First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

First on Net மிருதங்கமும் மீளாத மனமும்… சர்வம் தாளமயம் விமர்சனம்

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், , குமரவேல், திவ்யதர்ஷினி (விஜய் டிவி டிடி) மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – ரவி யாதவ்
இசை – ஏஆர் ரஹ்மான்,
பாடல்கள் – மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – ஆண்டனி

இயக்கம் – ராஜீவ் மேனன்
தயாரிப்பு – மைண்ட் ஸ்கீரீன் பிலிம்ஸ் இன்ஸ்டியூட்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

நம்பர் 1 மிருதங்க வித்வானாக திகழ்கிறார் நெடுமுடி வேணு. கூடவே கொஞ்சம் திமிரிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.

சிம்பிளாக சொன்னால்… மிருதங்க வாசிக்க தன் விரல்களே தனக்கு எல்லாம் என்பதால் மற்றவரிடம் கை குலுக்குவதை கூட தவிர்ப்பவர் இவர். இவரிடம் தாளம் பயில பலர் காத்துக் கிடக்கின்றனர்.

இவருக்கு மிருதங்களை செய்துக் கொடுக்கும் குமரவேலின் மகன் ஜிவி. பிரகாஷ் இவரிடம் தாளம் பயில ஆசைப்படுகிறார்.

ஏற்கெனவே அவனிடமும் இசை ஆர்வம் இருப்பதால் கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார் நெடுமுடி வேணு.

ஆனால் கீழ்ஜாதியை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் தன் குருவிடம் பயில்வதை தாங்க முடியாத வினீத் சில பிரச்சினைகளால் வெளியேறுகிறார்.

தன் குருவை எப்படியாவது மிஞ்சி விட துடிக்கிறார்.

இதனிடையில் மற்றொரு பிரச்சினையால் ஜிவி. பிரகாஷையும் வெளியே அனுப்புகிறார் நெடுமுடி வேணு.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்? மிருதங்க தாளத்தில் சாதித்துக் காட்டினாரா? வினீத் என்ன செய்தார்? யார் ஜெயித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்து அலட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜிவி. பிரகாஷ்.

ஒருவேளை ஜிவி பிரகாஷ் கேரக்டரில் மற்ற நடிகர்கள் நடித்திருந்தால் நம்மால் இந்தளவு ரசித்திருக்க முடியாது. இவர் ஒரு இசையமைப்பாளர் நம்மால் அந்த கலையை கூடவே நடிப்பையும் ரசிக்க முடிகிறது.

ஆனால் மாபெரும் நடிகர் நெடுமுடி வேணுவுடன் நடிக்கும் காட்சிகளில் திணறியிருக்கிறார் ஜிவி. பிரகாஷ். அடிக்கடி முகத்தை மூடி அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் நெடுமுடி வேணு இவரை வாழ்த்தும் போது உற்சாகத்தில் துள்ளாமல் முகத்தை ஏதோ நார்மலாக வைத்திருப்பது நமக்கே நெருடலாக இருக்கிறது. பாலா பட்டறைக்கு சென்று வந்த பிறகும் இப்படி இருக்கலாமா ஜிவி பிரகாஷ்..?

படத்தின் 2வது நாயகனாக வேம்பு ஐயராக வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நீயெல்லாம் நம்பர் 1ஆக வர முடியாது. ஏனா நான்தான் நம்பர் 1 என்று சொல்லும்போதும் கர்வம் தெரிகிறது.

தாளத்துடன் படத்தில் காமெடியையும் இவரே அழகாக செய்திருக்கிறார்.

நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தான் இப்பட நாயகி. தமிழில் 8 தோட்டக்கள், தீதும் நன்று படங்களில் நடித்துள்ளர்.

சர்வம் தாளமயம் பட நாயகி என்றாலும் ஜிவி. பிரகாஷ்க்கு அக்கா மாதிரி இருக்கிறார். முகத்தில் அவ்வளவு மெச்சூரிட்டி. மற்றபடி நடிப்பில் குறையில்லை.

இதிலும் டிவி தொகுப்பாளராக வருகிறார் டிடி. ரியால்ட்டி ஷோக்களில் நடக்கும் தில்லு முல்லுகளையும் அப்பட்டமாக காட்டியிருப்பது சிறப்பு. கூடவே திறமையானவருக்கு மரியாதை எப்படியாவது வந்தே சேரும் என காண்பித்திருப்பது மிகச் சிறப்பு.

வில்லனாக வினீத். தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். யதார்த்த நடிப்பில் நம்மை எப்போதும் போல் கவர்கிறார் குமரவேல்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சர்வம் தாளமயம் படத்தின் சர்வமும் நான்தான் என நிரூபித்திருக்கிறார் ஏஆர். ரஹ்மான்.

கர்நாடக இசை சாரலில் நம்மை நனைய வைத்திருக்கிறார். அதற்கேற்ப ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும் இசைந்து கொடுத்திருக்கிறது.

சர்வம் தாளமயம் மற்றும் வரலாமா பாடல்கள் என்றும் கேட்கும் ரகம்.

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் இடைவேளை வரை படம் செல்வதே தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இசையுடம் பயணிக்க முடிகிறது.

ஆனால் 2ஆம் பாதியில் கொஞ்சம் நீள்கிறது. க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் கலந்துக் கொடுத்திருக்கலாம்.

ஜிவி. பிரகாஷ் தன் குருவை விட்டு வந்த பிறகு, எதற்கு மனித குருவை தேடிப் போகிறாய். இயற்கையில் இல்லாத இசையா? அதில் உன் குருவை தேடு என்கிறார் அபர்ணா. ஆனால் இறுதியில் குருவிடமே செல்கிறார் ஜிவி. ஒருவேளை இதுதான் குரு பக்தியோ..?

நல்லவேளை ஜாதி மோதல் பற்றி காண்பித்துவிட்டு அதை அப்படியே விட்டு விட்டார் டைரக்டர். இல்லையென்றால் இசை திசை மாறியிருக்கும்.

ஆக இசையில் லயிக்கும் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.

சர்வம் தாளமயம்… மிருதங்கமும் மீளாத மனமும்…

Comments are closed.

Related News

இசையமைப்பாளராக பிஸியாக இருந்த போதிலும் நடிகராகவும்…
...Read More