‘கபடதாரி’ ரிலீசுக்கு தைரியம் கொடுத்த விஜய்-சிம்புக்கு சிபிராஜ் & விஜய் ஆண்டனி நன்றி

Kabadadaari  audio launch (2)கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து
தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், .எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

சிறப்பு
விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

“கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.
ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை.

படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.
ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக
வந்துள்ளது.

படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது.

இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன்,
என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று.

சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில்
நிறைய வாய்ப்புகள் வருகிறது.

தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார்.

அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது.

விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி.

‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

’கபடதாரி’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது,…

“என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த மேடையில்
இருக்கிறார்கள். வாழ்க்கையில் நாம் முன்னேற யாராவது ஒருவர் தேவைப்படுகிறார்கள், அந்த வகையில் என் முன்னேற்றத்திற்கு
தனஞ்செயன் சாரும் முக்கியமானவர். ஒரு முறை தனஞ்செயன் சார் போன் செய்து, இப்படி ஒரு படம் இருக்கிறது, பண்ணுவீங்களா
என்று கேட்டார். படத்தை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்தது.

உங்களுக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். என்னை நம்பி இந்த படத்தை கொடுத்த தனஞ்செயன் சாரின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன், என்று நம்புகிறேன்.” என்றார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் பேசியதாவது,…

“லலிதா மேடமுக்கும் தனஞ்செயன் சாருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் இப்படி ஒரு படம் இருக்கிறது, என்று கூறி என்னை பார்க்க சொன்னார்கள். படத்தை பார்த்ததும் ரொம்ப எக்சைட்மெண்டாகி விட்டேன்.

இந்த படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக, வித்தியாசமான பேட்டனில் இருந்தது. படத்தொகுப்புக்கான ஒரு படமாக இருந்தது. உடனே இயக்குநரை சந்தித்தேன். அவரை பார்க்கும் போது டெரரானவரைப் போல்
இருந்தார்.

ஆனால், பழகும்போது தான் அவர் ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார். அவருடன் பயணித்த இந்த ஆறு மாதத்தில் எனக்கு ஆன்மீகம் பற்றியும் நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம், ரொம்ப சுவாரஸ்யம் நிறைந்த
படமாக வந்துள்ளது. சிபி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். அவர் முதுகில் தான் முழுப்படமும் நகர்கிறது.

ஜே.எஸ்.கே சார்,
ஜெயப்பிரகாஷ், நாசர் சார் என அனைவரது கதாப்பாத்திரமும் இண்டர்ஷிடிங்காக இருக்கிறது.

படம் முழுவதும் ஒரு ட்விஸ்ட் இருந்துக் கொண்டே இருக்கும். அது ரசிகர்களை எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி கொண்டே இருக்கும். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் பேசியதாவது,….

“கபடதாரி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும்
அனைவருக்கும் வணக்கம். நான் படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த இடத்திலும் தொய்வே
இல்லாமல் படம் விறுவிறுபாக நகர்ந்துக் கொண்டிருப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியையும் ரசிகர்களிடம்
ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது இசையமைப்பாளர் சைமன் கே.கிங் தான். அவரது பணி
மிக சிறப்பாக வந்துள்ளது. சிபிராஜ் ரொம்ப பிட்டாக இருக்கிறார்.

டைலர் மேட் ரோல் என்று சொல்லும் அளவுக்கு அவர் படம் முழுவதும்
பிட்டாக இருக்கிறார். நாசர், ஜெயப்பிரகாஷ், நந்திதா என அனைத்து நடிகர்களின் கதாப்பாத்திரமும் கச்சிதமாக உள்ளது.

இந்த படம்
கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படமாகும். தமிழில் அதைவிடவும் மிகப்பெரிய வெற்றிப் பெறும். நிச்சயமாக ‘கபடதாரி’
அனைவருக்கும் திருப்தியளிக்க கூடிய படமாக அமையும்.” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது….

“இந்த இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன் சார் எப்படி அனைத்து பணிகளையும்
செய்கிறாரோ, படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருப்பார்.

அனைத்து பணியிலும் அவருடைய ஈடுபாடு இருக்கும். பொதுவாக
தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் இருப்பார்கள், படப்பிடிப்பு நடக்கும். ஆனால், தனஞ்செயன் சார், அனைத்திலும் ஈடுபாட்டுடன்
செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதோடு, நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த படம் குறித்து இயக்குநர் பிரதீப் என்னிடம் பேசும் போது, என்னை சந்திக்க எனது வீட்டுக்கே வந்தார். பொதுவாக இயக்குநர்கள் அப்படி வர மாட்டார்கள். அலுவலகம் அல்லது பொது இடங்களில் தான் சந்திப்பார்கள்.

ஆனால், பிரதீப் எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னை தேடி என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். இயக்குநர் அந்த நடவடிக்கையே எனக்கு படத்தின் மீது ஈடுபாட்டை கொடுத்து விட்டது. படம் முழுவதும் நான் மகிழ்ச்சியாக பணிபுரிந்திருக்கிறேன்.

பிரதீப்பிடம் படம் தொடர்பாக அனைத்துவிதமான ஆலோசனையிலும் ஈடுபடுவேன். என்னவேனாலும் சொல்லலாம். நமது கருத்துக்கும் யோசனைக்கும் அவர் செவி கொடுப்பார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் நான் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப பிஸியாக நடித்த படம் இது தான். ஹீரோ சிபி சாருடன் தான் என் கதாப்பாத்திரம் பயணிக்கும். அவருக்கும் எனக்கும் இடையே ஒரு பிக்‌ஷன் இருந்துக் கொண்டே இருக்கும்.

