ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

நடிகர்கள்: பா விஜய், பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன், விக்னேஷ், யுவா, சஞ்சனா சிங் மற்றும் பலர்.
இசை- வித்யாசாகர்
ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய்
எடிட்டிங்- ஷான் லோகேஷ்
கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ்,
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.
பி.ஆர்.ஓ. – யுவராஜ்
தயாரிப்பு – வில் மேக்கர்ஸ் நிறுவனம்

கதைக்களம்…

தனது மாமா ஞானசம்பந்தம் உடன் இணைந்து அரிதான பழம்பொருட்களை விற்பனை செய்கிறார் பட நாயகன் பாடலாசிரியர் பாடகர் பா. விஜய். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.

மேலும் சமூக சேவையாக பள்ளிகளுக்குச் சென்று ‘குட் டச் பேட் டச்’ விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இவருக்கு அடுத்த அபார்ட்மெண்டில் புதிதாக குடும்பத்துடன் வந்து நுழைகிறார் டிடக்டிவ் ஏஜென்ட் பாக்யராஜ்.

அப்போது சிட்டியில் உள்ள மாபெருத் நகை கடை அதிபர் கடத்தப்படுகிறார். மேலும் அந்நியன் பட ஸ்டைலில் பல மர்ம கொலைகள் நடக்கிறது.

இதனால் போலீஸ் பாக்கியராஜிடம் உதவி கேட்கிறது.

இதனை துப்பறிய பாக்யராஜ் தனது அசிஸ்டண்ட் ராஜேந்திரன் மற்றும் மச்சினிச்சி தக்சிதா உடன் களம் இறங்குகிறார் பாக்யராஜ்.

அவருக்கு ஒரு சூழ்நிலையில் விஜய் மீது சந்தேகம் வருகிறது. அதன்படி அவரிடம் விசாரிக்க மரணத்திற்கு காரணமான பல முடிச்சுகளை அவிழ்க்கிறார் நாயகன்.

அப்படி என்ன நடந்தது..? கொலையாளி யார்? எதற்காக கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்ட்ராபெரி படத்திற்கு பிறகு நடிகராக பளிச்சிடுகிறார் பா. விஜய். தங்கை மீது பாசம், நண்பன் மீது நம்பிக்கை என நம்மை கவர்கிறார்.

இறுதியில் கடவுள் மீது ஆக்ரோஷம் காட்டுவதிலும் அசத்தல். நடிகராக கவர்ந்தாலும் இயக்குனராக அதை மிஸ் செய்துவிடுகிறார்.

இவருடன் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்களின் பாத்திர படைப்புகளும் அவர்களின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பாக்யராஜ் அசிஸ்டெண்ட் மொட்டை ராஜேந்தின் சில காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார். ஆனால் இவரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டாமல் இருப்பது நல்லது.

வில்லனாக முன்னாள் ஹீரோ விக்னேஷ் வருகிறார். அவரின் பாத்திரப் படைப்பு கச்சிதம்.

பிளாஸ்பேக் காட்சிகளில் விஜய்யின் தங்கையாக வரும் யுவா ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கிடுவார். அவ்வளவு அழகு. அதே சமயம் இறுதியில் அனுதாபத்தையும் பெற்று விடுகிறார்.

மெகாலி, சோனி ஷ்ரிஸ்ட்டா, தக்சிதா, சஞ்சனா சிங் போன்றோர்களுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கிலும் குறையில்லை.

வித்யாசாகர் இசையில் ஆருத்ரா பாடல் மற்றும் ‘செல்லம்மா செல்லம்’ பாடல் இனிமையான ராகங்கள். புலி ஒன்னு வேட்டைக்கு போகுது பாடல் தேவையற்ற இடத்தில் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் கிராமத்து காட்சிகள் படத்துடன் ஒன்ற வைக்கிறது. நம் குடும்பத்துடன் ஒன்றாக பழகும் சிலரே நம் வீட்டு சிறுமிகளை / பெண்களை பாலியல் தொல்லை செய்வார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதல் பாதியில் அந்நியன் பாணியில் கதை சொல்ல நினைத்து ஆருத்ராவை போரடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் பா. விஜய்.

ஜலசமாதி, சம்ஹாரம் என புராண கால கதைகளை சொல்லி கதையோட்டத்தை திருப்பி விட்டுள்ளார்.

அதுபோக ஒரு காட்சியில் சிறுவனை வைத்துக் கொண்டு பைக்கில் செல்கிறார் பா.விஜய். அதற்கு ஏன் க்ரீன்மேட்..? பனிமலை காட்சிகளில் கிராபிக்ஸ் அப்பட்டமாக தெரிகிறது.

சிறுமிகள் பாலியல் தொல்லை கதைக்களத்தை அருமையாக சொல்லியிருக்கலாம். அதை விடுத்து திரைக்கதையை கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டுள்ளார் விஜய்.

இரண்டாம் பாதி கவர்ந்த அளவுக்கு முதல் பாதியில்லை என்பது ஏமாற்றம் தான்.

ஆருத்ரா… பாலியல் தொல்லைக்கு அபாய சங்கு

Comments are closed.