தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா, சௌந்தரராஜா, சந்திரசேகரா, சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி, படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின், கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான், நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது…
“இந்தச் சமூக விரோதி படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.
இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்திற்காகப் பலரையும் நாம் அணுகிக் கேட்டபோது அனைவரும் இந்தக் கதைக்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படப்பிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார்.
நான் பொழுதுபோக்குக்காகப படம் எடுப்பவன் அல்ல. கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு தர வேண்டும் “என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும்போது,
” இந்த நாட்டின் சமூக விரோதிகள் யார் தெரியுமா ?” என்று தொடங்கியவர் ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் குற்றம் சாட்டினார்.
மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் சமூக விரோதிகள் தான் என்று அவர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா பேசினார்.
அப்போது “எதற்கெடுத்தாலும் திரைப்பட நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகப் படங்களில் நடிக்கிறார்கள். சம்பளம் பெறுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஏன் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்றார்.
அதன் பிறகு இந்த நிகழ்ச்சி வாதப்பிரதிவாதங்களால் வெப்பமடைந்து பரபரப்பாகி சூடேறியது.
Don’t pull actors for all public issues says Soundararaja