நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ராஜேந்திர பிரசாத், பானுப்பிரியா மற்றும் பலர்
இயக்கம் : நாக் அஷ்வின்
இசை : மைக்கி ஜே மேயர்
ஒளிப்பதிவு: டேனி சான்சேஷ் லோபஸ்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: அஸ்வின் தத், ஸ்வப்பனா தத், பிரியங்கா தத்

கதைக்களம்…

நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்ட சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

சாவித்திரி பற்றி தெரிந்த விஷயங்களையும் சிலருக்கு தெரியாத விஷயங்களையும் இதில் சுவையாக சொல்லியிருக்கிறார்.

அப்பா இல்லாமல் அம்மாவின் பாதுகாப்பில் ஆந்திராவில் வளர்கிறார் சாவித்ரி. பின்னர் தன் பெரியப்பாவின் துணையுடன் நாடகத்தில் நடிக்கிறார்.

அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆரவத்தை புரிந்துக் கொண்டதாலும் நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் சாவித்ரியை நடிகையாக்க ஆசைப்படுகிறார் பெரியப்பா.

சென்னைக்கு வந்து 14 வயதிலேயே நடிகையாகிறார். பல வருட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகி விடுகிறார்.

தென்னிந்திய சினிமாவின் நடிகையர் திலகமாக உருவெடுக்கிறார்.

ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஜெமினி கணேசனை (துல்கர் சல்மான்) அவர் வற்புறுத்தலால் காதலிக்கிறார் சாவித்ரி.

ஊருக்கு நடிகர்களாகவும், வீட்டுக்குள் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். சில நாட்களில் இது ஊருக்கே தெரிய வருகிறது.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் பிறக்கிறது.

இதனிடையில் எவர் உதவி என்று கேட்டாலும் பெரிய தொகைகளை கூட கொடுத்து உதவுகிறார் சாவித்ரி. ஊரே அசந்து பார்க்கும் அளவுக்கு பெரிய பங்களாவை கட்டுகிறார்.

ஆனால் ஜெமினியின் காதல் லீலைகள் சில பெண்களுடன் தொடர, விரக்தியில் குடிக்கு அடிமையாகிறார் சாவித்ரி.

அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கிறார். எனவே படங்களை தயாரிக்கிறார். அதுவும் பெரும் தோல்வியில் முடிகிறது.

இறுதியில் அனைத்தையும் இழந்து ஒரு அனாதை போல் மரண படுக்கையில் பல மாதங்கள் போராடி இறக்கிறார்.

ஆனாலும் தான் ஆசைப்பட்ட படி அறக்கட்டளையை நிறுவி ஆதரவற்றோருக்கு உதவி செய்தே உயிரை விடுகிறார் இந்த நடிகையர் திலகம்.

கேரக்டர்கள்…

ஒரு மாபெரும் நடிகை சாவித்ரி. அவரின் கேரக்டரை எப்படி செய்ய போகிறார் கீர்த்தி சுரேஷ்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

ஆனால் இப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் கீர்த்தி (புகழ்) இனி சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும். அருமையான நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவிப்பார் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

நாடக நடிகையாக இருப்பது முதல், மாபெரும் நடிகையாக மாறியது வரை பல பரிமாணங்களை தன் நடிப்பால் ரசிக்க வைக்கிறார். வாழ்க்கையில் எந்த நிலை வந்தாலும் தன் நிலை மாறாது அதே துறு துறு, உதவும் குணம் என அவரது நவரசங்களை அடிக்கி கொண்டே போகலாம்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான். திருமணமாகி இருந்தாலும் பெண்களை வசியப்படுத்தி காதல் வலையில் வீழ வைப்பது எப்படி என்பதை வார்த்தை விளையாடி இருக்கிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு அந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கலாம்.

சமந்தா மற்றும் விஜய் தேவரெகொண்டா இருவரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷின் பெரியப்பாவாக வரும் அந்த நபர் பழங்கால தெலுங்கு நடிகர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பானுப்ரியா, நாக சைதன்யா ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் கலை இயக்குனருக்கு பத்து பூங்கொத்துக்களை கொடுத்து பாரட்டலாம். 1945 முதல் 1985 வரையிலான சினிமாக்கள் அது பெற்ற தோல்விகள் வெற்றிகள் என அனைத்தையும் சினிமா ரசிகர்களுக்காக அறிந்து கொள்ள அருஞ்சுவை படைத்திருக்கிறார்.

பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்றாலும் அதன் கலை, நடன அசைவுகள் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும்.

நடிகையர் திலகம் சாவித்ரி நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?

எந்த நிலை வந்தாலும் உன் சுயரூபத்தை மாற்றாதே. காலங்கள் மாறும் நீ மாறாதே.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தனக்கு மிஞ்சியே தானம் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

அடுத்தவள் கணவனை கரம் பிடித்ததால் வந்த வினை.

கொடுத்த தர்மம் தலை காக்கும். குடி குடியை கெடுக்கும்.

திறமையிருந்தால் நீ விண்ணைத் தொடலாம் என பல உண்மைகள் தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியிருக்கிறார் இந்த நவீன சாவித்ரி.

நடிகையர் திலகம்… வாழ்க்கையில் நடிக்காத திலகம்

Comments are closed.

Related News

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த…
...Read More
நிவின் பாலி நடித்துள்ள ‘காயம்குளம் கொச்சுண்ணி’…
...Read More
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட…
...Read More