தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன், வினோதினி, ப்ரீத்தி, வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : ஏஎல் ரமேஷ்
இயக்கம் : சமுத்திரக்கனி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : நாடோடிகள் புரொடக்சன் சமுத்திரக்கனி
கதைக்களம்…
மூன்று அப்பாக்களும் (பெற்றோர்களும்) அவர்களது குழந்தைகளும். இவர்களுடன் வேறொரு பெற்றோரின் இரண்டு மகள்கள்.
தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா. (சமுத்திரக்கனி-விக்னேஷ்)
குழந்தை பிறந்தது முதல் படிப்பு, அமெரிக்க வேலை, திருமணம் வரை திட்டமிடும் கண்டிப்பான ஒரு அப்பா. (தம்பி ராமையா-ராகவ்)
மூன்றாவது அப்பா.. மகனே நாம் இருக்கிற இடம் யாருக்கும் தெரியாம இருந்துக்கனும் என்று சொல்பவர். (நமோ நாரயணன்-நசாத்)
இவர்களில் எந்த அப்பாவின் மகன் நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறான்? எப்படி வளர்க்கப்படுகிறான்? எந்த அப்பாவின் ஆசை நிறைவேறியது என்பதே இந்த படம்.
கதாபாத்திரங்கள்…
ஒரு அப்பாவாக மட்டுமில்லாமல் தன் மகனுக்கு ஒரு நண்பனாகவும் மற்ற குழந்தைகளுக்கு அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.
மகனுக்கு சைக்கிள் கற்று கொடுப்பது, தனியாக பஸ்சில் பயணிக்க சொல்வது, நீச்சல் கற்று கொடுப்பது, அவன் போக்கில் இவர் சென்று வழிகாட்டுவது என அனைத்தும் ரசிக்கும் ரகம்.
மாமனார் வேலராமமூர்த்திக்கு மருமகனாக இல்லாமல் மகனாகவும் தன் கேரக்டரை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்.
இவரின் நண்பனாக வரும் டாக்டர் சசிகுமாரும் அனல் பறக்கும் வசனங்களை பேசி செல்கிறார்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஜெயித்து காட்டுவேன் என்பது போல தம்பி ராமையா இதிலும் வெளுத்து கட்டியிருக்கிறார். மகனையும்தான்.
எந்த குழந்தை பிறக்கும்? என்ன பெயர் வைக்கலாம்? என்பது தொட்டு, பிறக்கும் நேரம், படிக்கும் பள்ளி என அனைத்தையும் முடிவு செய்யும்போது சில அப்பாக்களை நினைவுப்படுத்துகிறார்.
இவர்களுடன் பெரிய காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், யுவஸ்ரீ, கேப்ரில்லா, நசாத் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை ஜொலிக்க வைக்கிறார்கள்.
சின்ன சின்ன பாவனைகளையும் அழகாக காட்டி நம் மனதை கவர்கிறார்கள்.
சமுத்திரக்கனியின் மனைவியாக ப்ரீத்தி. பிடிவாதத்தால் பெண்கள் நினைப்பதை சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.
தம்பி ராமையாவின் மனைவியாக வினோதினி. கணவன் சொல்லை மீறமுடியாமல் தவிப்பதை அழகாக காட்டியுள்ளார்.
நமோ நாராயணன், அணில் முரளி, ஆதிரா ஆகியோருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மாணவனின் வளர்ச்சி பள்ளியில் இல்லை. அவனிடம் இருக்கிறது என சமுத்திரக்கனி சொல்லியதும் ஒலிக்கும் இளையராஜா குரல் அருமை. நம்மை 1980ஆம் ஆண்டுக்கே கொண்டு செல்கிறார் இசைஞானி.
இப்படத்திற்கு பாடல்கள் பெரிதாக தேவையில்லை என்பதால் அதை பின்னணி இசையில் சரி கட்டியுள்ளார்.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்கிறது. ஜாக்கியின் கலையில் குழந்தைகளும் அவர்களது வீடுகளும் அசத்தல்.
படத்தின் ப்ளஸ்….
- படத்தின் க்ளைமாக்ஸ் ஏற்படுத்தும் ஓர் அதிர்ச்சி உணர்வு
- உணர்ச்சிமிக்க இப்படத்திற்கு உயிர் கொடுத்த வசனங்கள்
- திரைக்கதையும் அதனைச் சார்ந்த குழந்தைகள் நட்சத்திரங்கள்
- ஒளிப்பதிவும் அதற்கான பின்னணி இசையும்
படத்தின் மைனஸ்…
- அப்பாக்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை.
- 3 அப்பாக்கள் ஓகே. அதில் ஒருவருக்காவது மகள் இருப்பதாக வைத்திருக்கலாமே?
இப்படத்தை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் தானே இயக்கி வசனம் எழுதி தயாரித்து நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.
நிச்சயம் வேறு எவராவது இதில் நுழைந்திருந்தால் இப்படி ஒரு படைப்பை அவரால் கொடுத்து இருக்க முடியாது.
அதுபோல் வசனங்கள் மனதில் என்றும் நிற்கும்.
- பாய் கடைக்கும் ஸ்கூல் பசங்க ப்ராஜக்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க யாரை ஏமாத்துறீங்க?
- அப்பா கிட்ட சொல்ல முடிஞ்ச விஷயத்தை மட்டும் பன்னு. சொல்ல முடியாத விஷயம்னா அது தப்புன்னு அர்த்தம். பண்ணாதே.
- அழுக்கு மனசுல சேர்ந்துட்டே இருந்தா அது வக்கிரமா மாறும். ஆசிட் அடிக்கக் கூட தோனும் என்ற வசனங்கள் படத்தை தாங்கி நிற்கின்றன.
தன் மகனின் சக மாணவியை அவன் தோழியாக பார்க்க சொல்லும் அந்த காட்சிகள் அருமை.
க்ளைமாக்ஸ் எவரும் எதிர்பாராதது. இப்படியும் சில பள்ளிகள் இன்று இருக்கின்றன என்ற உண்மை சம்பவத்தை சொன்ன சமுத்திரக்கனிக்கு ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.
இப்படத்தை பார்த்தபின் அப்பாக்களும் குழந்தைகளும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது.
மொத்தத்தில் அப்பா… குழந்தைகளின் குற்றாலம்