உயர்வடையாத உழைப்பாளி..; லேபர் விமர்சனம்

உயர்வடையாத உழைப்பாளி..; லேபர் விமர்சனம்

ஒன்லைன்… சத்தியபதி இயக்கியுள்ள படம் லேபர். கட்டிட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தியுள்ளது இந்த படம்.

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர்.

நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார் படத்தொகுப்பை மேற்கொள்ள ஒலி கலவையை கிருஷ்ணமூர்த்தி செய்துள்ளார்.

கதைக்களம்…

கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மேஸ்திரி ஆகியோர் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்..

என்னதான் மேஸ்திரியாக இருந்தாலும் ஒரு இன்ஜினியர் கீழ் பணிபுரிய வேண்டும். எனவே தன் மகனை கடன் வாங்கியாவது கஷ்டப்பட்டு இன்ஜினீயர் படிக்க வைக்கிறார். காலேஜ் கட்டணம் கட்ட முடியாமல் அடிக்கடி படாதாபாடு படுகிறார் மேஸ்திரி.

படத்தின் நாயகன் முருகன். அவரது மனைவி சரண்யா ரவி. இருவரும் கட்டிட பணி செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு சின்ன குழந்தை.

முருகனோ குடிக்கு அடிமை. எனவே தினமும் வீட்டில் சண்டை,

இவர்களுடன் வேலை செய்யும் மற்றொரு கேரக்டர் திருநங்கை ஜீவா. இவர் டீச்சருக்கு படித்துக் கொண்டே வேலை செய்கிறார்.

இவர்கள் எல்லோருமே ஏலச்சீட்டு தம்பதிகளிடம் மாதாமாதம் பணம் கட்டி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஏலச்சீட்டு தம்பதிகள் தொழிலாளர்களின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

அடுத்து என்ன நடந்தது.? மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்தாரா மேஸ்திரி.? முருகன் சரண்யா என்ன செய்தார்கள்,? முருகன் குடியை நிறுத்தினாரா? திருநங்கை ஜீவா டீச்சர் ஆனாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கணவன் மனைவியாக நடித்துள்ள முத்து, சரண்யா ரவிச்சந்திரன் இருவரையும் வெகுவாக பாராட்டலாம். குடிகாரனாக முத்து.. கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படும் பெண்ணாக சரண்யா. இவரின் பலமே கொடுத்த கேரக்டராகவே மாறிவிடுவார். சபாஷ் சரண்யா. கணவனை கண்டிப்பதாகட்டும் குழந்தை அழும்போது பால் ஊட்டி வெளியே அழைத்து செல்வதாகட்டும் கட்டிட தொழிலாளி பெண்ணாக மாறிவிட்டார்.

திருநங்கை ஜீவாவும் தன் நடிப்பில் கவனம் பெற வைக்கிறார். தன்னை அசிங்கப்படுத்தியதற்காக ஆபிசரை அதட்டிக் கேட்கும் காட்சிகள் சூப்பர்.

எல்ஐசி ஏஜென்ட், போலீஸ் இன்ஸபெக்டர், ஏலச்சீட்டு தம்பதிகள் உள்ளிட்டோர் ஓகே. ஆனால் இவர்கள் மனப்பாடம் செய்து வசனங்கள் பேசியது போல உள்ளது.

நிஜில் தினகரன் இசை ஓகே ரகம்தான்.

சத்தியபதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லேபர் படம் 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை சொல்லிய விதம் ஓகே. ஆனால் ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒரு காட்சியில் பைக் வரும்போது முன்பே கேமராவை கொண்டு செல்கிறார். அதன்பின்னரும் பைக்கில் வருபவர் முகத்தை காண்பிக்க வேண்டாமா? அவர்களின் பேச்சின் போது முகபாவனைகள் தெரிய வேண்டாமா..? பைக்கில் பின்னால் வருபவர் யார் என்றே தெரியவில்லை.

