காதல் கிறுக்கன்… சீமத்துரை விமர்சனம்

காதல் கிறுக்கன்… சீமத்துரை விமர்சனம்

நடிகர்கள்: கீதன், வர்ஷா, விஜி சந்திரசேகர், மகேந்திரன், கயல் விண்செண்ட், மாமா காசிராஜன், ஊமையன் நிரஞ்சன், வில்லன் ஆதேஷ் பாலா மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்
இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு – திருஞானசம்பந்தம்
தயாரிப்பாளர் – சுஜய் கிருஷ்ணா
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்…

ஹீரோ கீதன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவரின் அம்மா விஜி சந்திரசேகர். மீன் விற்கும் தொழிலை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார் கீதன். பார்த்த உடனே காதலும் கொள்கிறார். ஆனால் வர்ஷா இவரின் காதல் வழிக்கு வர முதலில் மறுக்கிறார்.

இந்த பிரச்சினை வீட்டுக்கு தெரிய வர வர்ஷாவின் தாய்மாமன் பெண் கேட்கிறார். ஆனால் வர்ஷாவின் அப்பா இவரை செருப்பால் அடித்துவிடுகிறார்.

நாளடைவில் நாயகன் கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

ஹைட் வெயிட் என அழகாக வருகிறார் கீதன். ஆனால் நடிப்பில் இன்னும் முதிர்ச்சியில்லை.

கிராமத்து மண் வாசனை, கனகாம்பரம் பூ, பாவாடை தாவணி என பளிச்சென வருகிறார் நாயகி வர்ஷா. அருமையான நடிப்பையும் வெளியிப்படுத்தியுள்ளார்.

96 படத்தில் ஒரு காட்சியில் தன் கண்களாலேயே த்ரிஷாவிடம் பேசுவார் வர்ஷா. இதில் படம் முழுக்க தன் கண்களால் தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருவாடு மீன் விற்கும் பெண்ணாக விஜி சந்திரசேகர். பக்கா கிராமத்து அம்மாவாக அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் காசிராஜன், ஆதேஷ் பாலா ஆகியோரும் சிறப்பான தேர்வு. ஊமையன் கேரக்டரில் நடித்துள்ள நிரஞ்சன் நம் நெஞ்சங்களில் நிறைகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கிராமத்து வீடு, அந்த பகுதி மனிதர்கள் என இயற்கையோடு கொஞ்சி விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருஞானசம்பந்தம்.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்க முடிகிறது.

ஒளிப்பதிவும் பாடல்களும் நன்றாக உள்ளதால் படத்தை ரசிக்க முடிகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அதுபோல் வில்லன் கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

ஹீரோ ஆரம்பக் காட்சிகளில் அவரை ரவுடித்தனம் பன்னும் மாணவனாக காட்டி விட்டு, இறுதியில் அடி வாங்கிக் கொண்டே இருப்பதாக காட்டியது சரியாக பொருந்தவில்லை.

சீமத்துரை என்று டைட்டில் வைத்துவிட்டு கோழையாக ஹீரோ இருப்பது சரியா டைரக்டர் சாரோ?

வழக்கமான கிராமத்து காதலை அழகாக சொல்ல முயற்சித்துள்ளார். அதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட்டுகளை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.?

காரணம் நிறைய வீடுகளில் டேப் ரிக்கார்ட்டர் இருக்கிறது. அதில் 1990களில் வந்த பாடல்களே ஒலிக்கிறது. ஆனால் அண்மையில் வெளியான வீரம், கயல் பட போஸ்டர்களும் இருக்கிறது.

ஒரு வேளை இது இந்த காலமாக இருக்குமோ? என்று எண்ணினால் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை.

ஒருவர் இறந்து கிடக்கிறார் என்றால் ஓடிப்போய் தான் தகவல் சொல்கிறார்.

பிரஸ் ஷோ முடிந்தவுடன் இந்த குழப்பத்தை நாம் நேரில் கேட்டுவிட்டோம். செல்போன் இல்லாத கிராமங்கள் இருக்கிறது. இன்னும் டேப் ரிக்கார்ட்டர் இளையராஜா பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிற கிராமங்களும் இருக்கிறது என பதிலளித்தார் டைரக்டர்.

அவர் சொன்னது சரியாக இருந்தாலும் எல்லா ரசிகர்களுக்கும் இது புரியுமா? என்பது சந்தேகம்தான்.

சீமத்துரை.. காதல் கிறுக்கன்

Comments are closed.