தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வு பூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்தின் டிரைலர் இன்று (ஆக-14) வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் இந்தப்படத்தின் டிரைலரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிடுகிறார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படம் கடந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றது. இப்படம் நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டுதான் ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அந்தப்படம் நீதியரசர் சந்துருவின் புகழை தமிழக மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டியது.
ஒய்வு பெற்ற பின்பும் தமிழக அரசு அமைத்த ஆணையங்களில், ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு என்பது குறிப்பிட தக்கது.
கருமேகங்கள் கலைகின்றன படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப்போன்ற ஒரு நேர்மையான நீதிபதி பாத்திரம் தான். அதனால் இந்தப்படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரும்பினர். அதனை ஏற்றுக்கொண்டு இந்தப்படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் நீதியரசர் சந்துரு.
இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செப்-1ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Chandru launched Karumegangal Kalaigindrana Trailer