இதுபோல் ஏலச்சீட்டு வீட்டிலும் கேமராவை ஒரே இடத்திலேயே வைத்துவிட்டார். இதுபோன்ற நிறைய காட்சிகள் ஒரே இடத்தில் கேமரா இருப்பதால் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது.

ஒரு காட்சி முடியும் வரை கேமரா ஆங்கிளை அடிக்கடி மாற்றினால்தானே நம்மால் ரசிக்க முடியும். இது கல்யாண வீடு கேமராமேன்களை நினைவுப்படுத்துகிறது. அதை இயக்குனர் சத்தியபதி தவிர்த்திருக்கலாம்.

ஆயுள் காப்பீடு செய்யாத தொழிலாளர்கள்… குடியால் கெடும் உழைப்பாளிகள்…. என அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருப்பார் இந்த லேபர்.

க்ளைமாக்ஸ் காட்சி சோகத்தை தந்தாலும் அதில் எதிர்பாராத ஆச்சர்யத்தை கொடுத்துவிட்டார் இயக்குனர் சத்தியபதி.

ஆக இந்த லேபர்… உயர்வடையாத உழைப்பாளி.

Labour movie review and rating in Tamil

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்..; பிளட் மணி விமர்சனம்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்..; பிளட் மணி விமர்சனம்

ஒன்லைன்.. பிளட் மணி என்றால்… ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கொடுக்கப்படும் தொகையே பிளட் மணி என்பதாகும்.

கதைக்களம்..

தமிழ்நாட்டில் வசிக்கும் கிஷோர் மற்றும் அவரது தம்பி வேலைக்காக அரபு நாடு செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டில் இருவரும் வேலை செய்கின்றனர். கிஷோருக்கு ஒரு 10 வயது மகள் இருக்கிறார். ஆனால் மனைவி இல்லை.

இவரது மகளை அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொள்கின்றனர்.

வெளிநாட்டில் ஒரு சதி திட்டத்தால் ஒரு கொலை வழக்கில் சிக்குகின்றனர் அண்ணன் தம்பி இருவரும். கிட்டத்தட்ட 5 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். இறுதியாக அந்த நாட்டு சட்டப்படி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

நாளை மதியம் தூக்கில் போட இருக்கிறோம் என அந்த நாட்டில் இருந்து கிஷோர் அம்மாவுக்கு போன் கால் வருகிறது.

அம்மா கலெக்டரிடம் முறையிடுகிறார். அங்கு பணிபுரியும் செந்தில் மூலம் அந்த செய்தி பத்திரிகையாளர் பிரியா பவானி சங்கரிடம் வருகிறது.

தூக்கு தண்டனை நிறைவேற ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருக்கும் நிலையில் பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது சக ஊழியர் மெட்ரோ சிரிஷ் இருவரும் இணைந்து தூக்கு தண்டனையை தடுக்க போராடுகின்றனர்.

வெளிநாட்டில் உள்ளவர்களை இங்கிருந்து எப்படி காப்பாற்ற முடியும்..? அவர்களை காப்பாற்றினார்களா என்பதை ‘பிளட் மணி’யின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

செய்தி சேனலில் பணி புரியும் பத்திரிகையாளர்களாக பிரியா பவானி சங்கர், மற்றும் மெட்ரோ சிரிஷ் நடித்துள்ளனர்.

நடிகையாவதற்கு முன்பே புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் தானே பிரியா பவானி சங்கர். எனவே தன் நிஜ வாழ்க்கை அனுபவத்தை தன் கேரக்டரில் அழகாக காட்டியிருக்கிறார்.

அலுவலகத்தில் மற்ற ஊழியர்களால் ஏற்படும் அவமானங்களையும் புரிந்து நடித்திருக்கிறார். இரண்டு அப்பாவி உயிர்களை மீட்க இவர் போராடும் காட்சிகள் மற்றும் இதற்காக தனுஷ்கோடி இலங்கை செல்வது எல்லாம் பரபரப்பான காட்சிகள்.

