தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று 2023 டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இரவு 11 மணி அளவில் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சுந்தர் சி, குஷ்பூ, பிரபு, சத்யராஜ், விஜய் சேதுபதி, அர்ஜுன், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்
இந்த நிலையில் இன்று டிசம்பர் 29ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட சென்னை வந்த ரஜினிகாந்த் தற்போது காலை 10 மணி அளவில் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டு இருக்கும் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி விமான நிலையத்திலேயே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேட்டி அளித்திருந்தார் ரஜினிகாந்த்.
அந்த பேட்டியில்.. “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அண்மையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன்.” என பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
தற்போது சென்னை வந்த பிறகு அஞ்சலி செலுத்தி விட்டு ரஜினி பேசியதாவது…
கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் விஜயகாந்த்.. அவரைப் பற்றி சொன்னால் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் அந்தக் கூட்டத்தை எளிதாக சமாளிப்பவர் விஜயகாந்த்.
நான் இரண்டு முறை ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் சிக்கிய போது பவுன்சர்கள் இருந்தும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் அண்ணனை நான் பார்த்துக்கிறேன் என்று கூறி என்னை பத்திரமாக அழைத்து வந்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் நிறைய கோபப்படுவார் என்பது எல்லாருக்கும் தெரியும் மீடியாக்களிடம் கோபப்பட்டு இருக்கிறார் ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் இருக்காது. அவரின் கோபத்தில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும்.
எல்லாரிடமும் அன்பாக பழகுபவர் விஜயகாந்த். அன்பினால் நிறைய நண்பர்களை சம்பாதித்துள்ளார்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் விஜயகாந்த் என்று விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.
Rajini condolences message for Vijayakanth demise