விஷால்-மைக்கேல் ராயப்பனிடம் ஒரு கோடி கேட்டு சிம்பு வழக்கு

simbu and vishalஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை சிம்பு ரசிகர்களே ரசிக்கவில்லை என்பதால் படம் படு தோல்வியை அடைந்தது.

இந்த படத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும் பட தோல்வியை காரணம் காட்டி 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக நடிகர் சிம்பு புகார் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சிம்புவும், மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சத்துடன் செயல்படுவதாக சிம்பு புகார் கூறியுள்ளார்.

மேலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

எனவே விஷாலும், மைக்கேல் ராயப்பனும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிம்புவின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாக சிம்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்து கொள்வதில், தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post