ஸ்மார்ட்டாக வருகிறார் மெட்ரோ சிரிஷ். முதலில் இவர்தான் பிரியாவுக்கு வில்லனாக இருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது. பிரியாவுக்கு சரியான ஐடியாக்கள் கொடுக்கும்போது சபாஷ் போட வைக்கிறார். இவருக்கான காட்சிகளை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம்.

இவர்களுடன் கிஷோர், பஞ்சு சுப்பு, ராட்சசன் வினோத் சாகர், கலைமாமணி ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோர் பங்களிப்பு படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஒரு கைதியின் எண்ணங்களையும் ஒரு தந்தையின் தவிப்பையும் அழகாக உணர்ந்து நடித்திருக்கிறார் கிஷோர்.

இசையமைப்பாளர் சதிஷ் ரகுநந்தனின் பின்னணி இசையும், ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒரு நாளில் நடக்கும் கதை என்பதால் அடுத்து என்ன நடக்குமோ? என நம்மையும் படத்துடன் ஒன்ற வைத்துவிட்டார் இயக்குனர் சர்ஜுன்.

பிளட் மணி என்ற அம்சத்தை எளிய மக்களுக்கும் புரியும் படியும் அரபு நாட்டு சட்டங்களையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சங்கர் தாஸ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சி சினிமாத்தனமாக உள்ளது. ரசிகர்கள் தவிக்க வேண்டும் என்பதற்காக காட்டிய அந்த காட்சி நம்பும்படி இல்லை. (சொன்னால் ட்விஸ்ட் இருக்காது.. படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..)

ஆக.. இந்த பிளட் மணி… வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்..

Blood Money movie review and rating in Tamil

பேய் வரிசையில் 100000000000-வது பேய்..; தூநேரி விமர்சனம்..

பேய் வரிசையில் 100000000000-வது பேய்..; தூநேரி விமர்சனம்..

ஒன்லைன்..

வழக்கமான பேய் படம் என்றாலே ஒரு பயங்கர காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவுக்கு ஒரு குடும்பத்தினர் வருவார்கள்.. அந்த பங்களாவில் பேய் இருக்கும் தானே.. இறுதியில் பேய்க்கு ப்ளாஷ் பேக்.. இருக்கும்.. அதே கதை தான் இந்த தூநேரி படத்திலும்..

கதைக்களம்..

அந்த பங்களா இருக்கும் கிராமத்தில் அடிக்கடி கொலை இந்த குடும்பத்தையும் அடிக்கடி அந்த அமானுஷ்ய சக்தி தொந்தரவு செய்கிறது.

நாயகன் நிவின் கார்த்திக் குடும்பத்தினர் என் ஆனார்கள்..? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
நிவின் கார்த்திக் ஒரு போலீஸ். கம்பீரமாக இருக்கிறார். அளந்து பேசுகிறார். ஆக்சன் காட்சிகளில் ஓகே.

நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ கண்களாலும் சில பாவனைகளை காட்டியிருக்கிறார்.

கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் இதில் வித்தியாசமாக மாறியிருக்கிறார். அவரின் கண்களை பார்த்தாலே பயமாக இருக்கும்.

படத்தின் பலமே அந்த குழந்தைகள் தான்.

குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித் ஆகியோரின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது. கன்னக்குழி சிறுமி அஷ்மிதாவை விரைவில் ஹீரோயினாக பார்க்கலாம். இவர் தற்போது அமலாவுடன் ‘கணம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வழக்கமான பேய் பட வரிசையில் இந்த படம் அமைந்தாலும்.. ப்ளாஷ் பேக் காட்சியில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சுனில் டிக்ஸன்.
திகில் படத்திற்கு ஏற்ற இசையை கொடுத்து முயற்சித்துள்ளார் கலையரசன்.

