பன் டேனியல் உதவியுடன் இளவரசுவை சென்று பார்க்கிறார்.

அவர் ஒரு வில்லங்கமான விஷயத்தை சொல்லி இப்படி செய்தால் உடனே லோன் வாங்கி விடலாம் என்கிறார்.

எனவே அதற்கு ஆசைப்பட்டு பொய்யான வீட்டு டாக்குமெண்ட்ரிகளை கொடுத்து லோன் வாங்கிவிடுகிறார்.

இது போலீஸ் போஸ் வெங்கட்க்கு தெரிய வர, இவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.

அதன்படி 2 நாட்களில் 10 லட்சம் கேட்கிறார். எனவே பணத் தேவைக்காக நாயகி ரெபா மோகினாவை கடத்துகின்றனர்.

ஆனால் அதுவே அவர்களுக்கு பெரும் சிக்கலாக மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்மார்ட்டான நாயகனாக ஜெய். அதில் ஒன்றும் குறையில்லை. ஆனால் ஒரே முக பாவனை.

படம் முழுவதும் இவருக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் எந்த வித முகபாவனை மாற்றமும் ஜெய்யிடம் இல்லை. நாம்தான் அடுத்து என்னாகுமோ? அப்படின்னு யோசிக்க வேண்டியதா இருக்கு.

நாயகி ரெபோ மோகினி கொஞ்சம் அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் யாரும் இவரிடம் கதை கேட்காமல் இவரே தன் ப்ளாஷ்பேக் காட்சிகளை ஏன் சொல்கிறார்?, பின்னர் அதே காட்சிகள் இன்னொரு முறை வருவது போரடிக்க வைக்கிறது.

ஜெய்யின் நண்பராக டேனியல். காமெடி செய்ய முயற்சித்துள்ளார்.

ரோபோ சங்கர் இருந்தும் காமெடி இல்லை. ஒரு வரியில் சொன்னால் சிரிப்பை கொடுக்காத ரோபோ மட்டும் உள்ளது. சங்கர் இல்லை.

மிரட்டும் வில்லனாக அமித் குமார் திவாரி. கொடுத்த காட்சிகளில் குறை வைக்காமல் ஹீரோவிடம் அடி வாங்குகிறார்.

இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார், ஜெயக்குமார் ஆகியோர் உண்டு. ஆனால் இவரது கேரக்டரில்களில் வலுவில்லை.

நிதின் சத்யா படத்தில் 2 காட்சிகளில் வருகிறார். ஆனால் எதற்கு என்றே தெரியவில்லை. யாருக்காச்சும் தெரியுமா..?

தொழில்நுட்ப கலைஞர்கள்…

போபோ ஷஷியின் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஜெய்யை வேற ஒரு பாடலுக்கு பாட வைத்து நம் பொறுமையை சோதிக்கிறார். ஜெய் பேசினால் எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதானே. இதில் அவர் சொந்த குரலில் பாடினால்..?

பின்னணி இசை சில இடங்களில் கை கொடுத்துள்ளது. ஆனால் பல இடங்களில் தேவையை மீறி இரைச்சலை கொடுத்துள்ளது.

மேகராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்ட முயற்சித்திருக்கலாம்.

படத்தில் நிறைய ட்விட்ஸ்டுக்களை கொடுத்துள்ளார் டைரக்டர். ஆனால் விறுவிறுப்பான திரைக்கதையை ஆமை வேகத்தில் ஓட்டி நம்மை கடுப்பேற்றி விடுகிறார்.

இவரது குரு நாதர் வெங்கட் பிரபு பாணியில் ஒரு கருவை வைத்து அதை வேகமாக கொடுக்க நினைத்து தோற்றுவிட்டார்.

ஜருகண்டி… விறுவிறுப்பில்லாத ஜகா வண்டி

Jarugandi Movie review rating

Comments are closed.