மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

நடிகர்கள்: தம்பி ராமையா, உமாபதி, மிருதுளா முரளி, பவன், ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் – தம்பி ராமையா
ஒளிப்பதிவு – விகே. வர்மா
இசை – தம்பி ராமையா
தயாரிப்பு : தேன்மொழி

கதைக்களம்…

வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து அதிகாரம் செய்யும் ஒரு தந்தையின் அடாவடித்தனம்தான் இந்த மணியார் குடும்பம்.

தன் தாத்தா, அப்பா சேர்த்த சொத்துக்களை விற்று சாப்பிடும் அப்பா (தம்பி ராமையா) அவரை தாங்கும் மனைவி, அம்மா, மனைவியுடன் ஒட்டிக் கொண்ட தம்பி (மச்சான்), தம்பிராமையாவின் மகன் உமாபதி என ஒரே குடும்பமாக வாழ்கின்றனர்.

உமாபதிக்கு உறவுக்கார பெண் மிருதுளாவை கேட்கின்றனர். வேலை வெட்டியில்லாத பையனுக்கு பெண் தர மறுக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

எனவே காற்றாலை (வின்ட் மில்) தொழில் தொடங்க நினைக்கின்றனர். அதன்படி ஊரில் உள்ளவர்களை பங்குதாரர்களாக சேர்க்க, எல்லாரிடமும் பணம் வாங்குகின்றனர்.

ஆனால் அந்த பணம் கொள்ளை போகிறது. இதனால் ஊரே இந்த மணியார் குடும்பத்திற்கு எதிராக திரும்புகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? பணத்தை யார் கொள்ளையடித்தார்? காற்றாலை நிறுவனம் என்ன ஆனது? உறவுக்கார பெண்ணை மணந்தாரா உமாபதி? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு, பாடல், இசை, இயக்கம் என பல பொறுப்புகளை தாங்கியிருக்கிறார் தம்பிராமையா.

அவருக்கே உரித்தான அப்பாவித்தனத்தில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இசையில் நம்மை அறியாமல் தாளம் போட வைக்கிறார்.

இவர் திடீரென திருந்துவதாக காட்சிகள் நம்பும் படியாக இல்லை. அதில் பல தத்துவங்களை பேசுகிறார்.

நாயகன் உமாபதி நடனத்தில் அவரது உயரத்திற்கு ஏற்ப உச்சம் தொடுகிறார். வளைந்து வளைந்து ஆடி நடன பிரியர்களை கவர்கிறார்.

பொறுப்பான மாமன் மகளாக மிருதுளா முரளி மிளிர்கிறார். காதலனுக்கான இவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.

அப்பாவி கணவருக்கு மனைவியாக ஸ்ரீரஞ்சனி கச்சிதம்.

நடிகர் பவன் காட்சிகளில் இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். மிரட்டல் வில்லனாக இவரையே கடைசி வரை காட்டியிருந்தால் பக்காவாக இருந்திருக்கும்.

படத்தில் பல கலைஞர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரின் கேரக்டர்கள்தான்.

தக்காளி பழமே பாடலில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது டைரக்சனை தொடங்கியுள்ளார் தம்பி ராமையா. அதில் தனது மகனை ஆடவைத்திருக்கிறார். நடிப்பில் இன்னும் முயற்சிகள் தேவை. செயற்கையாக இருக்கிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தம்பி ராமையா கவர்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

பாட்டி கதை ஞாயிறு… இந்த காட்சிகளை எல்லாம் நம்மை சோதிக்கிறது.

மணியார் குடும்பம்… இயக்குனர் தம்பி ராமையா தடுமாற்றம்

Maniyar Kudumbam review and rating

Comments are closed.