ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

ஆரோக்யத்துக்கு ஆன்லைனில் ஆப்பு… பெட்டிக்கடை விமர்சனம் (3/5)

நடிகர்கள்: சமுத்திரக்கனி, மொசக்குட்டி வீரா, சாந்தினி, வர்ஷா பொல்லம்மா, சுந்தர், அஸ்மிதா, மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – இசக்கி கார்வண்ணன்
ஒளிப்பதிவு – அருள் சீனிவாஸ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
இசை – மரியா மனோகர்
தயாரிப்பு – இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்..

இன்று நாம் எந்த பொருளை வாங்க நினைத்தாலும் வெளியே செல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடுகிறோம். நம் தேவைகளை இப்படியாக உடனடியாக கிடைத்தாலும் நம்மை நம்பி பக்கத்தில் கடை வைத்திருக்கும் பெட்டிக்கடைகள் அழிந்து வருகிறது.

நமக்கு பிடித்த பொருட்களை ப்ரெஷ்ஷாக அண்ணாச்சி கடையில் வாங்குவோம். ஆனால் ஆன்லைன் பெயரில் பல மாதங்களாக வைத்திருந்த உணவு பொருட்களை நாம் வாங்கி உட்கொட்கிறோம்.

வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நம்மை ஆளத் தொடங்கிவிடும் என்பதை அடித்துக் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக வருகிறார் சாந்தினி. ஒரு அவசர தேவைக்கு கூட ஒரு பொருளை வாங்க முடியாத நிலையில் அந்த கிராமம் உள்ளது. ஏனென்றால் பெட்டிக்கடையே அங்கு இல்லை.

கே லைன்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்தால் உடனே டெலிவரி செய்கின்றனர். இதற்கு பின்னணியில் அரசு அதிகாரிகளும் அரசும் உள்ளது அவருக்கு தெரிய வருகிறது.

எனவே ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் அந்த ஆன்லைன் வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார் சாந்தினி.

இறுதியில் ஆன்லைன் நிறுவனத்தை ஒழித்தாரா? என்ன செய்தார்? சமுத்திரக்கனி யார்? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மொசக்குட்டி வீரா தான் படத்தின் நாயகன். வர்ஷாவை காதலிப்பதை முதல் பாதியில் செய்கிறார். 2ஆம் பாதியில் ஊருக்காக போராடி சாதித்து காட்டுகிறார்.

வழக்கம்போல சமூக கருத்துக்களை சொல்லி ஓவர் அட்வைஸ் செய்கிறார் சமுத்திரக்கனி. அதுவும் கிட்டி பில் பயிற்சி சொல்லித்தர இவர் ஊருக்கு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதை இவரிடம் ஊர் மக்கள் சொல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என்பதே தெரியவில்லை.

அப்பாவியான முகத்தாலும் அழகான கண்களாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் வர்ஷா பொல்லம்மா.

முதலில் சாதாரண பெண்ணாக வந்தாலும் இறுதியில் சாதித்து காட்டுகிறார் சாந்தினி. இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

அழகும் திறமையும் உள்ள நடிகையாக அஸ்மிதா. ஆன்லைனை அழிக்க இவர் எடுக்கும் முடிவு வித்தியாசமான முடிவுதான்.

மொட்ட ராஜேந்திரன், ஆர்வி. உதயகுமார், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருந்தாலும் இவர்களின் கேரக்டர்களில் சுத்தமாக வலுவில்லை. அதுவும் மொட்ட ராஜேந்திரன் காமெடிகள் மொக்க.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மரியா மனோகரின் இசையும், அருள், சீனிவாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும் நமக்கு ஆறுதல் தருகிறது.

எடிட்டர் சுரேஷ் அர்ஸ் அவர்களும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

அனைத்திலும் ஆன்லைன் வரலாம். ஆனால் அது நமக்கே ஆபத்தாய் முடியும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடுத்துள்ளார் டைரக்டர் இசக்கி கார்வண்ணன்.

அவருக்கு இது முதல் படம். படத்தின் நாயகனுக்கும் இசக்கி பெயரை வைத்துவிட்டார். அது ஏனோ-.?

சமுத்திரக்கனி வந்தபின்தான் படம் டாப் கியரில் செல்கிறது. அதுவரை கிராமத்து காதல் என சில காட்சிகளால் போரடிக்க வைத்துவிட்டார்.

முன்பெல்லாம் எல்லா நோய்க்கும் ஒரே டாக்டர் இருப்பார். அப்ப நோயே இருக்காது. ஆனால் இப்போ ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால் எந்த நோயும் தீரவில்லை என்ற வசனங்கள் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார் டைரக்டர் இசக்கி.

ஆன்லைன் வியாபாரத்தில் தவிர்த்து பெட்டிக்கடைகளுக்கு வாழ்வு கொடுத்து ஆரோக்யமாக வாழ்வோம் என்ற சொல்லப்பட்டுள்ள மெசஜுக்காக இந்த ‘பெட்டிக்கடை’ க்குள் சென்று வரலாம்.

பெட்டிக்கடை… ஆரோக்யத்துக்கு ஆன்லைன் ஆப்பு

Pettikadai Movie review rating

Comments are closed.