அதுபோல் பேய் படத்திற்கான ஒளிப்பதிவை கொடுத்துள்ளனர் கலேஷ் மற்றும் அலன். பேய் மிரட்டும் காட்சிகள் மற்றும் சாமியார்கள் அனைத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘தூநேரி’ பேய்வரிசையில் 100000000000-வது பேய்

Thooneri movie review and rating in Tamil

ரத்த வெறியர்களின் பாக்கி…; ராக்கி விமர்சனம்..

ரத்த வெறியர்களின் பாக்கி…; ராக்கி விமர்சனம்..

கதைக்களம்..

பாராதிராஜா ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர். இவரிடம் வேலை பார்ப்பவர் வசந்த் ரவி.

ஒரு கட்டத்தில் பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்பட வசந்தின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார் பாரதிராஜாவின் மகன்.

இதனால் ஆவேசமடையும் வசந்த்.. ஒரு கட்டத்தில் பாரதிராஜா மகனை கொல்கிறார். இதனால் சிறைக்கு செல்கிறர். பல ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையாகி திருந்தி வாழ முயற்சிக்கிறார் வசந்த்.

ஆனால் வசந்த் ரவியை பழிக்கு பழி வாங்க துடிக்கிறார் பாரதிராஜா.

இறுதியில் என்ன ஆனது? யார் வென்றார்கள்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இதுவரை பார்க்காத பாரதிராஜாவை இதில் பார்க்கலாம். கேங்ஸ்ட்ர் என்பதால் அலட்டிக் கொள்ளவில்லை. இருந்த இடத்தில் இருந்தே பழி தீர்க்கிறார். இவரின் மகனாக வருபவரும் நம் கவனம் பெறுகிறார்.

ரத்தம் வெறிக் கொண்டவராக வசந்த் ரவி. அம்மா தங்கை பாசம்.. தங்கை மகள் மீது நேசம் என வெரைட்டி காட்ட முயற்சித்துள்ளார். சில இடங்களில் மிஷ்கின் படங்களின் நாயகனை நினைவுப்படுத்துகிறார் வசந்த்.

ரோகினி, ரவீனா ரவி ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை. கேங்ஸ்டர் குருப்பீல் உள்ள பெரியவர் மிரட்டலாக இருக்கிறார்.

டெக்னிஷியன்கள்..

ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு தான் படத்திற்கு பெரிய பலம். தனுஷ்கோடியின் வறண்ட நிலங்களை படம் பிடித்துள்ளார்.

தர்புகா சிவாவின் இசை சில இடங்களில் ஓகே. பல இடங்களில் இரைச்சலை தருகிறது.

வழக்கமான பழிவாங்கும் கதையை வித்தியாசமாக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். ஆனால் இவ்வளவு ரத்த வெறி தேவையா? எனத் தெரியவில்லை. கழுத்தை அறுப்பதை அரை மணி நேரமாக காட்டுவது எல்லாம் நமக்கே பயமாக இருக்கிறது.

தனுஷ்கோடியில் நாட்டு மருந்து கடை இருக்கிறதா? எனத் தெரியவில்லை. பெரும்பாலும் அங்கு மீன் கடைகளே அதிகம் காணப்படுகிறது. மக்களுக்கு தேவை என்றால் ராமேஸ்வரம்தான் வருகிறார்கள். அதுசரி.. நாயகனுக்காக அங்கு கடை வைத்திருப்பார்கள் என நினைக்கிறோம்.

அதுபோல் கடைசி காட்சியில் மிஷின் கன் எங்கு இருந்து கொண்டு வந்தார் நாயகன் எனத் தெரியவில்லை. வில்லன் ஆட்களை எல்லாம் சுட்டுத் தள்ளிவிட்டார். நல்ல வேளை அவர்களையும் கழுத்தை அறுக்காமல் விட்டுவிட்டார்.