மொத்தத்தில், நான் முழு திருப்தியுடன் நடித்த படம். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் சைமன் கே.சிங் பேசியதாவது, “இந்த படக்குழுவினருடன் எனக்கு இது இரண்டாவது படம். அதனால், நான் எனது குடும்பத்துடன் பணியாற்றியது போலதான் பணியாற்றினேன். அனைவரும் சொல்வது போல இயக்குநர் பார்ப்பதற்கு தான் டெரராக
இருப்பார்,

ஆனால் அவருடன் பழகினால் அவர் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று தெரியும். ஜாலியாக பணியாற்றினாலும் வேலையை
சரியாக செய்துவிடுவார். அவருக்கு என்ன வேண்டும், என்பதை சரியாக கேட்டு வாங்கி விடுவார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு
மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் நான் இசையமத்திருப்பது புதிய அனுபவமாக உள்ளது. தெலுங்கிற்கு வேறு நடிகர்கள், தமிழிக்கு வேறு நடிகர்கள். முக்கியமாக நாசர் சாருக்கு ஒரு பாடல் இருக்கிறது.

அழகிய மொலோடியாக அந்த பாடல் இருக்கும்.
பின்னணி இசையை பொருத்தவரை கதைக்கு ஏற்றாவாறு தான் இருக்கும். பாடலாகட்டும், பின்னணி இசையகாட்டம் படத்திற்கு எது
தேவையோ அதை தான் கொடுத்திருக்கிறோம், அதை தவிர்த்து எதையும் முயற்சிக்கவில்லை.

இந்த படத்தின் ரெக்கார்டிங் பணியும்
ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஸ்கைப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் ரெக்கார்டிங் செய்தோம். ஆனால், அனைத்தும்
தரமாக உள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும்.”
என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசியதாவது,…

“சினிமா என்னாகுமோ, ஏதாகுமா, திரையரங்குகள் திறக்கப்படுமா, மக்கள் கூட்டம் வருமா, என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது.

படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று கபடதாரி ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், கொரோனா காலக்கட்டத்தில், தனது சம்பளம் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிபியும் இந்த படத்திற்காக செய்திருக்கிறார். தனஞ்செயன் சார் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், அதனால் தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால், அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் தான், இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.

இயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர்.
மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து
வருகிறார்.

அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்ட்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு
வருகிறது.

இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்
செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசியதாவது…

“கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான். கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல்துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு
ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை ஒட்டி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது.

உடனே,
தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன்.
ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார்.

உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என்
உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தனஞ்செயன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எறும்பு போல சுறுசுறுப்பானவர். சில நேரங்களில் ஷார்ட்டுக்கு கூட என்னை
அழைக்க அவரே வந்துவிடுவார்.

அந்த அளவுக்கு படப்பிடிப்பில் படு சுறுசுறுப்பாக இருப்பார். அனைத்து பணிகளையும் ஈடுபாட்டுடன்
செய்வார். ஒரு முறை படப்பிடிப்பில் ஒரு பழைய காரை வைத்து படம்பிடித்து வந்த போது, அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. அடுத்த
ஷாட்டுக்காக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது, அவரே அந்த காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தார்.

அவரால் தான் நான்
இந்த படத்திற்குள் வந்தேன், ரொம்ப நன்றி சார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.
பொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று
நினைப்பார்கள், இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள்.

ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப். நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது, ஏற்கனவே அவருடன் பணியாற்றியதால், நாங்கள் வைத்திருந்த
மீட்டரிலேயே நடித்தேன்.

ஆனால், அதை அவர் சற்று மாற்றி வேறு ஒரு விதத்தில் என்னை நடிக்க வைத்தார். அது எனக்கு நாசர் சார்
போன்ற ஜாம்பவனுடன் இணைந்து நடிப்பதற்கு ஈசியாக இருந்தது.

அதேபோல் ஜெயப்பிரகாஷ் சார், நந்திதா ஆகியோருடன் நடித்து
நன்றாக இருந்தது. எடிட்டர் பிரவீன், இசையமைப்பாளர் சைமன் ஆகியோரது பணிகள் பெரிதும் பேசப்படும். இந்த படத்திற்கு சைமன்
மிகப்பெரிய் உழைப்பை கொடுத்திருக்கிறார். அது படம் பார்க்கும் போது தெரியும். பிரவீன் பணியாற்றும் படங்களில் எங்கேயாவது லேக்
இருந்தால் அதை உடனே தூக்கிடுவார்.

ஆனால், இந்த படத்தில் எந்த காட்சியையும் அவர் தூக்கவில்லை. அந்த அளவுக்கு காட்சிகள்
நேர்த்தியாகவும், எந்த ஒரு லேகும் இல்லாமல் இருந்ததாக பிரவீன் கூறினார். அதுவே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு
விஜய் ஆண்டனி சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இயக்குநர் பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததே அவர் தான்.

அனைத்து
படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். அப்படி தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக்
நேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது,…

“தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று
சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு
மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரன் மகன் என்ற
அடையாளமே இல்லாமல் இருப்பார்.

நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார்.
இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர்.
அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது.

தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும்.

அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி. படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர்.

ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற
வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்ட்டமான
காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய
படங்களும் வெற்றி பெற வேண்டும்.

இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.”
என்றார்.

சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள
நிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

Sibiraj and Vijay antony speech at Kabadadaari audio launch

Overall Rating : Not available

Related News

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம்…
...Read More

Latest Post