முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி கோவையில் மே மாதம் மாநாடு

Rajinikanth stillsதமிழக முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி பிரமாண்ட மாநாடு…

கோவையில் மே மாதம் நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்!

‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார்.

கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.

இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது. தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனை மாநாடு என அந்த மாநாட்டை அரசியல் நோக்கர்கள் குறிப்பிடும் அளவுக்கு பெரும் வெற்றி மாநாடாக மாறியது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை ரஜினிக்காக நடத்த காந்திய இயக்கத்தின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் தலைவர் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டுக்கு ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டில் காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாநாடு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு

காந்திய மக்கள் இயக்கம்

Overall Rating : Not available

Latest Post