நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா, குமரவேல், மதுமிதா மற்றும் பலர்.
இசை- இளையராஜா
ஒளிப்பதிவு- விவேக் ஆனந்தன்
இயக்கம்- ராதாமோகன்
பி.ஆர்.ஓ. – டைமண்ட் பாபு
தயாரிப்பு – கலைப்புலி எஸ் தாணு
கதைக்களம்…
படத்தின் தலைப்பிலேயே பாதி புரிந்திருக்கும். 60 வயது மதிக்கத்தக்க மாநிறம் கொண்ட ஒருவரை காணவில்லை.
தன் தந்தை பிரகாஷ்ராஜ் இருக்கும் போது அவரின் அன்பை உணராத ஒரு மகன் தன் அப்பாவை தொலைத்துவிட்டு தேடி அலையும் கதை.
மும்பையில் வேலை பார்க்கும் விக்ரம் பிரபு, தன் அப்பாவுக்கு அல்சைமர் நோய் (ஞாபக மறதி) இருப்பதால் ஒரு கேர் சென்டரில் பணம் கொடுத்த தங்க வைக்கிறார்.
ஒருநாள் அப்பாவை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்கிறார். திரும்பி வந்து விடும் வேளையில் வாசலிலேயே கொண்டு விட்டு செல்கிறார்.
திசை மாறி போகும் பிரகாஷ்ராஜ் ஒரு கொலைக்கார (சமுத்திரக்கனி) கும்பலிடம் சிக்குகிறார்.
அவரை வைத்துக் கொண்டு குமரவேல் வீட்டில் தஞ்சம் புகுந்து கொள்கிறார் சமுத்திரக்கனி.
அதன்பின்னர் என்ன நடந்தது? மகனுக்கு அப்பா கிடைத்தாரா? சமுத்திரக்கனி போலீசில் சிக்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
விக்ரம் பிரபுக்கு இது ஒரு வித்தியாசமான படம். ஆக்சனில் ஜொலிக்கும் அவர், இதில் சென்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார்.
பெற்றோரை கவனிக்காமல் வேலை பிஸி என சுற்றுத் திரியும் மகன்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு பாடத்தை கற்பிக்கும்.
நாயகன், நாயகி என எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் 60 வயது முதியவராக பிரகாசிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மறந்து நிற்கும் இவர் தன் அப்பாவித்தன நடிப்பால் அசத்திவிடுகிறார்.
இவர் நல்லவனா? கெட்டவனா? என்று தெரியாத அளவுக்கு சமுத்திரக்கனி. ஆனால் இவரது கேரக்டரில் கொஞ்சம் வலுவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் திடீரென திருந்துவது. கொலை செய்யும் தொழிலை கொள்ளும் இவர் மற்றவர்களை கொல்ல நினைக்க யோசிப்பது ஏன்..?
குரங்கு பொம்மையில் வில்லனாக மிரட்டிய குமரவேல் இதில் காமெடியில் கலக்கியிருக்கிறார். சீரியசான படத்தை சிரமம் கொடுக்காமல் கொண்டு செல்கிறார் இந்த மனிதர்.
கொலைக்கார கும்பலை விரட்ட ஒரு ஐடியா. நீ சம்பார் வை அவங்க எல்லாம் ஓடி போய்டுவாங்க என இவர் மதுமிதாவிடம் சொல்லும்போது, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த போது நான் கவலைப்படல. என்கிட்ட 100 ரூபாய் நோட்டு 2 இருந்துச்சி என சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.
மேயாத மான் இந்துஜாவுக்கு இதில் நாயகி வேடம். தேவையான நடிப்பை கொடுத்து கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறார்.
இவர்களுடன் மதுமிதா, சமுத்திரக்கனி உதவியாளர், அவரின் காதலி அனைவரும் கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.
அப்பா மகன் பாசத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் டைரக்டர் ராதாமோகன். ஆனால் முதல் பாதியில் இருந்த கலகலப்பு இடையில் இல்லாமல் போய்விடுவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது.
செட் 1, செட் 2, செட் 3 என்பதுபோல் காட்டிய இடங்களையே காட்டி கொண்டிருப்பதால் சோர்வை தருகிறது.
ஆனால் நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ள ராதா மோகனை பாராட்டியே ஆக வேண்டும்.
60 வயது மாநிறம்.. பாசத்தின் நிறம்
60 Vayadu Maaniram review rating