தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கிய படம் ‘நினைவெல்லாம் நீயடா’.
இந்த படத்தில் பிரஜின், மதுமிதா, ரோஹித், யுவலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது…
“ஆதிராஜன் நான் பாடல் எழுத துவங்கிய காலகட்டத்தில் இருந்து எனக்கு நெருங்கிய நண்பர். அவரது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் இந்த “நினைவெல்லாம் நீயடா” படம் வந்திருக்கிறது. இதில் மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
இதுவரை நான் 3000 பாடல்கள் எழுதி இருந்தாலும் அதில் 30 பாடல்கள் தான் கமர்சியல் பாடல்கள். 500 பாடல்களாவது மிகச்சிறந்த பாடல்கள் ஆக இருக்கும் என நான் நம்புகிறேன்.
இந்தப் பாடல்களைத் தூக்கி விமர்சனம் செய்ய விரும்பாத இந்த சமூகம் என்னுடைய கமர்சியல் பாடல்களை எடுத்து விமர்சனம் செய்து கொண்டு, ‘இதுதான் சினேகன்’ என்று சொல்லும்போது எனக்கு வலிக்கிறது.
நானும் கதைக்கு பாடல் எழுத வேண்டும் என்று தான் ஓடி வந்தேன். இந்த சினிமா என்னை சதைக்கு பாடல் எழுத வைத்து விட்டது. என்னுடைய முகவரி அது அல்ல. என்னுடைய முதல் படத்திலேயே விருது வாங்கியவன் நான்.
இந்த சமூகம் ஏன் நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டாட மாட்டேன் என்கிறது? காதல் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. அப்படி எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. இங்கே தோற்பது காதலர்கள் தானே தவிர காதல் ஒருபோதும் தோற்காது: என்று கூறினார்.
இயக்குநர் கே.ஆர் பேசும்போது…
“இந்த விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் ஏதோ பேச வேண்டும் என்று நினைத்து தங்களை அறியாமல் உண்மையை பேசி உள்ளார்கள்.
ஒரு பட்டிமன்றம் ஆகவே இந்த விழா மாறிவிட்டது. ஆதிராஜனை எனக்கு ஆதி காலத்திலிருந்தே தெரியும். பத்திரிகை துறையில் இருந்து அவர் இயக்குநராக வந்திருந்தாலும் பல போராட்டங்களைத் தாண்டித்தான் இந்த இடத்தில் நிற்கிறார்.
இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல.. தமிழ் நாட்டுக்கே பெருமை. அப்படி ஒரு இசை மேதை இல்லை என்றால் இன்று நம் சினிமா எப்போதோ செத்துப் போய் இருக்கும்” என்று கூறினார்.
நாயகன் பிரஜின் பேசும்போது…
“முதல் காதல், முதல் முத்தம் என எல்லாமே ஞாபகம் இருக்கும். வரும் பிப்ரவரி 14 வந்தால் எங்களது காதலுக்கு பதினாறு வருடம். எனக்கு இரண்டு குழந்தைகள் (ட்வின்ஸ்) உள்ளனர்.
என் அம்மா அப்பாவைத் தாண்டி இந்த இடத்திற்கு நான் வர மிகவும் ஆதரவாக இருந்தவர் என் மனைவி சாண்ட்ரா.
இந்தப் படத்தில் இயக்குநர் ஆதிராஜன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகப் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார்.
முதல்முறையாக இந்த படத்தின் பூஜையின் போது தான் நான் இளையராஜா சாரை பார்த்தேன். அவரைப் பார்த்த போது பேச்சே வரவில்லை. எப்போதும் காதல் தோல்வி அடைந்தது இல்லை.. அதே போல காதல் படமும் தோல்வி அடையாது” என்று கூறினார்.
தயாரிப்பாளர் ராயல் பாபு பேசும்போது…
“ஆதிராஜன் என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லும்போதே முதல் காதலை கொண்ட ஒரு திரைப்படம் என்று சொன்னார்.
எனக்கு ரொம்பவே கதை பிடித்து இருந்தது. படத்திற்கு பூஜை போடுவதற்காக எங்கெங்கோ இடம் தேடி அலைந்தபோது இசைஞானி இளையராஜா எங்களை அழைத்து எங்கேயும் போக வேண்டாம் என்னுடைய இடத்திலேயே பூஜையை நடத்துங்கள் என்று கூறி இடம் கொடுத்தார்.
ஒரு புது தயாரிப்பாளராக எனக்கு அவர் கொடுத்த மரியாதை மிகப் பெரிய சந்தோஷம்” என்று கூறினார்.
Lyricist Snehan speech about his part in Ninaivellam Neeyada