தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1980 களில் நடக்கும் கதையாக இந்த ‘வட்டார வழக்கு’ உருவாகியுள்ளது.
எளிய மனிதர்களின் கிராமத்து வாழ்வியலை கொடுத்திருக்கிறார் கண்ணுசாமி ராமச்சந்திரன். இவரே இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.
ஸ்டோரி…
நம் தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப்போன பங்காளிகளின் சண்டைதான் இந்தப் படத்தின் கதைக்களம்.
ஒரு குடும்பத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் ஒரு பிரச்சனையில் ஒருவரை கொலை செய்து விட அவர்கள் இவரை தேடி பழி தீர்க்க அழைக்கின்றனர்.
மற்றொரு பக்கத்தில் நாயகன் நம்பி சந்தோஷ் மற்றும் ரவீனா ரவி இடையே ஒரு காதல்.. படுத்த படுக்கையாக கிடக்கும் தன் தந்தைக்கு பணிவிடை செய்து அறிவொளி இயக்கம் நடத்தும் பெண்ணாக ரவீனா ரவி.
நாயகனை வெட்டி தீர்க்க அலையும் கும்பலின் திட்டம் நிறைவேறியதா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் இந்த வட்டார வழக்கு
கேரக்டர்ஸ்…
கிராமத்து முரட்டு இளைஞனாக சந்தோஷ் நம்பி ராஜன் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் வீராப்பு முறைப்பு எனத் தெரியும் நாயகன் சந்தோஷ்.. காதல் என்று வந்து விட்டால் கவிழ்வதும் அருமை.
‘தொட்டிச்சி’ கேரக்டரில் வெளுத்து கட்டி இருக்கிறார் ரவீனா ரவி. இவரது இவரது குரலும் கூடுதல் கவனிப்பை பெறுகிறது. முதலில் நாயகனை வெறுக்கும் ரவீனா மெல்ல மெல்ல காதலில் கரைவதை உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார்.
கண்ணாடியில் முகத்தை பார்ப்பது மட்டுமல்லாமல் எவர்சில்வர் பாத்திரத்தில் காதலனை காண்பதும் கவிதைத்துவமான காட்சி.. படிக்காத பாட்டிமார்களை ரவீனா திட்டி படிக்கச் சொல்லும் அதட்டலும் ரசிக்கும் ரகமே.
இவர்களுடன் டீக்கடை தாத்தா முதல் இளசுகள் பெருசுகள் என அனைவரையும் அவர்களது போக்கிலேயே வேலை வாங்கி இருக்கிறார் டைரக்டர்.
டெக்னீசியன்ஸ்…
கரிசல் எழுத்தாளர் மறைந்த கி.ரா அவர்களின் கதை மாந்தர்கள் பேசும் வசனங்கள் உள்ளன. எனவே டைட்டிலில் கி. ராவை நினைவுகூர்ந்து உள்ளார் இயக்குனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் படம் இது. புதிதாக போட்ட மெட்டுக்களுடன் 1980களில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறார் இசைஞானி. (இது இயக்குனர் வைத்து வேண்டுகோள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது)
அந்தப் பாடலை இந்தக் கதையுடன் இணைத்து பார்க்கும் போது ரசிக்கும் படியாக உள்ளது. தன் கிராமத்து மண்வாசையை மக்களுக்கு கலந்து கொடுத்திருக்கிறார் இளையராஜா.
எங்குமே சினிமாத்தனம் இல்லாத மக்களின் எளிய வாழ்க்கையை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
“ஊமை கனவு கண்டது போல சொல்ல முடியல” என்று சொல்லும் தாத்தாவிடம் ஒரு இளந்தாரி” ஊமை என்னதான் கனவு கண்டா?” என்று கேட்க தாத்தா தரும் விளக்கம் ரசிக்கும் காட்சி..
மேலும் கிராமத்துக்கே உரித்தான ஆட்டு கிடா முட்டு, டீக்கடை கலாட்டா.. பெருசுகளின் நையாண்டித்தனம் இளசுகளின் இம்சை என கிராமத்து மனிதர்களின் கலகலப்பையும் கலந்து கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவும் படத்தொகுப்பு நேர்த்தி.
இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். வித்தியாசமான முயற்சி என ரிஸ்க் எடுக்காமல் மக்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் ஒரு கதைக்களத்தை எடுத்து அதை மக்கள் வாழ்வியலோடு கலந்து கொடுத்திருக்கிறார்.
அதிக கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருந்தாலும் கிராமத்து பாஷையில் கெட்ட வார்த்தை கேட்கும் போது பெரிதாக நெருடல் இல்லை என்பதை உண்மை.
மதுரா டாக்கீஸ் & ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ளது.
டிசம்பர் 29ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது.
Vattara Vazhakku movie review and rating in tamil