தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செ. ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கியவர் இவர்..
நாயகனாக ஷரத் மற்றும் நாயகியாக ஐரா நடிக்கின்றனர். அருவி புகழ் மதன், விஜய் முத்து, இளையா, ஆதேஷ்பாலா, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன் & பலர்.
செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பு : பிரீத்தி சங்கர்
கதைக்களம்..
காலில் ஊனம்.. திக்குவாய் ஆனாலும் திறமையை நம்பும் ஃபுட்பால் கோச் ‘அருவி’ மதன்.
ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையான வீரர்களை ஊக்குவித்து மாநில அளவிலான போட்டிகளில் இடம்பெற முயற்சிக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வில்லன் ரத்தினம் கும்பலுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தொழில் முறையில் மோதல் உருவாகிறது.
எனவே இந்த விளையாட்டு வீரர்களின் முயற்சிகளை முறியடிக்க திட்டம் போடுகிறார் வில்லன்.
இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நாயகனாக ஷரத்.. முகத்தில் தாடி மூக்கு கண்ணாடி என பாதி முகத்தை மறைத்து விடுகிறார். ஆனால் அதையும் மீறி கோபத்தை காட்டும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். ஹீரோயின் ஐரா சொல்வதைப் போல கொஞ்சமாவது படத்தில் சிரித்து இருக்கலாம்.
நாயகியாக அயிரா. படத்தில் அனைவருமே அழுக்காக வரும் போது இவர் மட்டுமே அழகாக வருகிறார். ‘தாக்கு தாக்கு தாக்குறா..’ பாடலுக்கு ஐரா போடும் ஆட்டத்தில் இளமை ததும்புகிறது. ஆனால் பாடல் வரிகளுக்கு பொருந்தாத ஓரிரு ஸ்டெப்புகள் உள்ளதை யாரும் கவனிக்கவில்லையா? படத்தில் இவருக்கு மொத்தமே 4 காஸ்டியூம்கள் தான் போல.
வில்லன் ரத்தினத்தின் அடியாளாக வருகிறார் ஆதேஷ் பாலா. பழைய கால வில்லன் ஸ்டைலில் சிரித்து சேசிங் செய்வது அசத்தல்.
வில்லனின் தம்பியாக நடிகர் இளையா. இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருப்பவர் இவரே. இவருக்கு நாயகியுடன் ஒரு கனவு டூயட் பாடலாவது வைத்திருக்கலாம். ‘பவுடர்’ படம் போல இதிலும் இளையாவுக்கு மேட்டர் சீன்தானா.??.
கால்பந்து பயிற்சியாளராக அருவி மதன். பெரும்பாலும் இவருக்கு பல படங்களில் போலீஸ் கேரக்டர் தான். இதில் திறமையான இளைஞர்களுக்காக இவரின் போராட்டம் கண்கலங்க வைக்கிறது. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.
அதிகார ஆசாமியாக ரத்தினம் கேரக்டரில் நரேன். நாக்கை மடித்து கண்களை உருட்டி மீசையை முறுக்கி மிரட்டி இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பு. உணர்வுபூர்வமான நடிப்பில் கவர்கிறார்.
நடிகை சோனா ஒரே ஒரு காட்சியில் வந்து ரசிகர்களை சூடேற்றி செல்கிறார். அதிலும் காமநெடி வசனங்கள் கைதட்டல் அள்ளும்.
போலீஸ் அதிகாரியாக வில்லன் கைக்கூலியாக முத்துவின் நடிப்பு சிறப்பு. இவர்களுடன் கஜராஜ் & ராசி அழகப்பன் ஆகியோரும் உண்டு.
‘எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதும்.. எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு எதிராக ராசி அழகப்பன் பேசுவதும் ஒரே வார்த்தையில் இரண்டு பக்கமும் சாய்வது யதார்த்தத்தை காட்டுகிறது.
டெக்னீசியன்கள்…
வினோத்ராஜா ஒளிப்பதிவு செய்ய அலிமிர்ஸாக் இசையமைத்துள்ளார். இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தி. இடைவேளைக்கு முன்பு காட்டப்படும் பரமக்குடி பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அந்த கிராமத்து வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்தவர் பாராட்டுக்குரியவர் தான்.
அதே நேரம் இடைவேளை வரை இந்த சேசிங் காட்சிகள் மட்டுமே வருவது நம் பொறுமையை சோதிக்கிறது.
கால்பந்தாட்டம் என தலைப்பு வைத்திருந்தாலும் அவர்கள் ஆடும் களமே வேறு என்பதை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.
வில்லனுக்கும் வீரர்களுக்குமான மோதல் சாதி மோதலை அடையாளப்படுத்தாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
அதிகார வர்க்கத்திற்கு எதிராக கால்பந்தை ஹரி உத்ரா உதைத்திருப்பது பாராட்டுக்குரியது.
no6 vaathiyaar kaalpandhatta kuzhu Movie review