தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்ரஹாரத்து பொண்ணு மாமிசம் சமைக்கும் மாமியாக வளர்ந்த கதை இது.
கதைக்களம்…
ஸ்ரீரங்கம் கோயிலில் சமைக்கும் தன் தந்தை போன்று தானும் பெரிய சமையல்காரராக வரவேண்டும் என்று நினைக்கிறார் சிறுமி நயன்தாரா.
இவரும் பல வகையான உணவுகளை ருசிக்க தொடங்கி சிறப்பான சமையலையும் கற்றுக் கொள்கிறார்.
ஆனால் இவரை அனைவரும் சமையல் காரி சமையல்காரி என கிண்டல் செய்ய அதையெல்லாம் தாண்டி ஸ்டார் ஹோட்டலில் பணிபுரியும் CHEFவாக உயர நினைக்கிறார்.
சிறுவயதில் நயன்தாராவின் ஆசைக்கு ஓகே சொன்ன தந்தை நீ செஃப்பாக மாறினால் இறைச்சிகளை சமைக்க வேண்டும் என தடை விதிக்கிறார். இதனால் வெறுத்துப் போகும் நயன்தாரா எடுத்த முடிவு தான் என்ன? தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டாரா? தன் லட்சிய கனவை அடைந்தாரா? அதற்காக என்ன செய்தார் இந்த ‘அன்னபூரணி’ என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து நிறைவு செய்து இருக்கிறார் அன்னபூரணி நயன்தாரா. ஆனால் இன்னும் மெனக்கெட்டு பயிற்சி பெற்று அக்ரஹாரத்து பாஷை பேசியிருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருப்பார்.
நயன்தாரா அருகில் ஜெய் போன்ற ஸ்மார்ட்டான நாயகன் இருந்தும் இருவருக்கும் எந்த ஒரு கனெக்சனும் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது ஏனோ?
‘தனி ஒருவன்’ படத்தில் சாதிக்கும் வரை காதலுக்கு இடமில்லை என ஜெயம்ரவி சொன்னாலும் அதில் நயன்தாராவிடம் ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் நயன்தாரா சாதிக்கும் வரை சாதித்த பின்னும் ஜெய்யுடன் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை என்பது வருத்தமே.
தயிர்சாதத்தில் வைத்த ஊறுகாய் போல நயன்தாரா படத்தில் ஜெய் கேரக்டர் உள்ளது.
சத்யராஜ் இடைவேளை சமயத்தில் தான் வருகிறார்.. அவர் வந்த பிறகு திரைக்கதை சமையலைப் போல சூடு பிடிக்கிறது.
சத்யராஜுக்கும் அவரது மகன் கார்த்திக் குமாருக்கும் தந்தை மகன் உறவு சரியாக காட்டப்படவில்லை. வேறு யாரோ போல இருக்கிறார்கள்..
நயன்தாராவின் நண்பர்கள் வரிசையில் ஜி டிவி புகழ் திடியன் மற்றும் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோரும். சிலநேரம் இவர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.
சமையல்காரர் அண்ணாமலையாக கேஸ் எஸ் ரவிக்குமார். கொஞ்ச நேரமே வந்தாலும் ஆயில் இல்லாமல் நெருப்பு இல்லாமல் (NO BOIL NO OIL) இவர் சமைக்க சொல்லிக் கொடுக்கும் முறை நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சச்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதில் அச்யுத் குமாருக்கு சிறப்பான வேடம். அவரும் அக்ரஹாரத்து அங்கிளாக கவனிக்க வைக்கிறார். பாட்டி சச்சு சொல்லும் நிலை..”தன் கனவுகளை துறந்து புகுந்து வீட்டுக்குள் வாழும் ஒவ்வொரு பெண்களின் நிலையை சொல்லும்.”
டெக்னீசியன்ஸ்…
தமன் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்து இருக்கிறார். அக்ரஹாரத்தில் இசை தொடங்கி ஹைடெக் வரை (கார்ப்பரேட் வரை) பயணிப்பது ரசிக்க வைக்கிறது. அது போல நயன்தாராவின் கனவு காட்சிகளுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுத்திருப்பது நல்ல கற்பனை.
ஒவ்வொரு முறையும் நயன்தாரா வாழ்க்கைப் படியில் ஏறுவதும் பின்னர் இறங்குவதும் அதற்கான இசையை கொடுத்து தமன் கவனிக்க வைத்துள்ளார்.
இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஆயிரமாயிரம் ஹோட்டல்களில் உணவை ருசித்தாலும் அம்மா கை பக்குவம் எங்கும் கிடைக்காது.
ஆனாலும் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு வீடு மட்டும் தான் உலகம் அவர்களின் கை பக்குவத்தை இந்த உலக அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னபூரணி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஏற்ற கேரக்டரை நயன்தாரா மூலம் தேர்வு செய்திருப்பதும் புத்திசாலித்தனம்.
ஆனால் படம் முழுவதும் சமையல் சமையல் போட்டி என திரும்ப திரும்ப காட்டப்படுவதால் விளம்பரங்களையும் சீரியல்களையும் பார்ப்பதாகவே தோன்றுகிறது.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு நேர்த்தி..
அருள் சக்தி முருகனின் எழுத்துக்களில் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.. பிரியாணியை எந்த மதத்தைச் சார்ந்தவர் சமைத்தால் என்ன? அதற்கு ஏது ஜாதி ஏது மதம்? என்ற வசனங்களும்… எந்தக் கடவுளும் சைவ சாப்பாடு தான் வேண்டும் என கேட்பதில்லை என்ற வசனமும் கைதட்ட வைக்கிறது.
சைவம் அசைவம் சாப்பிடுவது எல்லாம் அவரவர் விருப்பம்.. சபரிமலைக்கு மாலை போட்டவர் மீன் விற்பதில்லையா? கறி வெட்டுவதில்லையா? அதுபோல அக்ரஹாரத்து பெண் சிக்கன் சமைத்தால் என்ன என்ற வசனங்களும் கவனிக்க வைக்கிறது.
கலை இயக்குநர் துரைராஜின் கலை வண்ணத்தில் அக்ரஹாரத்தின் அனைத்தும் அருமை.
ஆக இந்த அன்னபூரணி.. தற்போது பரபரப்பாக பேசப்படும் உணவு அரசியலையும் தொட்டு ருசி பார்க்க வைத்திருக்கிறது..
Annapoorani movie review and rating in tamil