தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.
‘சவரக்கத்தி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஒரு பாமரனாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த டெவில் இசையமைத்திருக்கும் இப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
எழுத்தாளர் தேவி பாரதி பேசும் போது, “எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. நான் பல ஆண்டுகளாகவே இலக்கியத்தில் இருந்து வருகிறேன். நாவல், சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதி இருக்கிறேன். காலச்சுவடு பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இப்பொழுது உடல்நிலை சரியில்லை என்பதால் என்னால் அதிகமாகப் பேச முடியவில்லை. விரைவில் நான் உடல்நலம் சரியாகி வருவேன். அதற்குப் பிறகு திரைப்படங்கள் எனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். ” என்று பேசினார்.
இயக்குநர் மிஷ்கினுக்கு குருவாக இருந்து இசை கற்றுத் தரும் இசை மேதை பீம்சென் ஜோஷி அவர்களின் சிஷ்யரான 90 வயது நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி அவர்கள் பேசும் போது…
”இன்று காலையில் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்தோம். ஸ்வாதி சிந்து என்னும் ஒரு புதுவகையான ராகத்தை இரண்டு ராகங்களை கலந்து நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.
நான் 53 வருட காலமாக குறைந்தது 10000 நபர்களுக்கு இசை கற்று கொடுத்திருப்பேன். சைந்தவி, விஜய் பிரகாஷ் ஆகியோர் எனது மாணவர்கள் தான்… ஆனால் என்னுடைய சிறந்த மாணாக்கன் என்றால் அது மிஷ்கின் என்று தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு நாளில் எட்டரை மணி நேரம் பயிற்சி செய்கிறான்.
நான் போன் செய்தால் பேசுவது இல்லை, அவன் பயிற்சி செய்யும் ஓசை தான் கேட்கிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் வேலை செய்தால், இசை தானாகவே வரும். அது மிஷ்கினுக்கு நடந்திருக்கிறது. என்னுடைய சிறந்த மாணவனின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.”
இயக்குநர் கதிர் பேசும் போது…
“உண்மையாகவே மிஷ்கின் ஒரு டெவில் தான், ஏனென்றால் என்னிடம் பணியாற்றும் போது பேய்த்தனமாக அசுரத்தனமாக வேலை செய்வான். எல்லா உதவி இயக்குநர்களும் தூங்கிவிடுவார்கள். மிஷ்கினும் வெற்றிமாறனும் மட்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். Casual Affair புத்தகத்தைப் பற்றி விடியவிடிய பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம். அதை மிஷ்கின் குறைந்தது 25 முறையாவது படித்திருப்பான். அவனுக்கு இப்பொழுது இசை பைத்தியம் பிடித்திருக்கிறது. கண்டிப்பாக ஒரு இயக்குநராக வெற்றி பெற்றதைப் போல் ஒரு இசையமைப்பாளராகவும் மிஷ்கின் வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். மிஷ்கினுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
Mysskin is really Devil says Director Kathir