நடிகர்கள் : சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், பேசி சாதன்யா மற்றும் பலர்.
இயக்கம் : ஜேபியார்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு: விஜய் தீபக்
படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பு : பி.கே.ராம் மோகன்
கதைக்களம்…
படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டரை கோவை முழுக்க ஒருவர் ஒட்டுகின்றார்.
இது சினிமா போஸ்டர் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரி நெப்போலியன், அந்த போஸ்டர் பற்றிய விசாரணையை சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார்.
இதனிடையில் ஒரு மர்ம கடிதம் ஒன்று சரத்குமாரின் அக்கா மகளுக்கு ஏஞ்சலின் பெயரில் வருகிறது.
இதனால் சுதாரித்துக் கொள்ளும் சரத்குமார், தன் உதவியாளர் முனீஷ்காந்துடன் களம் இறங்குகிறார்.
ஏஞ்சலின் மரணத்தை முன்பே தடுத்தாரா சரத்? மர்ம கடிதம் இவரது வீட்டுக்கு வர என்ன காரணம்? உள்ளிட்டவைகளை தன் மிடுக்கான தோற்றத்துடன் சரத் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
கேரக்டர்கள்…
தமிழ் சினிமாவில் போலீஸ் உடைக்கு பொருத்தமான ஆள் சரத்குமார். இதில் தாடி வைத்து தன் கெட்அப்பை மாற்றியிருக்கிறார். படம் முழுவதும் மப்டியில் வருகிறார். எனவே யூனிபார்ம் கிடையாது.
படத்தில் பைட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் முறுக்கிய தேகத்துடன் வந்து செல்கிறார். நல்லவேளை டூயட் பாடவில்லை. (நாயகியே படத்தில் இல்லை)
உயர் போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் வருகிறார். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். அவ்வளவுதான்.
கன்னியாஸ்த்ரியாக சுஹாசினி நடித்திருக்கிறார். முனிஷ்காந்த் இருக்கிறார் காமெடி இருக்கும் என நினைத்தால் அதிலும் ஏமாற்றம்தான்.
இப்படம் 24 மணி நேரத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னையில் ஒரு நாள் என பெயரிட்டு இருந்தாலும், படம் முழுக்க கோவையிலே நடக்கிறது.
ப்ளாஷ்பேக் காட்சி மட்டும் சென்னையில் நடக்கிறது. அதுவும் கார்ட்டூன் படங்களை காட்டி லோ பட்ஜெட்ல் முடித்துவிடுகின்றனர்.
இதனால் சென்னையில் நடைபெற்ற அந்த விபத்து சம்பவத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது.
ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையை பேசும்படி கொடுத்திருக்கிறார். சரத்குமார் தம் அடிக்கும் காட்சிகள் முதல் நெட்டி முறிக்கும் காட்சிகள் என அனைத்தையும் நன்றாகவே இசை போட்டு காட்டியிருக்கிறார்.
படத்தில் எதற்காக எல்லாம் செய்தார்? என வில்லனே சொல்லிவிடுகிறார். இதனால் சரத்குமாருக்கும் நமக்கும் காட்சிகள் எளிதாக புரிந்துவிட்டன.
அதிகபட்ச மெமரிலாஸ் மருந்தை இந்தியாவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கொடுத்தால் நாட்டின் ஒட்டு மொத்த சிஸ்டமே கெட்டுவிடும் என்ற பயங்கரமான கான்செப்ட் உடன் படத்தை எடுத்திருந்தாலும் அதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.