தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற
*நடிகர் கமல்ஹாசன் பேசும்போது,*
“அவரை முதல் நாளில் சந்தித்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதேபோல் தான் பெரிய நட்சத்திரம் ஆன பிறகும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். விஜயராஜ், விஜயகாந்த் இது இரண்டுக்குமே எனக்கு பெரிய வித்தியாசம் தெரியாமல் அவர் பார்த்து கொண்டதற்கு காரணம் நான் அல்ல.. அவர் தான்..
பல விமர்சனங்களை, அவமானங்களை தாங்கி மேலோங்கி வந்தவர். அதற்காக அவர் எந்த காழ்ப்பையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர்.
அது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். அவர் நட்சத்திரமாக ஆனார் என்பது அவரது உழைப்பில் வந்தாலும் ஆரம்ப நிலை நடிகர்களுக்கு, கடைநிலை நடிகர்களுக்கு அவர் ஒரு குரலாக இருந்தது அவர்கள் செய்த பாக்கியம்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அவர் சேர்த்த சொத்து என்றால் அதுதான்.
அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. 1998ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பணம் செலுத்தி படிக்க வசதி இல்லாத மூன்று இன்ஜினியரிங் மாணவர்களை பற்றிய செய்தியை கேள்விப்பட்டு அவர்களுக்கான படிப்பு கட்டணம், விடுதி செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த்.. 70-80களில் அந்த சமூக அரசியல் கோபங்களை எல்லாம் பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று அவருடைய நியாயமான கோபம். நியாயத்தைக் கேட்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்து ஆள் போல நாக்கை கடித்துக் கொண்டு துணிச்சலாக கேட்டு விடுவார். அது எந்த அரங்கமாக இருந்தாலும் பயப்பட மாட்டார்.
அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி இங்கே இருக்கும் நடிகர்கள்.
அவர் நடித்த முதல் படமான தூரத்து இடி முழக்கம் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்ல வேண்டிய ஒரு படம். தொடர்ந்து ஒரு கமர்சியல் ஹீரோவாக அவர் உருவெடுத்தது அவருடைய திறமை. நான் அவருடன் ஒரு படத்தில் சிறிய கெஸ்ட் ரோல்தான் நடித்தேன். அங்கு அவர் எனக்கு காட்டிய மரியாதை, அன்பு இன்றும் மனதில் ரீங்கரிக்கிறது.
தனக்கு பிடிக்காதவர்களை கூட கூப்பிட்டு பேசி விடுவார். அந்த தைரியம் அவருக்கு உண்டு. இந்த மாதிரியான செய்கைகளை நாம் பிரதிபலிக்கலாம்.. அவரிடமிருந்து காப்பி அடிக்கலாம். தவறில்லை.. பொதுவாக அவர் போல இல்லை என்று சொல்வது வழக்கம்.. ஆனால் அவர் போல இருக்க வேண்டும் என்று முயற்சியாவது செய்வோம்.. குட்பை விஜயகாந்த். குட்பை கேப்டன்” என்று கூறினார்.
Kamal Haasan speech about Captain Vijayakanth