First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து இந்த அசுர கூட்டணி அமைத்துள்ளனர் வெற்றிமாறன் & தனுஷ்.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கதையாகக் கொண்ட படம் தான் இது.

கதைக்களம்…

சிவசாமி (தனுஷ்) இவரது மனைவி மஞ்சுவாரியர். மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.

தனுஷ் தம்பதிக்கு 2 மகன்கள் ஒரு மகள்.

தனுஷ் தன்னுடைய 2வது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்கிறார். இதுதான் படத்தின் முதல் காட்சி.

நடக்கும் பாதம் அடையாளம் கூட தெரிய கூட என்பதற்காக ஆற்றில் நடந்து செல்கிறார்.

ஒரு பக்கம் போலீஸ். மற்றொரு பக்கம் ஒரு ரவுடி கும்பல் இவரை வலை வீசி தேடுகிறது. ஏன் என்ற நினைவோடு கதை பின்னோக்கி நகர்கிறது.

இந்த கும்பல்களிடம் இருந்து தனுஷ் தன் குடும்பதை காப்பாற்ற போராடுகிறார். எந்த வம்புக்கு போக கூடாது என தவிர்க்கிறார்.

தன் தந்தை கோழை. உதவாக்கரை, குடிக்காரன் என நினைக்கிறான் சிதம்பரம். ஆனால் தன் மகனுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அசுரனாக மாறுகிறார் தனுஷ். அப்படி என்றால் இந்த தனுஷ் யார்? என்பதே மீதிக்கதை.

இது குடும்ப பழிவாங்கல் கதை என்றாலும் அதை வெற்றிமாறன் எடுத்திருக்கும் விதத்தை கூறினால் சுவை இருக்காது என்பதால் இத்துடன் முடிக்கிறோம்.

கலைஞர்கள்…

ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருதை வெல்ல போகிறார் தனுஷ். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

1980களில் கதை தொடங்குகிறது. பின்பு 1960களிலும் ப்ளாஷ் பேக் பயணிக்கிறது. எனவே தனுஷ் இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார் எனலாம். திருநெல்வேலி பாஷையிலும் நம்மை ஈர்க்கிறார்.

ஒரு 45 வயது உள்ள மனிதரை போல தன் உடல் மொழியை கொடுத்துள்ளார். பதுங்கி பதுங்கி செல்லும்போது சரி. பாயும்போது சரி.. அப்ப்ப்பா என்னவொரு நடிப்புய்யா.. செம.….

மலையாளத்தில் பல விருதுகளை குவித்த மஞ்சு வாரியாருக்கு அருமையான அறிமுகம் தமிழில் கிடைத்துள்ளது. இவருக்கு இனி தமிழில் வாய்ப்புகள் தேடி வரும்.

பசுபதிக்கும் அருமையான வேடம். யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

தனுஷின் 2வது மகன் கென். கெட்டிக்காரன். இவர் நடிகர் கருணாசின் மகன். நடிப்பில் அப்பாவை மிஞ்சியிருக்கிறார்.

இவருடைய அண்ணனாக டீஜே அருணாசலம். கிராமத்து இளைஞருக்கு உண்டான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆடுகளம் நரேன், பவன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் வந்தாலும் அம்மு அபிராமி. அழகு அபிராமி. நடிப்பிலும் அருமை. செருப்பால் அடி வாங்கும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

போலீசாக டைரக்டர் பாலாஜி சக்திவேல். இவருடைய தோற்றமே மிரட்டல். அதுபோல் டைரக்டர் வெங்கடேஷ் மற்றும் ஜாதி வெறி பிடித்த வாலிபர் நிதிஷ் வீரா இருவரும் சூப்பர்.

ஊர் பெரியவராக வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நடிப்பிலும் செம. இவர்களுடன் பிரகாஷ் ராஜ். வக்கீல் வேடத்தில் நம் கவனம் பெறுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். கண்ணழகு ரத்தினமே.. பெண்ணழகு பெட்டகமே… கத்திரி பூவழகி பாடல்கள் என்றும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது.

ராமரின் எடிட்டிங் எங்கும் குறையில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவில் அந்த மிரட்டலான காடே நம்மை பயமுறுத்துகிறது.

பேய் படங்களில் வராத பயம் சில இருட்டு காட்சிகளில் நம்மை தொடுகிறது. அப்படியொரு இசையும் ஒளிப்பதிவையும் கொடுத்துள்ளனர்.

இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் பைட் உண்மையான வெறித்தனம்.. பின்னணி இசை வேற லெவல்.

இயக்கம் பற்றிய அலசல்…

வெற்றிமாறன்.. பெயரிலேயே வெற்றியை வைத்துள்ளதால் என்னவோ படம் இயக்கினாலும் தயாரித்தாலும் வெற்றிதான் இவருக்கு. பொறுமையாக படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

நாம் தினமும் சோறு சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு குழம்பு, கூட்டு என வைத்தால் நிச்சயம் ருசிப்போம். அதுபோல வன்முறை, அடி, வெட்டு குத்து, குடும்ப பகை என பார்த்து சலித்து போன கதையாக இருந்தாலும் அதை முறையாக கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற பல்ஸை அறிந்திருக்கிறார்.

வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பை சந்தித்த மனிதன் எப்படி பக்குவப்பட்ட வாழ்க்கையை வாழ்வான் என்பதையும், அவரின் பிள்ளைகள் அவரை எப்படி நடத்துவார்கள் என்பதையும் அசுர பலத்துடன் சொல்லியிருக்கிறார். அதுபோல 1960களில் இருந்த செருப்பு போடாத ஜாதி அரசியலையும் நச்சென்று சொல்லியிருக்கிறார்.

திரைக்கதையை போல படத்தின் வசனங்களும் நச் நச்… கைத்தட்டல்களை அள்ளுகிறது. வசனங்களில் சில…

கௌரவத்தை வச்சிட்டு குடும்பத்தை இழக்க முடியாது..
எல்லாரும் இறந்துட்டா குடும்ப வாரிசு இல்லாம போய்டும்…
போனவங்கள நினைச்சிட்டு இருக்கிறவங்கள இழந்துட கூடாது
செவலை நாய் போச்சுன்னு நீ சொல்ற.. நான் நாயோடு மட்டும் போச்சேன்னு போதும் நான் நினைக்கிறேன்.. என ஒவ்வொரு வார்த்தையிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

காசு, சொத்து ஆகியவற்றை ஒருவன் பறித்து விடலாம். ஆனால் படிப்பை மட்டுமே இந்த உலகில் யாரிடம் இருந்தும் யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை சொல்லி அடித்திருக்கிறார்.

வன்முறை கொஞ்சம் ஓவர் டோஸ் என்பதால் குழந்தைகள் பார்ப்பது கடினம். மற்றபடி கலைப்புலி தாணு அவர்கள் தமிழ் சினிமா பெருமைப்பட கூடிய பெட்டகத்தை கொடுத்துள்ளார் எனலாம்.

அசுரன்.. அசத்தல்.. அருமை.. அதிரடி..

Comments are closed.