நிதிநிலை அறிக்கைகள் வயிற்று வங்கிக்காக தயாரிக்கப்படனும் : வைரமுத்து

Lyricist Vairamuthu speech at Public event‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில் அவ்வையார் என்பவர் ஒருவரல்லர். ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர் அவ்வையார் என்ற பெயரில் இயங்கியிருக்கலாம். சங்ககால அவ்வையார் என்றும் நீதிநூல் அவ்வையார் என்றும் அவ்வை இலக்கியத்தை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும் ஆண்களே தீர்மானித்த காலத்தில், ஆண்களுக்கான ஒழுக்க விதிகளையும் எழுதிய பெண்ணியப் பெரும்புலவர் என்று சங்ககால அவ்வையைக் கொண்டாடலாம். நாடோ காடோ, பள்ளமோ மேடோ ஆடவர்கள் நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்த நிலம் நலம் பெறும் என்று சட்டம் வகுத்தவர் சங்ககால அவ்வை.

பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் பிற்கால அவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியது கற்றவரைச் சென்றடைந்த இலக்கியமானது. பிற்கால அவ்வையின் பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.

அவ்வையார் யாருக்கும் அஞ்சாத பெண்மணி. வள்ளுவரும் இளங்கோவும் கம்பனும்கூட வரையறுக்காத ஒரு கருத்தை அவ்வையார் சொல்லியிருக்கிறார். கற்பு என்றால் என்ன என்று எந்தப் புலவனும் வரையறுக்கவில்லை. அது பெண்ணின் உடலோடும் மனதோடும் சம்பந்தப்பட்டது என்று மட்டுமே கருதப்பட்டது.

அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று ஓரவஞ்சனையுடன் உணர்த்தப்பட்டது. அவ்வையார் ஒருவர்தான் கற்புக்கு இலக்கணம் சொன்னார். “சொன்ன சொல் மாறாத தன்மைதான் கற்பு” என்ற பொருளில் “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று ஓங்கி அடித்தார். ஆண் பெண் என்ற உடல்களைத் தாண்டி வாக்குத் தவறாத நேர்மைதான் கற்பு என்று மனிதகுலத்துக்கே பொதுவான அறமாக்கினார்.

அப்படிப் பார்த்தால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் அனைவரும் கற்புடையவர்களே, தவறினால் அனைவரும் கற்பிழந்தவர்களே என்பது அவ்வையின் அளவுகோல்.

அவ்வையார் போன்ற அறிவுஜீவிகளையும் கூழுக்கு அலையவிட்டதுதான் தமிழ் உலகம் செய்த தவறு. பாண்டிய மன்னனின் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அவ்வையார் பந்தியில் இடம்பிடிக்கமுடியாமல் பட்டினி கிடந்திருக்கிறார். “நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்று பாடியிருக்கிறார்.

அவ்வையார் காலத்திலிருந்து ஆண்ட்ராய்டு காலம் வரை நம்மால் பசியை ஒழிக்க முடியவில்லை. இன்னும் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்கிறார்களாம்.

ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லையாம். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப் பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில் உள்ள மூன்றாம் நாடு இந்தியாதானாம்.

பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “ஐயமிட்டு உண்” என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக இல்லாமல் வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்.

வருமானத்தை விடத் தன்மானமே பெரிது என்பார்கள் புலவர்கள். அதுதான் அவர்களுக்கு அறச்சீற்றம் தந்திருக்கிறது. அவ்வையார் அரசையும் கண்டித்திருக்கிறார்; ஆண்டவனையும் கண்டித்திருக்கிறார். கொடிய கணவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள் ஒரு நல்ல மனைவி.

இந்த இழிந்தவனுக்காக இவளைப் படைத்தாயே பிரம்மனே. உனக்கு நான்கு தலை; ஒருதலை ஏற்கனவே அற்றுப்போனது. இப்படித் தவறு செய்த உன்னைப் பார்த்தால் மிச்சமுள்ள மூன்று தலைகளையும் நானே கிள்ளி எறிந்திருப்பேன் என்று உரிமையோடும் உணர்வோடும் கடவுளையே கண்டித்தவள் அவ்வை.

இன்றைய காலத்திற்குப் பொருந்தாத அவ்வையின் கருத்துகளைப் புறந்தள்ளுவோம்; பொருந்தும் கருத்துகளைப் போற்றுவோம்; அவற்றை வாழ்க்கை படுத்துவோம். அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை; தமிழர்களின் தனிஉரிமை.

Lyricist Vairamuthu speech at Public event

Overall Rating : Not available

Latest Post