ஒரு சின்ன துப்பாக்கி காட்டி சுட்டாலே வில்லன் ஆட்கள் எல்லாம் ஓடி விடுவார்கள். ஹீரோ மிஷின் கன் வைத்து சுடுகிறார். அப்படியிருந்தும் வில்லன் ஆட்கள் ஹீரோவை நோக்கி ஓடி வருகிறார்களே… ஆச்சரியமான க்ளைமாக்ஸ்தான்..

ஆக.. இந்த ராக்கி.. ரத்த வெறியர்களின் பாக்கி…

Rocky movie review and rating in tamil

டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.? தள்ளிப் போகாதே விமர்சனம் 1.25/5

டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.? தள்ளிப் போகாதே விமர்சனம் 1.25/5

ஒன்லைன்… நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ல் தெலுங்கில் வெளியான ‘நின்னுக் கோரி’ பட ரீமேக் இது.

தன் கணவன் அனுமதியுடன் தன் முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து 10 நாட்கள் தங்க வைக்கும் மனைவி ஏன்..?

இந்தப் படம் டிசம்பர் 24ல் ரிலீசாகிறது என்பதே புரொடியூசர் மற்றும் புரோமோசன் டீமுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.

கதைக்களம்..

பரதநாட்டியம் பயிற்சி எடுக்கும் அனுபமா பரமேஸ்வரன் ஒரு நாள் அதர்வா போட்ட குத்தாட்டத்தை பார்த்து தான் அவரை டான்ஸ் மாஸ்டராக செலக்ட் செய்து குத்தாட்டம் கற்றுக் கொள்ள நினைக்கிறார்.

பின்னர் என்ன… நாளடையில் அதர்வா அனுபமா காதலிக்கிறார்கள்.

தன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எனவே இப்போதே கல்யாணம் செய்துக் கொள் என வற்புறுத்துகிறார் அனு.

ஆனால் தன்னுடைய பி.ஹெச்டி படிப்பு முக்கியம் என கல்யாணத்திற்கு மறுக்கிறார் அதர்வா.

வேறுவழியில்லாமல் அமிதாஷ் பிரதானை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகியார் அனுபமா.

சில மாதங்களுக்கு பிறகு அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்ள, நீ நடிக்கிறாய்.. உன் கணவனுடன் நீ சந்தோஷமாக இல்லை என அதர்வா சொல்கிறார்.

நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என அனுபமா சொல்கிறார். ஒரு கட்டத்தில் இது விவாதமாகி சவாலாக மாறுகிறது.

என் வீட்டில் வந்து 10 நாட்கள் தங்கி செல்.. என் கணவருடன் நான் சந்தோஷமாக இருப்பது உனக்கு தெரியும் என்கிறார். அதன்படி தன் காதலனை கணவர் அனுமதியுடன் தங்க வைக்கிறார் அனுபமா.

10 நாட்களில் அந்த வீட்டில் என்னென்ன நடந்தது.? சவாலில் வென்றது யார்? என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

ஸ்மார்ட்டாக இருக்கிறார் அதர்வா. ஆனால் நடிக்க வாய்ப்பு தரவில்லையா.? இல்லை இந்த படத்திற்கு இவ்வளவு நடிப்பு போதும் என நினைத்துவிட்டாரோ என்னவோ..? எக்ஸ்பிரசன்ஸ் பெரிதாக இல்லை. அதுவும் ஒரு காட்சியில் அழும்போது நமக்கு சிரிப்பு வருகிறது.

கண்களில் மை பூசி வண்ண வண்ண உடைகளில் வந்து கவர்கிறார் அனுபமா. ஆனால் காதலனை பிரியும் போது பெரிதாக உணர்வு இல்லை.

அனுபமாவின் கணவராக அமிதாஷ் பிரதான். வழக்கமான பாரீன் மாப்பிள்ளை கேரக்டர்.

