தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீயோன் ராஜா இயக்கத்தில் பிரஜின், நாஞ்சில் சம்பத், கே ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சமூக விரோதி’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது…
” நான் ஆண்டுக்கு 60 திரைப்பட ஆடியோ விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
இது ஒரு வித்தியாசமான விழா. இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் பலரும் வந்துள்ளார்கள்.
இந்தச் சமூக விரோதி படத்தில் இரண்டு நாள் தான் ஷூட்டிங் என்றார்கள். ஆனால் என்னை நன்றாக வேலை வாங்கி விட்டார்கள், பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். படத்தில் என்னைக் குத்திக் கொன்று விடுவார்கள்.
செத்த பிறகும் மறுபடியும் சாவு என்றனர். இப்படி ஐந்து முறை சாக விட்டு எடுத்தார்கள். எத்தனை முறை சாவது என்றேன்.
அந்த அளவிற்கு நேர்த்தியாக எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள். இன்று பெரிய ஹீரோக்கள் 10 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு இயக்குநர் வளர்ந்த பிறகு தங்களுக்குத் தான் இயக்க வேண்டும் என்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்று ஒரு தயாரிப்பாளர் படத்தை இயக்கினார். அது மாதிரி தயாரிப்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பாரா?
கொடுக்க மாட்டார். சிறிய தயாரிப்பாளர்களைப் பரிசோதனை எலிகளைப் போல அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
புதிய இயக்குநர்கள் சின்ன தயாரிப்பாளர்களிடம் தங்கள் திறமையை நிரூபித்து விட்டு, வெற்றி பெற்று விட்டு வந்த பிறகு தங்கள் படங்களை இயக்க வேண்டும் என்று பெரிய கதாநாயக நடிகர்கள் நினைக்கிறார்கள்.
இன்று சமூக விரோதிகள் பட்டியலில் யார் இருக்கிறார்கள்?
லஞ்சம் வாங்குபவன், அடுத்தவன் சொத்தை அபகரிப்பவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம் . இந்தச் சமூக விரோதி படம் மக்களால் வரவேற்கப்படும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசும்போது,
‘நான் சில சினிமா விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இது வித்தியாசமான விழாவாக இருக்கிறது. நிறைய அரசியல் ஆளுமைகள் வந்து இருக்கிறார்கள். மக்கள் மற்றும் பிரமுகர்கள் கொண்ட திரள் இங்கே வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் சமுதாயத்திற்கு எதிரான சமூக விரோதிகள் பற்றிய மக்களிடம் எடுத்துக் கூறும் படமாக இருக்கும் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
இன்று போதைக் கலாச்சாரத்தை பரப்பி மக்களைத் தவணை முறையில் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமநிலை சமுதாய நோக்கமாக இம் முயற்சிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் உண்டு. . இந்த முயற்சியில் வெற்றி பெற இயக்குநரை வாழ்த்துகிறேன் “என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் பேசும்போது,
“முதலில் நான் இந்தப் படத்தின் தலைப்பைப் பாராட்டுகிறேன் அருமையான தலைப்பு .நான் சுற்றுப் பயணத்திலிருந்து வந்திருக்கிறேன்.
நாலைந்து நாட்களாகத் தூக்கம் இல்லை. இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன். பாலச்சந்தர் தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படமெடுத்துக் குடிநீர்ப் பிரச்சினையைச் சமூகப் பிரச்சினையாக மக்களிடம் பேச வைத்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது.
நம் நாட்டில் அசந்தால் தேசவிரோதி என்பார்கள்.
தேசத்தைப் பற்றிக் கவலைப் படுபவனைத் தேச விரோதி என்பார்கள்.
சமூகத்தைப் பற்றி கவலைப்படுபவனைச் சமூக விரோதி என்பார்கள்.இனிமேல் தேசவிரோதி என்றுதான் படம் எடுக்க வேண்டும் .
பத்திரிகை போல சினிமாவிற்கும் அதிகமான சமூகப் பொறுப்பு உண்டு. எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. முன்பெல்லாம் என்னைக் கல்லூரிகளுக்குப் பேச அழைப்பார்கள். இப்போது அழைப்பதில்லை.கல்லூரிகளில் அரசியல் அறிவியல் பாடமாக உள்ளது. ஆனால் அரசியல்வாதிகளை அழைக்க மாட்டார்கள்.
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு லோக் ஆயுக்தா வந்த பிறகு தான் கர்நாடகத்தில் எடியூரப்பாவை விரட்டி அடிக்க முடிந்தது. இங்கேயும் வர வேண்டுமென்று போராடினோம்.
நான் பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தேன். இந்தப் படத்துக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு” என்றார்.
படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது….
” நான் இத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு சிறப்பான படம் என்று எனது உள்ளுணர்வு சொன்னது. இந்தப் படம் வெற்றிபெறும் , இந்தப் படம் இறங்கி அடிக்கும் என்று என் மனதிற்குப் பட்டது.
ஒரு படம் முயற்சி சரிவர அமையவில்லை என்றால் அந்த இயக்குநர் சிறிது காலம் முயற்சி செய்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவார். ஆனால் இந்த இயக்குநர் இந்தப் படத்திற்காகத் தனது சொத்தை அடமானம் வைத்துள்ளார்.
இந்தப் படத்திற்காக நான்கு பேர் உதவி இருக்கிறார்கள். அந்த நாலு பேர் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிகழ்ச்சி எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது .
நான் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வளர்ந்து வந்தோம் என்றால் யாரையும் அழைக்கும் போது போனைக் கூட எடுக்க மாட்டார்கள் . அப்படி இருந்தும் எனது நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
எனக்கு நண்பர்களும் குடும்பமும் பக்கபலமாக இருக்கிறது. அப்படிப் பக்கபலமாக உள்ளவர்கள் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.இந்தப் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறேன் “என்றார்.
Will Lokesh direct small budget movies says K Rajan