தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதித்யா இயக்கத்தில் விதார்த் – பூர்ணா நடித்துள்ள படம் ‘டெவில்’.
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது…
“மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது.
“Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது. மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே. வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜய்யின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார்.
இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு Courage, Confident and Commitment தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார். எனவே இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே ஒரு படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் பேசும் போது…
“மிஷ்கின் அவர்களின் திரைப்படங்களில் வரும் பின்னணி இசையே எந்தவித சாயலும் இன்றி ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். அப்படித்தான் அவர் இப்பொழுது இசை அமைத்து இருப்பதும், வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஒரு தனித்துவம் அதில் தெரிகிறது. எனக்கு அதிகமாக பேச வராது. இசையமைப்பாளராக மிஷ்கின் அவர்கள் வெற்றி பெறுவதற்கும், இயக்குநராக ஆதித்யா வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.
இசை விமர்சகர் ஷாஜி பேசும் போது…
“இன்று இந்த மேடையில் மிஷ்கினை ஒரு இசையமைப்பாளராக பார்ப்பது எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் என்னை பொருத்தவரை மிஷ்கின் எப்பொழுதுமே இசையோடு இருப்பவர் தான். அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகமே அவர் இரண்டு படங்கள் எடுத்தப் பின்னர், ஒரு இசை குறித்த விவாதத்துடன் தான் தொடங்கியது. மிஷ்கின் ஒரு பைத்தியக்காரர் போல 24 மணி நேரமும் வெஸ்டர்ன் க்ளாசிக் இசையினை கேட்டுக் கொண்டே தான் இருப்பார். திடீரென்று நள்ளிரவு மூன்று மணிக்கு போன் செய்து, இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா..? என்று பேசத் துவங்குவார்.
பெரும்பாலும் நாம் தமிழ்ப்பாடல்கள் தான் கேட்போம்,. ஆனால் அவருக்கு பழைய இந்தி பாடல்கள் மீதும், மைனஸ் ஸ்கேல் இசையின் மீதும், இளையராஜா இசையின் மீதும் மிகப்பெரிய அபிமானம் உண்டு. அப்படி ஒரு Intensive- ஆன மியூசிக் listener. நானும் ஒரு மியூசிக் listener தான், ஆனால் என்னால் வாழ்நாளில் கண்டிப்பாக இசை அமைக்க முடியாது.
அதற்கு ஒரு பெரிய டெடிகேஷன் தேவைப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் எனக்கு போன் செய்து, கல்கத்தாவில் இருந்து ஒரு ஹார்மோனியம் வாங்க வேண்டும். எப்படி வாங்குவது என்று கேட்டார். நான் ட்ரிபிள் ரீட் ஹார்மோனியம் வாங்கலாம் மிஷ்கின், ஆனால் இந்த காலகட்டத்தில் எப்படி வாங்குவது என்று தயங்கினேன். ஆனால் அவர் அதை வாங்கிக் காட்டினார். அதையும் அவர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு மியூசிக்கல் பியானோவையும் வைத்து பயிற்சி செய்து கொண்டே இருப்பார் எப்பொழுதும்.
எனவே இசையின் அவர் இன்னும் ஆழமாகப் போககூடியவர் தான். அதனால் தான் இந்த வயதில் கூட ஒரு மாஸ்டரை வைத்துக் கொண்டு இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கற்று வருகிறார்.
அது போல் உலகளவில் சார்லி சாப்ளின், வூடி ஆலன், க்ளைண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் டேவிட் லின்ச் போன்ற இயக்குநர்கள் இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார்கள். அது ஒரு நீட்சி என்றே நான் கருதுகிறேன். அது போல் இயக்குநர் ஆதித்யாவின் சவரக்கத்தி படத்தில் ஒரு பைத்தியமாக நடித்தேன்.
டெவில் படத்தில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பாதிரியார் ஆக நடித்திருக்கிறேன். இரண்டு கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் திருமணம் செய்து வைத்தப் பின்னர் தான் இந்த கூத்தெல்லாம் நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது குற்றவுணர்வாக இருக்கிறது. ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதற்காக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரைக்கும் ஆதித்யா மிஷ்கினின் தம்பி என்பதே எனக்குத் தெரியாது. இது அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.
”டெவில்” படத்தின் தயாரிப்பாளர் இராதாகிருஷ்ணன் பேசும் போது…
“இந்த இசை வெளியீட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள். இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்று எண்ணிணோம். ஆரம்ப காலகட்டங்களில் பாய் என்பவரும் பின்னர் எங்கள் நண்பர் ஹரியும் எங்களோடு இணைந்ததால் இப்படத்தை சிறப்பாக தயாரித்துள்ளோம். இசை அமைக்க ஒத்துக் கொண்ட இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மற்றொரு தயாரிப்பாளர் ஹரி பேசும் போது…
“இப்படம் லவ் டுடே” போல் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறோம். ஆதரவு அளியுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி பேசும் போது…
“மிஷ்கின் சாரின் திரைப்படங்களின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கான மரியாதை உயர்ந்து வருகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது…
“இயக்குநர் ஆதித்யாவிற்கு என் வாழ்த்துக்கள், ஏனென்றால் ஒரு டெவிலை வைத்தே அவர் வேலை வாங்கி இருக்கிறார். எனவே அவர் முதல்படியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். இசை வெளியீட்டிற்கு அழைத்த போது, ஏதோவொரு படம் என்று சுவாரஸ்யம் இன்றி தான் இருந்தேன். ஆனால் அந்த அழைப்பிதழின் கலர் மற்றும் டிசைனைப் பார்த்த போதும், அதற்குள் மிஷ்கின் இசையமைப்பாளர் என்று பார்க்கும் போது, ஓ மிஷ்கின் இசையமைப்பாளராகவும் ஆகிவிட்டாரா..? என்று தோன்றியது.
ஆனால் அவர் முன்னிலையில் இசைக் கலைஞர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல்களை இசைத்த போது மிரண்டு போனேன். எனக்கும் இசை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இந்தப் பாடலைப் போல் கொடுங்கள் என்று இளையராஜாவிடம் கேட்பேன்.
அவ்வளவு தான் எனக்குத் தெரியும். முன்பெல்லாம் சினிமா எடுப்பது கஷ்டம். ஆனால் வெளியிடுவது எளிது, இப்பொழுதெல்லாம் சினிமா எடுப்பது ஈஸி ஆகிவிட்டது. ஆனால் அதை ரீலீஸ் செய்வது மிக கடினமானதாக மாறிவிட்டது. மேலும் முன்பு பத்து நாட்களுக்குப் பின்னர் கூட ஒரு படம் பிக்கப் ஆகி பெரும் வெற்றி அடையும். ஆனால் இப்பொழுது ஒரு படத்தின் ஆயுள் என்பது வெறும் மூணு நாட்கள் தான். ஒரு சுனாமி போல் வந்து ஓடிவிடுகிறது. என்னதான் மிஷ்கின் இயக்குநராக இருந்தாலும் அவருக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அவரின் தம்பி தான் முதன்முறையாக கொடுத்திருக்கிறார்.
இப்படம் வெற்றி அடையவும், இசையமைப்பாளராக மிஷ்கின் வெற்றி அடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
Even in Youth movie Mysskin helped for Music says Vettrimaran