ஆடுகளம் நரேன், காளிவெங்கட், வித்யூலேகா ராமன், RS சிவாஜி, என பலர் இருந்தும் காமெடி காட்சிகளோ..சென்டிமெண்ட காட்சிகளோ இல்லை. படத்தில் ஜெகன் இருந்தார்.. இருந்தும் காமெடி காணல.. பின்னர் அவரையும் காணல.

அதர்வா அண்ட் அனுபமா.? ஆல் யூ ஆல்ரைட்.. எப்படி இந்த கதைக்கு ஓகே சொன்னீங்க..

டெக்னீஷியன்கள்…

கோபி சுந்தர் இசையில் ஓரிரு பாடல் ஓகே. பின்னணி இசை கவரவில்லை.

ஒளிப்பதிவாளர் சண்முகம் சுந்தரம் தான் இந்த படத்தை பார்க்க நம்மை வைத்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாட்டு காட்சிகளில் நம்மை கவர்கிறார். தயாரிப்பு – மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷனஸ்

டைரக்டர் கண்ணா.. இன்னா கண்றாவி இது.?

புருசன் சரியில்லை என்றால் அந்த பெண் மீண்டும் காதலருடன் போகலாம். அதில் கூட ஒரு லாஜிக் இருக்கு. ஆனால் தன் மகள் கல்யாணத்திற்கு முன்பு ஒருவனை காதலித்தாள் என்பதை இப்போது அறியும் தந்தை கணவனை விட்டு விடு.. காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என முயல்வது எல்லாம் இன்னா கண்றாவியா இது..?

ஒருவேளை இவரின் மனைவி கல்யாணத்திற்கு முன் ஒருவனை காதலித்து இருந்தால் இவரு தன் மனைவியை அவளின் காதலனுடன் சேர்த்து வைப்பாரா.?

அதுபோல் தன் மனைவியின் முன்னாள் காதலனை தன் வீட்டில் ஒரு கணவர் அனுமதிப்பாரா.? இன்னய்யா படம் எடுக்கிறீங்க..? இந்த காட்சிகளை இந்தியாவில் எடுத்தால் சரியிருக்காது என்பதால் அந்த காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் சூட்டிங் வைத்துவிட்டீர்கள்.. இது தமிழ் படம் தானே..??

இந்த படம் டிசம்பர் 24 ரிலீஸ் ஆகுதுன்னு புரொடியூசருக்கு மட்டும் தெரிந்தால் போதுமா..? மீடியாக்களுக்கே தெரியலையே… சூப்பர்
புரோமோசன்.. வச்சி செஞ்சிருக்காங்க சாரே…

ஆக.. தள்ளிப்போகாதே.. தயவு செஞ்சு தள்ளிப் போய்டுங்க…

Thalli Pogathey review rating

குடும்ப பாசமும். வெண்பா பிரசவமும்..; ஆனந்தம் விளையாடும் வீடு விமர்சனம் 3.25/5

குடும்ப பாசமும். வெண்பா பிரசவமும்..; ஆனந்தம் விளையாடும் வீடு விமர்சனம் 3.25/5

ஒன்லைன்… அண்ணன் தம்பி பாசக்கதையை ஆனந்தமாக சொல்ல வந்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.

கதைக்களம்..

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பெரிய குடும்பம். இதில் பெரிய ஆம்பளை (ஜோ மல்லூரி). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன் உள்ளிட்ட மகன்கள்.

இதில் சரவணன் மகன் கௌதம் கார்த்திக், மகள் வெண்பா.

இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, செளந்தரராஜா உள்ளிட்ட மகன்கள். தன் அண்ணன் சரவணன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ளார் சேரன்.

இந்த குடும்பத்தின் மூத்த பெண் வெண்பாவுக்கு திருமணம் நடக்கிறது. சில மாதங்களில் கர்ப்பமாகிறார் வெண்பா.

