Lollu Kavalai Galatta… LKG எல்கேஜி விமர்சனம் 3.5/5

Lollu Kavalai Galatta… LKG எல்கேஜி விமர்சனம் 3.5/5

நடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்திஷ், ராம்குமார், நாஞ்சில் சம்பத் மற்றும் பலர்.
இயக்கம் – கேஆர். பிரபு
ஒளிப்பதிவு – வித்யு அய்யணா
எடிட்டிங் – ஆண்டனி
இசை – லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பு – ஐசரி கணேசன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

தன் அப்பா (நாஞ்சில் சம்பத்) 30 வருடங்களாக அரசியலில் இருந்தாலும் அடிமட்டத் தொண்டாகவே இருப்பதை கண்டு வருத்தப்படுகிறார் லால்குடி கருப்பையா காந்தி (இங்கிலீஷ்ல அதான் எல்கேஜி) ஆர்.ஜே. பாலாஜி.

எனவே எப்படியாவது அரசியலில் சாதித்து காட்ட வேண்டும் என்பதால் ஊர் மக்களுக்கு பல வகைகளில் உதவுகிறார். 29 வயதிலேயே கவுன்சிலரும் ஆகிவிடுகிறார்.

பின்னர் படிப்படியாக முன்னேறி எம்எல்ஏ எலெக்சனிலும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் இவரை விட படு பிரபலமான ராம்ராஜ் பாண்டியன் (ஜேகே. ரித்திஸ்) போட்டியிட முன் வருகிறார்.

எனவே அவரை வீழ்த்த ஐடி கம்பெனியில் பணிபுரியும் பிரியா ஆனந்தின் உதவியை நாடுகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

இவர்கள் இருவருக்கும் நடக்கும் தேர்தல் யுத்த களமே இந்த எல்கேஜி.

பட நாயகன் இறுதிவரை வெறும் எல்கேஜி மாணவனாக இருந்தாரா? அல்லது புரொபசர் ரேஞ்சுக்கு சாதித்து காட்டினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் ஆகியவற்றிலும் ஆர்.ஜே.பாலாஜி ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்.

பொதுவாகவே இவர் சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஈடுபடுவதால் மக்களின் பல்ஸ் அறிந்து அதை டச் செய்யும் வகையில் கொடி பிடித்துள்ளார்.

நாயகன் கோபம் படும்போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. வாய்க்கு கொடுத்த வேலையை கொஞ்சம் முகத்திலும் முக பாவனைகளில் கொடுங்க மிஸ்டர் ஆர்.ஜே. பாலாஜி.

படத்தில் ஹீரோயின் என்றாலும் நாயகனுடன் டூயட் பாடாமல் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளார் நாயகி பிரியா ஆனந்த்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் ஒரு பொய்யை கூட உண்மையாக்கி டிரெண்ட்டிங் செய்துவிடுவார்கள் என்பதை மக்கள் புரியும் வகையில் கொடுத்த டைரக்டர் பிரபுவை நிறையவே பாராட்டலாம்.

நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் மிரட்டலான அரசியல்வாதியாக அசத்தியிருக்கிறார். இவருடைய பேச்சும் நடிப்பும் சிவாஜி பிரபுவை நினைவுப்படுத்துகிறது. இவர் நடிப்பை தொடர வாழ்த்தலாம்.

நாஞ்சில் சம்பத் கேரக்டரை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ஒரு அடிமட்ட தொண்டனை தனி ஒருவன் படத்தில் சிறப்பாக காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் அறிமுகமான முதல் படத்திலேயே நாஞ்சில் சம்பத்தை நகைச்சுவை சம்பத்தாக அதாவது காமெடி பீஸாக்கிவிட்டார்கள்.

எதிர்பாராத கேரக்டரில் ஜேகே. ரித்திஸ் எகிறி அடித்திருக்கிறார். அதுவும் காளையை அடக்க அவர் பாட்டு பாடுவது என செமயாய் கலாய்த்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படம் முடிந்து வந்தாலும் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நம்மை ஒலித்துக் கொண்டே இருக்கும். பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து கொடுத்த லியோன் ஜேம்ஸை பாராட்டலாம்.

பா. விஜய் மற்றும் விக்னேஷ்சிவன் பாடல் வரிகள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. திமிர காட்டாதடி பாடலும் ரசிக்கும் ரகமே.

விது அய்யனா ஒளிப்பதிவில் படம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. கார்ப்பரேட் ஆகட்டும் அரசியல் மேடைகளாகட்டும் எதுவாக இருந்தாலும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

மீம்ஸ் என்ஜினியர்கள் என்ற போர்வையில் சிலர் செய்யும் காரியங்கள் நல்லதாக முடிந்தால் அது அனைவருக்குமே நல்லது தான். ஆனால் அதை தவறாக செய்தால் நாடு என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கும் என்பதை அருமையாக காட்டியுள்ளனர்.

லஞ்சம் கொடுப்பது வாங்குவது என இரண்டும் இருக்கும் வரை நம் நாட்டிற்கு நல்லது அமையாது என்பதை தன் க்ளைமாக்ஸ் வசனங்கள் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார்.

ஓட்டுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்தாலும் பணம் வாங்குவதே மக்கள்தானே. நாம் நம்மை ஓட்டை விற்றுவிட்டால், பின்பு எப்படி அவர்களை கேள்வி கேட்க முடியும்? என்பதை நெத்தியடியாக சொல்லியிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் சட்டத்தை மதிக்கிறோம். போக்குவரத்து போலீசிடம் மாட்டிக் கொண்டால் உடனே லஞ்சம் தானே கொடுக்கிறோம். உங்களிடம் இருந்து வந்த அரசியல்வாதிகளும் அப்படிதான் இருப்பார்கள் என்ற வசனங்களில் இந்த எல்கேஜி மாணவன் முதலிடம் பெறுகிறான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது முதல் தற்போதைய தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்தையும் கலாய்த்திருக்கிறார்.

ரவா உப்புமா ஹாஸ்பிட்டல் பில் ரூ. 1 கோடி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ், ராமராஜன் டிரெஸ் கோடு, தெர்மாகோல் மினிஸ்டர், ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள், வெட்டி விவாதம் நடத்தும் சேனல்கள், மக்கள் போராட்டம் என எதையும் விட்டு வைக்கவில்லை இந்த எல்கேஜி.

ஆனால் எல்லாத்தையும் கலாய்க்கிறோம் என்ற பெயரில் அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் கலாய்ப்பது என்ன நியாயம்..? கேசரி சாப்பிட்டால் மீடியாக்கள் காவியா? என கேட்பது எல்லாம் ஓவர்.

ஹீரோவாகி விட்டோம் என்பதால் ஆர்.ஜே. பாலாஜி எல்லை மீறிவிட்டாரோ-.? என்ற எண்ணமே நமக்கு வருகிறது.

அரசியலில் நிறைய இருந்தாலும் இன்றைய அரசியலை மட்டுமே கலாய்த்திருப்பது ஏனோ? அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சி மற்றும் ஆட்சியை மட்டும் அதிகமாக கலாய்த்திருப்பது ஏனோ.?

படத்தில் நிறைய லொள்ளு கலாட்டா இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தையே கலாய்த்திருப்பது கவலையாக உள்ளது.

எனவே இந்த எல்கேஜி… Lollu Kavalai Galatta…

Comments are closed.

Related News

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள்…
...Read More
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர்…
...Read More