தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.
இவர் 1980களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் முள்ளும்மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார்.
இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் சரத்பாபு இறந்துவிட்டதாக இன்று மே 3ம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் பரவியது.
இதனை பாலிமர் உள்ளிட்ட பல முன்னணி மீடியாக்கள் செய்தியாக பதிவிட்டது.
இதனையடுத்து கமல், குஷ்பூ உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த செய்தியை உண்மை என நம்பி அவர்களும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர்.
இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவ நம்மிடமும் பல நண்பர்கள் விசாரிக்க தொடங்கினர்.
ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்று நாம் பலமுறை கூறினாலும் பெரிய பெரிய மீடியாக்களே பிரேக்கிங் செய்தி போட்டு விட்டார்கள் என கூற தொடங்கினர்.
பெரிய மீடியாக்கள் செய்தி பதிவிட்டால் அது உண்மை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பலவீனத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.
இது போன்ற பல வதந்திகளை நாம் தொடர்ந்து பல மாதங்களில் பார்த்து வந்திருக்கிறோம்.
நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டார் என்ற செய்தியை பலமுறை கேட்டிருக்கிறோம். நடிகர் மைக் மோகன் இறந்து விட்டார் என்ற செய்தியை பலமுறை கேட்டிருக்கிறோம்.
அதுபோல கடலோரக் கவிதைகள் ரேகா இறந்துவிட்டார் என்ற செய்தியை நாம் கேட்டு இருக்கிறோம். அவரும் ஒரு முறை மேடை ஏறி இதை வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
இதுபோன்ற பல மீடியாக்கள் செய்தி பதிவிடுவதால் மக்களும் அதை நம்ப தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சரத்பாபுவின் சகோதரி அவர் நலமுடன் இருக்கிறார்.. விரைவில் மக்களை வந்து சந்திப்பார் என செய்தி வெளியிட்டனர்.
அதன் பிறகு முன்னணி ஊடகங்களில் வதந்திகளை நம்ப வேண்டாம் என செய்திகளை பதிவிட்டனர்.. இவர்களே காலமானார் என்ற செய்தியும் பதிவிட்டு இவர்களே நம்ப வேண்டாம் என்ற செய்தியும் பதிவிடுகின்றனர்.
ஒரு செய்தி உண்மைதானா என்பதை மீடியாக்கள் சம்பந்தப்பட்ட நபர் குடும்பத்தாரிடம் விசாரிக்க வேண்டும்.
அல்லது நடிகர்களின் மேனேஜர்கள் பிஆர்ஓ க்கள் ஆகியோரிடம் விசாரித்து செய்தியை பதிவிட வேண்டும்.
அதை விடுத்து இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தருகிறோம் என்ற போர்வையில் எது உண்மை? என்று ஆராயாமல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் வாக்களிக்க புறப்பட்டார் என பிரபல டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.
அதுபோல கொரோனா காலகட்டங்களில் நடிகர் அஜித் இரண்டு கோடி நன்கொடை கொடுத்ததாக செய்தியை பிரபல ஊடகம் பதிவிட்டது. ஆனால் அவர் ரூ.25 லட்சம் மட்டுமே கொடுத்தார் என பிஆர்ஓ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அது போல தான் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அவர் இறந்து விட்டதாகவும் பல பேர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். இதற்காகவே இவர்கள் ஒரு டிசைன் குரூப்பை வைத்து டிசைன் செய்து பதிவிடுகின்றனர்.
மரணம் அடையாத ஒருவரை மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பதிவிட்டால் அந்த குடும்பத்தினர் நிலை மனநிலை எப்படி இருக்கும் என இவர்கள் யோசிக்கவே மாட்டார்களா?
இந்த டிசைன் பிரிவினர்களின் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டார் என செய்தி பதிவிட்டால் அவர்கள் அதை எப்படி தாஙகிக் கொள்வார்கள்.? ஏன் இந்த மனநிலை.?எப்போது இந்த நிலை மாறும்.?
இப்படியாக முன்னணி ஊடக நிறுவனங்களே உண்மையை ஆராயாமல் பொய் செய்திகள் பதிவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்..
உண்மை செய்தியை கூட திரித்து மீம்ஸ் போடவும் பல விஷமிகள் காத்திருக்கும் நிலையில் பொய் செய்தியை பதிவிட்டால் என்ன ஆகும் மீடியாக்களின் நிலை.?
இனியாவது மீடியாக்கள் பொறுப்பை உணர்ந்து செய்தியை பதிவிட வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கும் மீடியாக்கள் மீது அதிக நம்பிக்கை பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Big Medias should have responsibility Don’t spread fake news for your TRP