வெண்பாவின் குழந்தை தங்கள் புதிய வீட்டில் பிறக்க வேண்டும் என நினைக்கிறார் சரவணன்.

எனவே தன் அண்ணனுக்காக தங்கள் குடும்ப நிலத்தை கொடுக்கிறார் சேரன்.

சரி.. நிலம் உன்னோடது. வீடு நான் கட்டுகிறேன். நாம் அனைவரும் இங்கேயே பெரிய வீடு கட்டி வசிக்கலாம் என்கிறார் சரவணன். அதன்படி வீடு கட்டும் பணி நடக்கிறது.

இந்த கட்டத்தில் குடிக்காரன்களான செல்லா மற்றும் சௌந்தர்ராஜா மூலம் அந்த குடும்பத்தை பிரிக்க நினைக்கிறார் வில்லன் டேனியல் பாலாஜி.

அதன்படி குடும்பத்தில் சண்டை பிறக்கிறது. சொத்தை பிரிக்க சொல்கின்றனர். வீடு கட்டும் பணி நிற்கிறது.

டேனியல் போட்ட திட்டம் என்ன..? அண்ணன் தம்பி சண்டை என்னாச்சு.? வீடு கட்டும் பணி நிறைவடைந்ததா.? வெண்பா பிரசவம் எங்கு நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கௌதம் மற்றும் சேரனை படத்தின் 2 நாயகர்கள் எனலாம். ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கௌதம் பாஸ் மார்க் பெறுகிறார். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளில் சொதப்பல். முகபாவனைகளே இல்லை.

மாபெரும் இயக்குனர் சேரன் இதில் முத்துப்பாண்டியாக நடித்திருக்கிறார். எதற்காகவும் அண்ணனை விட்டுக் கொடுக்காத இவரை பார்க்கும்போது இப்படி ஒருவர் கிடைக்கமாட்டாரா? என ஏங்க வைக்கிறார். அண்ணனுக்காக தன் மனைவியை அதட்டுவதும் ரசிக்க வைக்கிறது.

சேரனின் மனைவியாக சூசன். (மைனா புகழ்).. முதலில் அமைதியான சூசன் பின்னர் கணவனை மிரட்டுவதில் சூறாவளி சூசன்தான். (மைனா முதல் ஆனந்தம் விளையாடும் வீடு வரை..)

நாயகர்களை போல படத்தில் 2 நாயகிகள் எனலாம். ஷிவாத்மிகா மற்றும் வெண்பா…

நல்ல உயரம்.. நல்ல உடல்வாகு.. நல்ல நடனம் என ஷிவாத்மிகா கவர்கிறார்.

இந்த படத்தின் கதையே வெண்பாவின் பிரசவத்தை மையப்படுத்தியே நகர்ந்துள்ளது. எனவே செல்வி கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் வெண்பா. தாவணியிலும் சரி.. சேலையிலும் சரி.. அம்புட்டு அழகு.

எல்லா பிரச்சினைக்கு நான்தான் காரணம் என வெண்பா அழும்போது நம்மையும் அழவைத்துவிடுகிறார்.

சௌந்தர்ராஜா மற்றும் செல்லா (அழகர்) அண்ணன் கேரக்டர் சூப்பர். இருவரும் ரியல் குடிகாரர்களாக அசத்தியுள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்டு குடும்பத்தை பிரிப்பதில் வல்லவர்களாக தெரிகின்றனர்.

பல படங்களில் மிரட்டலாக பார்த்துள்ள சரவணன் இதில் சாந்த சொரூபியாக அசத்தியிருக்கிறார். இவரின் மனைவியாக மௌனிகா நடிப்பில் கச்சிதம்.

ஜோ மல்லுரி மற்றும் நக்கலைட் தனம் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் ஓகே.

