தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி, ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து மற்றும் பலர்.
இயக்கம் – சுசீந்திரன்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – குருதேவ்
எடிட்டர் – தியாகு
தயாரிப்பு – ரோஷன்
பிஆர்ஓ – ஜான்சன்
கதை
படிப்பு படிப்பு படிப்பு… இப்படி எந்நேரமும் மாணவர்களுக்கு / குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே திணித்தால் அவர்களின் மனநிலை என்னாகும்..? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..? என்பதே இந்த ஜீனியஸின் மையக்கரு.
சாதாரணமாகவே பர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவன் பட நாயகன் ரோஷன் (படத்தில் தினேஷ்). தன் மகன் படிப்பில் அக்கறை எடுக்காமல் இருக்கிறார் ஆடுகளம் நரேன்.
பள்ளி ஆண்டு விழாவில் தன் மகனுக்கே அனைத்து முதல் பரிசுகளும் கிடைக்கிறது. இதனால் ஆனந்தமடையும் அப்பா, இன்னும் தீவிரம் காட்டி பர்ஸ்ட் ரேங்கை தவிர எதுவும் எடுக்கக்கூடாது என அனைத்து பொழுது போக்குகளையும் கட் செய்து விடுகிறார்.
கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு கூட போகாமல் செய்துவிடுகிறார்.
படிப்பு படிப்பு என எந்நேரமும் இருக்கும் ரோஷன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்.
அதனையடுத்து நன்றாக படித்து ஐடி கம்பெனியில் சேர்கிறார். அங்கும் இவரின் புத்திசாலித்தனத்தால் எல்லாம் வேலைகளையும் இவரிடமே கொடுக்கிறார் ஓனர்.
ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை கூட ஒரே வாரத்தில் முடிக்க சொல்லி நிர்பந்திக்கிறார். இதனால் இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்கிறார் நாயகன்.
இதனால் மைண்ட் ப்ளாக் ஏற்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார்கள். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். இதனால் வேலையும் பறி போகிறது.
திருமணம் செய்து வைக்கலாம் என்று பார்த்தால் ரோசனின் லூசு தனத்தால் அதுவும் பாதிக்கப்படுகிறது.
இதனை பார்க்கும் ஆடுகளம் நரேனின் நண்பர் சிங்கம் புலி அவர்கள் ரோசன் குணமடைய புதிய யுக்தியை கையாள்கிறார். என்ன செய்தார் மாமா? ரோசன் முற்றிலும் நலமடைந்தாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நாயகன் ரோஷன் மற்றும் நாயகி பிரியா லால் இருவரும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். (பிரியா மலையாளத்தில் 5 படங்களில் நடித்திருக்கிறார்).
படத்தின் ஆரம்ப காட்சிகளில் ரோஷன் செய்யும் கிறுக்குத்தனத்தை பார்த்தால் நமக்கே எரிச்சலாகும். என்னடா? இவர் ஜீனியஸ்? தானா என்பதில் சந்தேகம் எழும். அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.
படிப்பு மட்டுமே கவனத்தில் கொண்டதால் உடற்பயிற்சி இருக்காது. உடல் அமைப்பு நிச்சயம் பிட்டாக இருக்காது. அதற்கு ஏற்ப ஹீரோ ரோஷன் இருக்கிறார். கிறுக்குத்தனத்தில் கில்லியாக இருக்கிறார் ரோஷன். ஆனால் மற்ற காட்சிகளில் இன்னும் நிறைய பயிற்சி தேவை. மற்றபடி முதல் படம் என்பதால் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம்.
முதல் படத்தில் எவரும் ஏற்க மறுக்கும் கேரக்டரில் பிரியா லால். இடைவேளைக்கு பின்னர் தான் வருகிறார். நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார்.
ஆனால் நாயகிகளுக்கு சுசீந்திரன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக எழுந்துள்ளது. அதை இதிலும் நிரூபித்துள்ளார்.
கண்டிப்பான அப்பாவாக ஆடுகளம் நரேன். நடிப்பிலும் செம ஸ்ட்ரிக்ட். அம்மாவாக மீரா கிருஷ்ணன்.
படிப்பை மட்டுமே கொடுத்து மகனின் வாழ்க்கை இப்படி நாசமாக்கி விட்டாரே என்று கேள்வி கேட்கும் காட்சிகளில் பாசக்கார அம்மாவாக ஜெயித்து விடுகிறார்.
சிங்கம் புலி சில காட்சிகளில் வந்து சிரிப்பு மூட்டுகிறார். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே ரகம் தான். ‘நீங்களும் ஊரும்’, ‘சிலு சிலு’ஆகிய பாடல்களை ரசிக்கலாம்.
விளையாடு மகனே விளையாடு பாட்டு. இன்றைய பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் கேட்டு.
படத்தொகுப்பில் குறைவில்லை. 2 மணி நேரம் கூட படமில்லை என்பது பெரும் ஆறுதல்.
ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சிட்டி காட்சிகளில் ஏதோ ஒரு டல் பீலிங் வருகிறது.
இயக்கம் பற்றிய அலசல்….
முதல் பாதியில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது. பிள்ளைகள் விளையாடும் வயதில் அவர்களை விளையாட விட வேண்டும் என்பதை சொன்ன சுசீந்திரனுக்கு ஒரு சபாஷ்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. மாலை வேளையில் குழந்தைகள் நன்றாக விளையாடினால் தான் அவர்களுக்கு அசதி வரும். அப்போதுதான் இரவில் நன்றாக உறங்கி காலையில் படிப்பார்கள் என்று ஆணித்தரமாக சொல்லியுள்ள சுசீந்திரனை பாராட்டலாம்.
சமூகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்தி கொள்ள பிள்ளைகளின் படிப்பை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் சில பெற்றோர்கள். அவர்களுக்கு இந்த ஜீனியஸ் ஒரு படிப்பினையை கொடுப்பார்.
விபச்சார விடுதிக்கு சென்ற பின் ஹீரோ மனநிலை மாறுவது எல்லாம் ரொம்ப ஓவர். எல்லாம் ஜீனியஸ் இப்படி செய்துவிட்டால் என்னாவது..?
முதல் பாதியை பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பார்க்கலாம். ஆனால் 2ஆம் பாதியை மாணவர்களை வைத்து பார்க்க முடியுமா..?
சொல்ல வந்த விஷயத்தை கமர்ஷியல் கலந்து வேறு ரூட்டில் சொல்ல பயணித்துவிட்டதால் ஜீனியஸ் சற்று தடுமாறி விட்டார்.
ஜீனியஸ்… விளையாட்டுத்தனம்