பறந்து செல்ல வா விமர்சனம்

பறந்து செல்ல வா விமர்சனம்

நடிகர்கள் : லுத்புதீன் பாட்ஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் சதீஷ், ஆர்ஜே பாலாஜி, கருணாகரன், நரேல் கெங், ஜோ மல்லுரி, மனோபாலா மற்றும் பலர்.
இயக்கம் : தனபால் பத்மநாபன்
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் விஜயகுமார்
எடிட்டிங்: எம்.கே.ராஜேஷ் குமார்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : அருமை சந்திரன்

கதைக்களம்…

சிங்கப்பூரில் வேலை செய்யும் லுத்புதீன் அங்கு உள்ள சதீஷ், ஜோ மல்லுரி மற்றும் தோழிகளுடன் தங்குகிறார்.

ஏதாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

இவருக்கு காதலி கிடைக்காததால், ப்ரெண்ட்ஸ் கேலி செய்ய, பேஸ்புக் மூலம் ஒரு சீன காதலி கிடைத்துள்ளதாக கதை கட்டி விடுகிறார்.

நாளடைவில் அந்த சீன காதலி நிஜமாகவே இவரின் வாழ்க்கையில் வருகிறார்.

அப்போது பார்த்து இவரின் வீட்டில் பார்த்த பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார்.

இதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த பறந்து செல்ல வா.

கதாபாத்திரங்கள்…

லுத்புதீன் பாட்ஷா முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். சண்டை மற்றும் பாடல் காட்சிகள் அவ்வளவாக இல்லை. அதனால் கொஞ்சம் பிழைத்துக் கொண்டார்.

நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற்று இவரின் தந்தை நாசரின் பெயரை காப்பாற்ற வாழ்த்துவோம்.

சதீஷ் + ஆர் ஜே பாலாஜி + கருணாகரகன் என 3 காமெடியன்கள் இருந்தும் படத்தில் பெரிதாக காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. கருணாகரனுக்கு கடுகளவு கூட இதில் காமெடி இல்லை.

காக்கா முட்டை, தர்மதுரை படங்களில் நடிப்பால் மிரட்டிய ஐஸ்வர்யாவுக்கு இதில் மாடர்ன் ரோல். அதிலும் பெரிதாக கவர்ச்சி இல்லாமல் வருகிறார்.

ஜப்பான் நடிகை நரேல் கெங் ஆக்ஷனிலும் நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார்.

அருமையான வில்லனாகத்தான் நமக்கு பொன்னம்பலத்தை தெரியும் ஆனால் இதில் ஏதோ வருகிறார்.

ஜோ மல்லுரி மற்றும் இதர கேரக்டர்களுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. அதிலும் மனோபாலா, ஞானசம்பந்தம் கேரக்டர்கள் எதற்காக என்றே தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். சந்தோஷ் விஜயகுமார் ஒளிப்பதிவில் சிங்கப்பூரின் அழகை திகட்ட திகட்ட ரசிக்கலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

இதுபோன்ற இரண்டு பெண்கள் வாழ்க்கையில் மாட்டிக் கொள்ளும் பல நாயகன் படங்களை பார்த்துவிட்டோம்.

ஆனால் இதில், அவை அனைத்தும் ஒரு டிவி சீரியலுக்காகத்தான் என்று வித்தியாசமான சொன்னதில் பாஸ் மார்க் பெறுகிறார்.

ஆனால் க்ளைமாக்ஸில் கொஞ்சம் தடுமாற்றம் கண்டு இருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன்.

மொத்தத்தில் பறந்து செல்ல வா… பறக்கும் முயற்சியில்…

Comments are closed.

Related News

சைவம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர்…
...Read More
அருமைச்சந்திரன் தயாரிப்பில், தனபால் பத்மநாபன் இயக்கத்தில்…
...Read More
8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச்…
...Read More