டேனியல் பாலாஜி மற்றும் நமோ நாராயணன். திட்டம் போடுவதில் கில்லாடிகள். சிங்கம் புலி காமெடி பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை. இவரும் மொட்டை ராஜேந்திரன் செய்யும் டபுள் மீனிங் காமெடி தேவையில்லை.

மொட்டை ராஜேந்திரன் மதுமிதா மற்றும் டபுள் பொண்டாட்டி காட்சிகளை வெட்டியிருக்கலாம் எடிட்டர் ஸ்ரீகாந்த்.

மற்றொரு அழகு சித்தியாக சிந்துஜா.. அளவான நடிப்பு. மேஸ்திரியாக சூப்பர் குட் சுப்ரமணி. வாய்பேச முடியாத முனீஷ்ராஜ் நடிப்பு அருமை. இவரின் மனைவி சுபாதினி நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

ஸ்ரீபிரியங்காவை நாம் பார்ப்பதற்குள் மின்னல்போல காணாமல் போகிறார். பின்னர் வருகிறார். ஆனால் படம் முழுக்க பெரும்பாலும் ஆரஞ்ச் கலர் தாவணியில் வருகிறார் ஏனோ..? இவரின் அம்மாவாக சுஜாதா.

வெளிநாட்டில் வேலை செய்யும் ஐடி அண்ணனாக சினேகன். சித்தப்பா விக்னேஷ்க்கு பெரிதாக வேலையில்லை.

டெக்னீஷியன்கள்…

ஹரி தினேஷின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. பொர்ரா பாலபரணியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமளிக்கிறது. கிராமத்து பசுமையை ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.

சித்துகுமாரின் இசையில் பாடல்கள் பெரிய பலம். அதிலும் “சொந்தமுள்ள வாழ்க்கை…” பாடல் குடும்பங்களின் பேவேரைட் பாடலாக மாறும்.. ஆனால் இதே பாடல் 2-3 முறை வருவது தேவையா? சந்தோஷமான பாடல் சோகமான காட்சிகளிலும் வருகிறது. வரிகளை மாற்றி இன்னும் சோகமாக கொடுத்திருக்கலாம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஷிவாங்கி பாடியுள்ள.. என் உசுருப்புள்ள பாடல்.. அழகான மெலோடி.. இருவரின் குரல்கள் நல்ல தேர்வு.

கட்டி கரும்பே… சாங் டான்ஸ் சூப்பர். (தினேஷ் ராதிகா மாஸ்டர்ஸ் செம…)

இயக்கம் பற்றிய அலசல்…

இன்றைய நவீன காலத்தில் பல குடும்பங்களில் ஒரு குழந்தையே உள்ளது. எனவே பலருக்கு அண்ணன் தம்பி உறவுகளின் அருமை தெரிவது இல்லை. இந்த படத்தை பார்த்தால் பலருக்கு அதுபுரியும்.

இவ்வளவு ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை முழுவதுமாக காட்டியிருக்கலாம். சரவணன் விபத்து… கௌதம் சண்டை.. வெண்பா பிரசவம்.. என திடீரென முடித்திருப்பது கொஞ்சம் வருத்தம் தான்.

அதே சமயம் கூடி வாழ்ந்தால் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதையும் படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளுக்குள் விளக்கியுள்ளார் இயக்குனர். நந்தா பெரியசாமி.

படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது. பத்திர பதிவு… வலது கை விரல் சாட்சி கையெழுத்து ஆகியவை மட்டுமே ரசிக்க வைக்கிறது.

சிங்கம் புலி மொட்டை ராஜேந்திரனுக்கு ஆகியோர் இருப்பதால் படத்தில் கொஞ்சம் நகைக்சுவையை வைத்திருந்தால் குடும்ப சுவை கூடியிருக்கும்.

ஆக.. இந்த ஆனந்தம் விளையாடும் வீட்டில் என்றும் பேரின்பமே..

Anandham Vilaiyadum Veedu movie review and rating in Tamil

More Articles
Follows