தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
48 நாட்கள் விரதமிருந்து அருள் கிடைத்தது போல, தமிழ் சினிமா ஸ்டிரைக் 48 நாட்கள் நடைபெற்று இன்று முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இதுவரை இப்படியொரு ஸ்டிரைக் நடந்ததே இல்லை.
தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.
மேலும் புதுப்பட டீசர், டிரைலர், முதற்கொண்டு திரைப்பட தொடர்பாக எதுவும் நிகழக்கூடாது என அறிவித்தார்.
விஷால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த போது இது ஒரு வாரம் கூட நீடிக்காது என்ற பலரும் வாய் திறந்த கமெண்ட் அடித்தனர்.
பின்னர் நாளாக நாளாக அவர்களே விஷாலின் விடா முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து தற்போது வெற்றிக்கனியை தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றியுள்ளது எனலாம்.
எப்படி இது வெற்றி சாத்தியமானது..? என்ன நடந்தது..? இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்துள்ள பலன்கள் என்ன? என்பதை பார்ப்போம்.
தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், க்யூப் நிறுவனங்கள் ஆகியோருடன் தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காலையில் இது தொடங்கினாலும் மதியம் வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதன்பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.
ஒருவழியாக அனைத்து தரப்பினரும் இறங்கி வந்து பேசி கடைசியில் எல்லாவற்றையும் சுமூகமாக பேசி முடிவுக்கு கொண்டுஷ வந்துள்ளனர்.
அவை…
1. க்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக் கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒத்துக் கொண்டுள்ளது.
இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.
இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறது.
அதுவும் க்யூப் நிறுவனத்தின் அக்ரிமெண்ட் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது இந்தாண்டு அக்டோபருக்குள் அந்த ஒப்பந்தங்கள் ரத்தாகும் என கூறப்படுகிறது.
அதன்பின்ன்ர் ஏரொக்ஸ் உள்ளிட்ட வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்கு தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாகியுள்ளதாம்.
எனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழக தியேட்டர்களில் செலுத்த முடியும்.
2. தியேட்டர் கட்டணத்தை அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும்.
இதனால் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
3. தியேட்டர்களில் செய்யப்படும் ஆன்லைன் ரிசர்வேசன் கட்டணம் இதுவரையிலும் 30 ரூபாய் வரையிலும் இருந்து வந்தது. இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்களாம்.
அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித் தரப் போகிறதாம்.
இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.
4. தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணி மயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் 2018 முதல் தேதி முதல் அமலாகும்.
இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும்.
ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தப் படங்களில் நிலை நிறுத்தப்படும். இதனால் சீரான சம்பளம் நடிகர்களுக்கு தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறையும் என எதிர்பார்க்கலாம்.
5. இதேபோல் தியேட்டர் அதிபர்களுக்கு உதவும்வகையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை தியேட்டர் கட்டணத்தில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிடும்.
6. இது தியேட்டர் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இக்கோரிக்கை நிறைவேறியதில் தியேட்டர் அதிபர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதானாம்.
இன்றைக்கு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி நாளைக்குக் கூடவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டு வருவது, படப்பிடிப்புகளை துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.
இப்போது, இதுவரையிலான இந்த வெற்றிக்கு முதற்காரணம் விஷால்தான்.
விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆன போது, எவரிடம் கருத்துக் கேட்காமல் அவரே தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பார் என கூறப்பட்டது. இதனால் சங்கத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.
இதற்கு முன் சில ஸ்டிரைக்குகளை விஷால் அறிவித்தாலும் அவரை ஒரு வாரம் கூட நடைபெறவில்லை. இது விஷாலின் மீது மதிப்பை குறைத்துக் கொண்டே இருந்தது.
ஆனால் இந்த முறை பக்காவாக ப்ளான் செய்து, அரசே இதில் தலையிட வலியுறுத்தி காய்களை நகர்த்தியுள்ளார்.
தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்கு கொண்டு வரச் செய்திருக்கிறார்.
என்வே தலைவர் விஷால் அவர்களையும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவரையும் ஃபிலிம் ஸ்ட்ரீட் சார்பாக பாராட்டி மகிழ்கிறோம்..!
Kollywood Cinema strike come to an end after 48 days How Vishal executed